? சத்தியவசனம் – இலங்கை. ??

? இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி: ஆதியாகமம் 7:13-24

உள்ளேயா? வெளியேயா?

அப்பொழுது கர்த்தர் அவனை உள்ளேவிட்டுக் கதவை அடைத்தார். ஆதியாகமம் 7:16

‘நாட்டில் இனக்கலவரம் உச்சத்தை அடைந்திருந்த சமயம் அது. நாலாபக்கமும் கூக்குரல் சத்தம். என்ன செய்வதென்று திகைத்து நின்றபோது, திடீரென்று நமது அயல்வீட்டு சகோதரர் பின்பக்கத்தால் குதித்து வந்து, நமது குடும்பத்தவர் அனைவரையும் இழுத்துப்போய், தன் வீட்டில் பழைய சாமான்கள் வைக்கப்பட்டிருந்த அறைக்குள் தள்ளி கதவை அடைத்துவிட்டார். வெளியே தட்டும் சத்தம் கேட்டது. ‘நீங்கள் தேடுகிறவர்கள் அதோ, அந்தப் பக்கம்தான் ஓடுகிறார்கள்” என்று வந்தவர்களை இவர், திசைதிருப்பிவிட்டதோடு நீரும் ஆகாரமும் தந்து, ஏற்ற நேரத்தில் பத்திரமாகக் கப்பலில் ஏற்றி அனுப்பிவிட்டார்” என்று ஒரு வயோதிபர் தேவனுக்கும் அந்த நபருக்கும் மனதார நன்றி சொன்னார்.

கர்த்தருடைய வார்த்தையின்படியே செய்துமுடித்த நோவாவை தேவன் கவனித்தார்.’பூர்வ உலகத்தையும் தப்பவிடாமல் நீதியைப் பிரசங்கித்ததையும்” (2பேது.2:5) கண்டார்.

தான் மாத்திரமல்ல, மற்றவர்களையும் அழிவினின்று காப்பாற்ற நோவா முயற்சித்தார். ஆனால் நடந்தது என்ன? நோவா சகலத்தையும் செய்துமுடித்த பின்னர், ஜீவ சுவாச முள்ள ஜீவஜந்துக்களும் கர்த்தர் சொன்ன கணக்கின்படியே பேழைக்குள் வந்தன. நோவாவின் குடும்பத்தவரும் ஒருவர்விடாமல் பேழைக்குள் சென்றுவிட்டனர். யாரும் மறுபேச்சின்றி பேழைக்குள் சென்றதில், குடும்பத்தில் நோவாவின் தலைமைத்துவம் எவ்வளவு மேன்மையாயிருந்தது என்பது தெளிவு. ‘அப்பொழுது கர்த்தர் அவனை உள்ளேவிட்டு கதவை அடைத்தார்.” சகலத்தையும் அறிந்த தேவன், கதவை அடைத்தார். உயிர்கள் யாவும் மாண்டன. பேழையிலிருந்தவை காப்பாற்றப்பட்டன.

தேவனுடைய அன்பும் இரக்கமும் கருணையும் எத்தனை பெரியது! அன்று தேவன் தமது படைப்பின் வித்துக்களைக் காப்பாற்றினார். இது சரித்திரம். இன்றும் உலகம் ஒரு மகா அழிவை நோக்கி உருண்டுகொண்டிருக்கிறது என்ற அறிவு எல்லோருக்கும் உண்டு. அன்று, ஒரு நூறு ஆண்டு அறிவித்தல்@ இன்றைக்கோ 2000ஆண்டுகளாக எச்சரிப்பு விடுக்கப்பட்டு வருகிறது. நோவா காலத்து அக்கிரமத்திலும் பார்க்க இன்று பதின்மடங்கு பாவம் தலைவிரித்தாடுகிறது. கர்த்தருடைய பிள்ளைகள் நாமே, எது சரி, எது தேவை என்பதில் தடுமாறுகிறோம். தேவன் நம் அனைவரையும், நமது செயல்கள் சிந்தனைகள் யாவையும் அவதானித்துக்கொண்டே இருக்கிறார். அழிவுக்குத் தப்பித்துக் கொள்ளும் பேழையும் 2000வருடங்களாக ஆயத்தமாக இருக்கிறது. நிச்சயம் கர்த்தருடைய அந்த நாள் வரும். அழிவுக்கு முன்பாக, கர்த்தர் தம்முடையவர்களை நிச்சயம் தம்முடன் கூட்டிச்சேர்ப்பார். கதவுகள் அடைக்கப்படும். பின்னர் அது திறப்படாது. கதவு அடைக்கப்படும்போது நான் எங்கே இருப்பேன். உள்ளேயா? வெளியேயா? 

? இன்றைய சிந்தனைக்கு:

இது மனசாட்சியின் காலமுமல்ல, பிரமாணங்களின் காலமும் அல்ல, இது கிருபையின் காலம். ஆக, தேவஎச்சரிப்புப் பெற்ற நாம், நம் இரட்சிப்பை மனதிற்கொண்டு ஆத்துமாவைக் காத்துக்கொள்வோமா?

? எமது விலாசம்
Back to the Bible (Sathiyavasanam),
120 A, Dharmapala Mawatte, Colombo 7, Srilanka.
Email: sathiyavasanam@backtothebible.lk
website: Backtothebible.lk  |  www.Sathiyavasanam.lk
Facebook: www.fb.com/sathiyavasanam
Call: 011-4691500 | 011- 4691532

? அனுதினமும் தேவனுடன்.

Comments (19)

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *