? சத்தியவசனம் – இலங்கை. ??

? இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி வேத வாசிப்பு : மாற்கு 7:14-23

கொல்லும் பாவம்

பின்பு இச்சையானது கர்ப்பந்தரித்து, பாவத்தைப் பிறப்பிக்கும், பாவம் பூரணமாகும்போது, மரணத்தைப் பிறப்பிக்கும். யாக்கோபு 1:15

“சிறுவயதிலேயே அருகிலிருந்த மாணவனின் பேனா, பென்சிலை எடுத்து ஒளித்துவிட்டு, அவன் அழுவதைப் பார்த்து ரசிப்பேன். நான்தான் எடுத்தேன் என்று சொன்னால் அடி விழும் என்பதால் பேசாமல் இருந்துவிடுவேன். அப்போது இது களவு என்ற உணர்வு எனக்கு இல்லை. காலப்போக்கில் என்னையுமறியாமல் இதுவே எனக்குப் பழக்கமாகி விட்டது. என் களவுகள் பிடிபடாமல் இருந்ததால், எனக்கு உற்சாகமாகவும் இருந்தது. ஆனால், இப் பழக்கம் இன்று இப்படியொரு பாரிய களவிலும், கொலைக்குற்றத்திலும் என்னைக் கொண்டுவந்து நிறுத்தும் என்று நான் நினைக்கவேயில்லை” என்றான் ஒரு சிறைக் கைதி. “பாவம் கர்ப்பந்தரித்து” என்று பவுல் எழுதி வைத்திருப்பது இதைதான்.

பாவம் திடீரென தோன்றுகின்ற ஒன்றல்ல. மனதில் ஒன்றைக்குறித்து இச்சைப்பட்டு, அதைக்குறித்தே தொடர்ந்து நினைத்துக்கொண்டு, கற்பனையில் ரசித்துக்கொண்டிருந்தால், உடனடியாகவோ, காலம் கடந்தோ நாமே அதை செய்துவிடுவோம் என்ற உண்மையை பவுல் நமக்கு உணர்த்தியுள்ளார். பாவமும் நம்மைப்போலத்தான். மனிதன் எப்படி கர்ப்பத்தில் உருவாகி, பின்னர் பிறந்து, வளர்ந்து, வாழ்வை அனுபவித்து, மரித்துப்போகிறானோ, அப்படியே பாவமும் மறைவில் உருவாகி, உருவெடுத்து, வாழ்வு அனுபவிக்கத்தான் என்று ஏமாற்றி, முடிவில் நம்மை மரணத்துக்குள் இட்டுச்செல்லுகி றது. பறவைகள் நமது தலையின்மேல் பறப்பதை நம்மால் தடுக்கமுடியாதுதான்; ஆனால், அவை வந்து அமர்ந்து கூடுகட்ட நாம் இடமளிக்கலாமா? சிந்தனையில் பல நினைவுகள், தீதான கற்பனைகள், இச்சைகள் குறுக்கிடமுடியும். ஆனால், அவற்றை முளையிலேயே கிள்ளி எறிந்துவிடவேண்டும். இரண்டாம்முறை திரும்பிப் பார்த்தோமானால் ஆபத்து. தெரிந்தும், பாவம் நம்மை மேற்கொள்ள இடமளிப்பதேன்?

நாம் வேண்டாம் என்றாலும், ஆசையைத் தூண்டிவிடுகிற சீர்கேடான காரியங்கள், காட்சிகள் நம்மைச் சுற்றிலும் இன்று மலிந்துகிடக்கின்றன. நல்லவைபோல தோற்ற மளித்து, கவர்ந்து நம்மைச் சாகடிக்கின்றன. இதற்குத் தப்பி நமது சிந்தனைகளைத் தூய்மையாக வைத்திருப்பது கடினம்தான். ஆனால், சீர்கெட்ட நினைவு மனதில் தோன்றும்போதே, அவை பாவம் என்பதை உணர்ந்து, ஏற்று, தேவபாதத்தில் அவற்றைக் கொட்டி, “இயேசுவின் இரத்தத்தால் என்னை கழுவும்” என்று ஜெபித்து அவற்றை அகற்றிவிடுவதே சிறந்தது. இந்த நாளிலும் நமக்குள் என்னென்ன போராட்டங்கள் நம்மை அலைக்கழிக்கின்றதோ அவற்றை இப்போதே இனங்கண்டு, அதைப் பாவம் என்று உணர்ந்து, அவற்றை அகற்றிவிட தேவபாதம் அமருவோமாக. காலம் கடந்தால் பாவம் நம்மைக் கொன்றுபோடும். ஜாக்கிரதை. விழித்தெழுவோம்!

? இன்றைய சிந்தனைக்கு:  

இன்று பலர் வெளியே சொல்லமுடியாத உள்மனப் போராட்டங்களில் சிக்கித் தவித்து, தற்கொலைகூடச் செய்கிறார்கள். இதைக்குறித்து எனது கருத்து என்ன? எப்படி இதிலிருந்து தப்பிக்கலாம்?

? அனுதினமும் தேவனுடன்.

Solverwp- WordPress Theme and Plugin