? சத்தியவசனம் – இலங்கை. ??

? இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி: ஆதியாகமம்  17:1-22

தம்மை வெளிப்படுத்தும் வார்த்தை

நான் சர்வவல்லமையுள்ள தேவன். நீ எனக்கு முன்பாக நடந்துகொண்டு உத்தமனாயிரு. ஆதியாகமம் 17:1

சிறுவயதில் பெற்றோர் தங்கள் பிள்ளைக்குத் தங்களை எவ்விதத்தில் வெளிப்படுத்து கிறார்களோ, அதாவது பிள்ளை தன் பெற்றோரை எப்படி அறிந்துகொள்கிறதோ, அது அவன் வாழ்வு முழுவதும் அவனுடைய உள்ளத்தில் அச்சுப்போலவே படிந்திருக்கும்.சூழ்நிலை மாறினாலும், சிறுவயது நினைவுகளும் அனுபவங்களும் நம்முடன் கூடவே வருகிறது என்பது யதார்த்தம்.

ஆபிராமுக்கு 75 வயதாகிய நிலையில் கர்த்தர்: “புறப்பட்டுப் போ” என்று சொன்னார். நமது கணக்கின்படி அவர் ஒரு முதியவர். அக்காலத்தில்தான் கர்த்தரைச் சிறிது சிறிதாக அவர் அறிந்து வந்திருக்கக்கூடும். அதிலும் கர்த்தருடைய தாமதம் ஆபிராமைக் குழப்பி விட்டது. தன் சரீர பெலத்தால் முடியும் என்பதுபோல சாராயின் தூண்டுதலுக்கு இணங்கி, அடிமையினிடத்தில் ஒரு மகனைப் பெற்றதுமன்றி, வேறு மறுமனையாட்டிகளையும் சேர்த்துக்கொண்டார். இப்படியே ஏறத்தாழ 13வருடங்கள் ஓடிவிட்டன. கர்த்தரோ மௌனமாகவே இருந்தார். ஆபிராமின் சரீரம் இப்போது முற்றாக செத்துவிட்டது. வயது 99. இனி ஆபிராம் நினைத்தாலும் எதுவும் முடியாத நிலை. இப்போது கர்த்தர், உனக்கு ஏன் இவ்வளவு அவசரபுத்தி என்பதுபோல, “நான் சர்வ வல்லமையுள்ள தேவன், நீ உத்தமனாய் மாத்திரம் இரு” என்று ஆபிராமுடன் பேசுகிறார். கர்த்தரால் எதையும்எப்பவும் எப்படியும் செய்யமுடியும். முதிர்வயதிலும் ஒரு குழந்தையைப் பிறப்பிக்கத் தேவனால் முடியும். ஆபிராமுக்கும் மனைவிக்கும் புதிய பெயரை வெளிப்படுத்தி, ஒரு புதிய சந்ததியின் அத்திபாரத்தை காட்டி, தமது உடன்படிக்கையை வெளிப்படுத்தி, அதற்கான அடையாளத்தைக் காட்டினார் தேவன். தமது குணாதிசயத்தின் அடிப்படையில்,தமது கிரியைகளின் அடிப்படையில், தமது பிள்ளைகளுக்குத் தமது நாமத்தையும்அவர் வெளிப்படுத்தவே செய்தார் (யாத்.3:14, 6:2-2ஐப் பார்க்கவும்)

கர்த்தர் தம் பிள்ளைகளுக்கு தம்மை மறைத்து வைக்கிறவரல்ல. நாம் ஆண்டவரைச் சொந்த இரட்சகராக ஏற்றுக்கொண்ட நாட்களில், அவரை நாம் புரிந்துகொண்டதும், மகிழ்ச்சி ஆரவாரத்தில் குதித்ததுமான அனுபவங்களை மறந்துவிட்டீர்களா? அவர் நேற்றும் இன்றும் என்றும் சர்வவல்லவராகவே இருக்கிறார். அவரே தேவாதி தேவன். அவரது குணாதிசயங்களை, கிரியைகளை, இனி அவர் வரப்போவதை தேவவசனம் நமக்கு அறியத்தருகிறது. அந்த வார்த்தைக்கு உணர்வுள்ளவர்களாய் நாம் தேவனை அறிந்துகொள்வோமா? இன்று ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவில் தம்மை மனிதருக்கு ஏற்றபிரகாரம் முழுமையாக வெளிப்படுத்தியுள்ளார். அன்று ஆபிரகாம் தேவனுடைய சர்வவல்லமையை விசுவாசித்ததால்தான், மோரியா மலையில் வெற்றி பெற்றார். இன்று கல்வாரியில் வெளிப்பட்ட தேவ அன்புக்கு நமது பதிலுரை என்ன?

? இன்றைய சிந்தனைக்கு:

வேதாகமத்தை படித்துத் தியானிக்கும்போது, தேவன் தம்மை வெளிப்படுத்தியிருக்கிற வார்த்தைகளுக்கு எவ்வளவுதூரம் நான் கிரகித்து, அதற்கேற்ற பதிலுரை கொடுக்கிறேன்?

? அனுதினமும் தேவனுடன்.

Solverwp- WordPress Theme and Plugin