? சத்தியவசனம் – இலங்கை. ??

? இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி: யோவான் 1:1-5

வார்த்தை

ஆதியிலே வார்த்தை இருந்தது. அந்த வார்த்தை தேவனிடத்திலிருந்தது. அந்த வார்த்தை தேவனாயிருந்தது. யோவான்.1:1

“இவர், சொன்ன வார்த்தை மாறவேமாட்டார்” என்று நாம் பேசுவதைக்குறித்து யாராவது சாட்சி சொல்லியிருக்கிறார்களா? வார்த்தை ஒன்று, அதற்குத்  னிசேர்க்கும்போது பேச்சாக வெளிவருகிறது. ஆம், சொல்லும் சத்தமும் இல்லையானால், இந்த உலகம் எப்படி இருந்திருக்கும் என்று கற்பனை செய்யமுடிகிறதா? வார்த்தை மகா வல்லமை மிக்கது! பேசமுடியாதவர்களுக்காக சத்தம் இல்லாத வார்த்தைகளுக்கு சைகைகள் உண்டு. இந்த வார்த்தைதான் நம் வாழ்வுக்கு ஒரு அர்த்தத்தைக் கொடுக்கிறது.

எபிரெய வேதநூலில் “வார்த்தை” என்பது படைப்புடனும், தீர்க்கர்கள் மூலமாகக்கொடுக்கப்பட்ட செய்திகளுடனும், தேவனுடைய பரிசுத்தம் நீதி விளங்கும் காரணிகளாகவும் கருதப்பட்டது. ஆனால் கிரேக்கரோ, இந்த உலகத்தை ஆளுகிற ஒன்றாகவே வார்த்தையைக் கண்டார்கள். யூதருக்கு தேவனுடைய இருதயத்தை வெளிப்படுத்து கின்றதாக இது இருந்தபோதும், கிரேக்கருக்கோ மனித மனதின் நினைவுகளின் வெளிப்பாடுகளாகவே தெரிந்தது. ஆனால் யோவானோ, “வார்த்தை” என்னும்போது அவர்,”இயேசுவையே” குறிப்பிடுகிறார். இயேசு யோவானால் அறியப்பட்டவரும், அன்புநிறைந்த ஒரு மனிதராக வாழ்ந்திருந்தாலும், அவரே இந்தப் பிரபஞ்சத்தின் படைப்பாளியும், தேவனுடைய இறுதி வெளிப்பாடும், தேவ பரிசுத்தத்தின் முழுமையான பிரதிபலிப்புமான வர் என்பதை யோவான் தெளிவாகப் புரிந்துகொண்டிருந்தார். ஆக, இயேசுவின் வாழ்க்கை வரலாற்றை அல்ல, மாறாக அவரது மகிமையை, அவரே தேவனுடைய குமாரன் என்பதை வெளிப்படுத்துவதாகவே யோவான் சுவிசேஷத்தை எழுதியுள்ளார். இன்றுநாம் இயேசுவை யாராகக் காண்கிறோம்?

“ஆதியிலே வார்த்தை இருந்தது, அந்த வார்த்தை தேவனிடத்திலிருந்தது, அந்த வார்த்தை தேவனாயிருந்தது” இவரே கிறிஸ்து. “அந்த வார்த்தை மாம்சமானது” என்பதை யூதராலும் கிரேக்கராலும் நிராகரிக்கப்பட்டது. யோவானுக்கோ வார்த்தையைக் குறித்தபுரிந்துணர்வானது, இயேசு கிறிஸ்துவைக்குறித்த நற்செய்தியாயிருந்தது. இன்று இந்த வார்த்தை நமக்கு என்னவாக இருக்கிறது? சிருஷ்டிப்பிலே தேவனோடிருந்த அந்த வல்லமைமிக்க வார்த்தையே, மாம்சமாகி நம் மத்தியிலே வாசம்பண்ணினார் என்றால், அந்த வார்த்தையாகிய இயேசுவை நாம் மகிமைப்படுத்துவது மெய்யென்றால், இந்த வார்த்தை நமது வாழ்வில் எந்த இடத்தை வகிக்கிறது? பிரியமானவர்களே! “வார்த்தை” – “அவர் இயேசு!” இந்த இயேசு எனக்கு யார்? மாம்சமாகி வந்த வார்த்தையாகிய இயேசு பேசிய வார்த்தைகளை நாம் விசுவாசிக்கிறோமா? இந்த வார்த்தை நம்மை உருவாக்க, பாவத்தோடு போராடிக்கொண்டிருக்கின்ற மக்களுக்கு புதிய வாழ்வின் வழியைக் காட்ட உதவுகிறதே. நமது வார்த்தைகளும் அவ்வாறே இருக்கட்டுமே!

? இன்றைய சிந்தனைக்கு:

“தேவனாயிருந்து, தேவனிடத்திலிருந்து வந்த வார்த்தையே கிறிஸ்து” என்று விசுவாசிக்கின்ற எனது வாழ்வில், கிறிஸ்துவும் அவரது வார்த்தையும் உண்டா? அதை நான் பிரதிபலிக்கிறேனா?

? அனுதினமும் தேவனுடன்.

Solverwp- WordPress Theme and Plugin