? சத்தியவசனம் – இலங்கை. ?? 

? இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி: ஆதியாகமம் 30:1-4 யாக்கோபு  4:4-10 

பெருமையும் பொறாமையும் 

ராகேல் தான் யாக்கோபுக்கு பிள்ளைகளைப் பெறாததைக் கண்டு, தன் சகோதரியின்மேல் பொறாமைகொண்டு… ஆதியாகமம் 30:1

கர்த்தருடைய அனுக்கிரகத்தால், லேயாள் பிள்ளை பேற்றினால், தேற்றப்பட்டாள். இது ஆறுதலளிக்கிற விடயமாக இருந்தாலும், மறுபுறத்தில் ராகேலின் வாழ்க்கை எச்சரிப்பை தருகிறது. யாக்கோபின் முதல் பார்வை ராகேலுக்கே கிடைத்தது. ஏழு வருஷங்களாக காத்திருந்த அவன் ஏமாற்றப்பட்டது லேசான விடயமல்ல. ஆனாலும், இன்னும் ஏழு வருடங்கள் யாக்கோபு தனக்காக உழைத்தான் என்பது ராகேலுக்குப் பெருமை தரும் விடயம்தான். யாக்கோபு தன்னிலேயே அதிக பற்று வைத்திருந்ததைக் கண்டு, சகோதரி என்றும் பாராமல் லேயாளை அற்பமாக எண்ணுமளவு ராகேல் பெருமையடைந்திருந்தாள். அவளது அழகும், சௌந்தரியமும் பெருமைக்கு மெருகூட்டின. ஆனாலும் அவள் மலடியாயிருந்தாள். அவளது பெருமைக்கு இது ஒரு பேரிடி. ஆத்திரமும் அஞ்ஞானமும் அவளது கண்களை மறைக்க, பொறாமைத் தீயும் சேர்ந்துவிட, யாரிடம் முறையிட வேண்டும் என்பதையும் மறந்து, ‘எனக்குப் பிள்ளை தாரும், அல்லது நான் சாகிறேன்” என்று கணவனைச் சாடுகிறாள். இது ஆசைக் கணவனை சற்றுக்கோபப்படுத்தினாலும், அவள் கர்ப்பத்திற்காக குறுக்குவழிகளை பின்பற்றினாள். இறுதியில் சுயமுயற்சி, பொறாமை பெருமை யாவும் மறந்து ஓய்ந்தபின்பே, தேவன் ராகேலை நினைத்தருளினார். பெருமையும் பொறாமையும் நமக்கு எதுவித நன்மையும் தராது.

மனித தயவும் நேசமும் ஆதரவும் நமக்கிருக்கலாம். பிறரைவிட நாம் கவர்ச்சி மிகுந்த புறத்தோற்றம் உடையவனாக, உடையவளாக இருக்கலாம். நம்மையே பிறர் அதிகமாக விரும்பலாம். ஆனால் இந்த அழகும் ஆதரவும் கர்த்தராலே கிடைக்கிறது என்பதை மறப்பதுதான் நம்மைக் குழிக்குள் தள்ளிவிடுகிறது. மனிதனுடைய கண்களில் தயவை ஏற்படுத்துகிறவரும் கர்த்தரே. அப்படியிருக்க நாம் வீண்பெருமை கொள்வது எப்படி? அதேசமயம், சிறுமைப்பட்டவன், அதிலும் நம்மால் அற்பமாய் எண்ணப்படுகிறவன் கர்த்தரால் உயர்த்தப்படும் போது நமக்கு ஏன் பொறாமை? அவனை உயர்த்துவது  கர்த்தர். ‘தேவன் பெருமையுள்ளவர்களுக்கோ எதிர்த்து நிற்கிறார். தாழ்மையுள்ளவர் களுக்கோ கிருபை அளிக்கிறார்” (யாக்.4:6).

தேவபிள்ளையே, நமது தேவைகளுக்காக, குறைவுகள் தீர்க்கப்பட நாம் முதலாவது  தேவனைத் தேடுவோம். மனுஷரை நாடித்தேடுவதையும், மூளைக்கு எட்டிய சுயமுயற்சிகளையும் விட்டுவிடுவோம். நமக்குள் தேங்கியிருக்கும் பெருமையையும் பொறாமையையும் அறிக்கையிட்டு நம்மை இன்றே தேவ சமுகத்தில் தாழ்த்துவோம். மனுஷர் நம்மை தாழ்த்தினாலும், எல்லாவற்றையும் விட்டு நம்மை வெறுமையாக்கிக் கர்த்தரைச் சார்ந்து கொள்ளும்போது, கர்த்தர் தகுந்தவேளையில் நம்மை நிச்சயம் உயர்த்துவார்.

? இன்றைய சிந்தனைக்கு:

நான் பெருமைகொள்ளுமளவுக்கு என்னிடத்தில் என்னதான் இருக்கிறது? தேவகிருபைக்கு முன்பாகத் தாழ்மையுடன் பணிவேனாக. கர்த்தரின் சித்தப்படி நடக்க என்னை ஒப்புக்கொடுப்பேனா!


? எமது விலாசம்
Back to the Bible (Sathiyavasanam),
120 A, Dharmapala Mawatte, Colombo 7, Srilanka.
Email: sathiyavasanam@backtothebible.lk
website: Backtothebible.lk  |  www.Sathiyavasanam.lk
Facebook: www.fb.com/sathiyavasanam
Call: 011-4691500 | 011- 4691532

Solverwp- WordPress Theme and Plugin