? சத்தியவசனம் – இலங்கை. ??

? இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி: மத்தேயு 23:10-14

பரிசேயராகிவிட்டோமோ!

ஏனெனில் தன்னை உயர்த்துகிறவனெவனும் தாழ்த்தப்படுவான், தன்னைத் தாழ்த்துகிறவன் உயர்த்தப்படுவான் என்றார். லூக்கா 18:14

எந்த அசுத்தங்களும், தொற்றுக்களும் நம்மில் ஒட்டிவிடாதபடி முகக்கவசம் அணிந்து தான் ஆலயத்துக்குள்ளேயே நுழைகிறோம். கைகளை செனிட்டைசர், சோப் போட்டுக் கழுவுகிறோம். ஈரமாக்கப்பட்ட கால்துடைப்பத்தில் கால்களைத் துடைத்துவிட்டு ஆலயத்துக்குள் மிகவும் சுத்தமானவர்கள்போலவே பிரவேசிக்கிறோம். உள்ளேயும் பிறரிலிருந்து நமக்கு எதுவும் தொற்றிவிடாதபடிக்குத் தள்ளியே உட்கார்ந்து கொள்ளுகிறோம். இவைகள் எல்லாமே எமது வெளிச்சத்தத்தையே பேணுகிறது. ஆனால், ஆலயத்துக்குள் செல்லும்போதும், வெளியே நடமாடும்போதும் ஆண்டவர் நமது இதய சுத்தத்தைப்பார்க்கிறாரே, அதை உணருகிறோமா!

அன்று பரிசேயர், வேதபாரகரைப் பார்த்து இயேசு, ‘மாயக்காரரே” என்றே அழைத்தார்; காரணம், அவர்களுடைய வாழ்க்கையே மாய்மாலம் நிறைந்து காணப்பட்டது. அவர்களுடைய பரிசுத்தம், வெளிவாழ்விலும், மாய்மாலப் பேச்சிலும், செயல்களிலும் தங்கியிருந்ததேயொழிய அவர்களுடைய உள்ளான வாழ்வு எப்போதும் தேவனுக்குத் தூரமாகவே இருந்தது. அதனால்தான் ஆண்டவர் பல தடவைகளிலும் அவர்களதுமாய்மாலமான வாழ்வைக்குறித்துக் கண்டித்து உணர்த்துவதைக் காண்கிறோம்.

அவர்கள் தங்களைப் பெரியவர்களாகக் காட்டிக்கொள்ள எத்தனித்தார்கள். இயேசுவோ, தங்களை உயர்த்துகிறவர்கள் தாழ்த்தப்படுவார்கள், தங்களைத் தாழ்த்துகிறவர்களே உயர்த்தப்படுவார்கள் என்பதை அவர்களுக்கு உணர்த்த முனைகிறார். அவர்கள் தங்களை உயர்த்தி தாங்கள் குருக்கள் என்று அழைக்கப்படுவதற்கு விருப்பமுடையவர்களாய் இருந்தனர். ஆண்டவரோ கிறிஸ்து ஒருவரே உங்களுக்குக் குருவாக இருக்கிறார் என்று சொல்லுவதை அவர்கள் ஏற்கத் தயாராக இருக்கவில்லை.

இந்தத் தபசு காலங்களில் நம்மிலுள்ள, தேவன் வெறுக்கிறதான காரியங்களை இனங்கண்டு அவற்றை எம்மைவிட்டு அகற்றுவோம். தேவனுக்குப் பிரியமானதைச் செய்யபிரயாசப்படுவோம். அவர் வார்த்தைக்கு வாழ்க்கையில் முக்கியத்துவம் கொடுப்போம்.

நமது வாழ்க்கையிலிருந்து பரிசேய கொள்கைகளை அகற்றுவோம். இருதய சுத்தத்தை வாஞ்சிப்போம். ஆண்டவர் இருதயத்தைக் குறித்துச் சொன்னபோது, இருதயத்துக்குள் இருந்தே பொல்லாத சிந்தனைகளும், வேசித்தனங்களும், காமவிகாரமும் அனைத்துப் பாவங்களும் உருவெடுக்கிறது என்கிறார். ஆகவே, நமது இருதயத்தைப் பரிசுத்தமாய்வைத்திருப்பதே முக்கியமானதாகும். நாம் வெளிச்சுத்தத்தைப் பெரிதுபடுத்தி இருதயத்தைத் திருக்குள்ளதாக வைத்திருந்தால் நாமும் பரிசேயராகிவிட்டோம் என்பதில் சந்தேகமேயில்லை. எல்லாவற்றைப் பார்க்கிலும் இருதயமே திருக்குள்ளதும் மகாகேடுள்ளதுமாய் இருக்கிறது; அதை அறியத்தக்கவன் யார்? எரேமியா 17:9

? இன்றைய சிந்தனைக்கு:

உள்ளும் புறமும் பரிசுத்தப்படும்படி தேவபாதத்தில் தினமும் தரித்திருப்போமா! நம்மைப் பரிசுத்தப்படுத்துகிறவர் தேவன் ஒருவரே.

? அனுதினமும் தேவனுடன்.

Solverwp- WordPress Theme and Plugin