📖 சத்தியவசனம் – இலங்கை. 🇱🇰

📙 இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி வேத வாசிப்பு : யோவான் 16:29-33 கலா. 6:14-15

உலகத்திலிருந்து என்னை…

…உலகத்தில் உங்களுக்கு உபத்திரவம் உண்டு. ஆனாலும் திடன்கொள்ளுங்கள். நான் உலகத்தை ஜெயித்தேன் என்றார். யோவான் 16:33

பாடசாலை விளையாட்டுப் போட்டிகளில் திறமையுள்ள சிலரே பங்குபெறுவர். அவர்கள் வெற்றி பெற்றால் அவர்களுக்கு மாத்திரமல்ல, அந்த இல்லத்தைச் சேர்ந்த அனைவருக்கும், அதாவது போட்டிகள் எதிலும் பங்குபற்றாமல் இல்லத்தில் அங்கத்தவர்களாக இருக்கிற எல்லோருக்குமே அது வெற்றிதான்! ஆக, வெற்றியை ஒருவர் நாம் இந்த இல்லத்தவர்கள் என்ற உணர்வுடைய சகலருக்கும் அந்த வெற்றி உரியதே!

“உலகம்” என்ற சொல் வேதாகமத்தில் மூன்றுவிதங்களில் அர்த்தப்படுத்தப்பட்டுள்ளது. ஒன்று, தேவனால் படைக்கப்பட்ட இந்த உலகம்; அடுத்தது, உலகத்தில் வாழும் மக்கள்; இறுதியாக, உலகம் என்பது உலகத்துக்கடுத்த ஆசை இச்சை பாவகாரியங்களை உள்ளடக்கியுள்ளது. இந்த மூன்றாவது ஆபத்தானது. உலக ஆசை, உலக இன்பம், உலகத்தோடு ஒத்துப்போகாவிட்டால் அது நம்மை வெறுக்கும் என்ற பயம், …இந்தப் பட்டியல் நீண்டுகொண்டே போகும். “உலக முழுவதும் பொல்லாங்கனுக்குள் கிடக்கிறது” என்கிறார் யோவான் (1யோவா.5:19). நமது ஆவி பிரியும்வரைக்கும் இந்த விழுந்து போன உலகில்தான் நாம் வாழ வேண்டும். இந்த உலகமும் அதன் இச்சைகளும், நம்மை சோதனைக்குட்படுத்தினாலும், அந்தச் சோதனைகளே நம்மைப் பலப்படுத்துகின்றன. எப்படி? சோதிக்கப்படாத எதுவும் பொன்னாக விளங்காதல்லவா? ஆனால், எப்படி இந்த உலகத்தின் இன்பங்களை ஆசை இச்சைகளை இலகுவாக மேற்கொள்வது?

முதலாவது, நமது ஆண்டவர் உலகத்தை ஜெயித்துவிட்டார் என்ற உறுதி நமக்கு வேண்டும். “ஜெயித்தேன்” என்று தாம் சிலுவைக்குப் போகுமுன்னரே இயேசு சொல்லி விட்டார்(லூக்.16:33). ஆம், வனாந்தரத்தில் பிசாசு உலக ராஜ்யத்தைக் காட்டிச் சோதித்த போதே இயேசு இந்த உலகத்தை முற்றிலும் ஜெயித்துவிட்டார். பின்னர் நமக்கு என்ன பயம்? “அவரால் உலகம் எனக்குச் சிலுவையிலறையுண்டிருக்கிறது; நானும் உலகத் திற்குச் சிலுவையிலறையுண்டிருக்கிறேன்” (கலா.6:14) என்கிறார் பவுல். இந்த உலகம் அவருக்குக் கொடுக்க ஆயத்தமாயிருந்த சகலவற்றையும் பவுல் வெறுத்துத் தள்ளினார் என்றால், நாம் ஏன் தடுமாறவேண்டும்? மேலும், “கிறிஸ்துவினுடையவர்கள் தங்கள் மாம்சத்தையும் அதின் ஆசை இச்சைகளையும் சிலுவையிலே அறைந்திருக்கிறார்கள்” (கலா.5:24). இது நம் வாழ்விலே மெய்யானால், நாம் ஏன் இந்த உலகத்துக்குப் பயப்படவேண்டும்? “நம்முடைய விசுவாசமே உலகத்தை ஜெயிக்கிற ஜெயம்”. இந்தப் பொல்லாத உலகிலிருந்து நம்மை மீட்கும்பொருளாகத் தம்மையே கொடுத்து உலகத்தை ஜெயித்த ஆண்டவரை விசுவாசிக்கின்ற எல்லோருக்கும் அந்த ஜெயம் சொந்தமே. ஆகவே திடன்கொள்ளுங்கள். ஜெயித்தவரை சார்ந்துகொள்ளுங்கள்.

💫 இன்றைய சிந்தனைக்கு:

இந்த உலகத்திலிருந்து என்னை மீட்கும்பொருட்டுத் தம்மையே தந்த ஆண்டவருக்கு நான் உண்மையாயிருக்கிறேனா?

📘 அனுதினமும் தேவனுடன்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *