📖 சத்தியவசனம் – இலங்கை. 🇱🇰

📙 இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி வேத வாசிப்பு: 1 இராஜாக்கள் 8:54-62

வாக்குமாறாத தேவன்!

தாம் வாக்குத்தத்தம் பண்ணியபடியெல்லாம் தம்முடைய ஜனமாகிய இஸ்ரவேலுக்கு இளைப்பாறுதலை அருளின கர்த்தருக்கு ஸ்தோத்திரம்… 1இராஜாக்கள் 8:56

இப் புதிய வருடத்திலும் ஒரு மாதத்தை வெகு சீக்கிரமாகவே கடந்து இன்னுமொரு மாதத்துக்குள் வந்துவிட்டோம். கடந்த நாட்களில் எத்தனை இன்னல்கள், முடக்கல்கள்! ஆனாலும் நம்மையெல்லாம் இம்மட்டும் நடத்திய தேவன் இன்னமும் நடத்துவார், வாக்கில் மாறாத கர்த்தர் நம்மோடு இருப்பார் என்ற நம்பிக்கையோடு தைரியமாக முன்செல்வோமாக.

தன் தகப்பன் இறந்த செய்தி கேட்டுப் பதறிவிட்டான் மகன். ஒரு கைகடிகாரத்திற்காக அவருடன் சண்டைபோட்டது, “சரி” என்று கண்ணீரோடு அவர் வாக்களித்தது யாவும் கனவுபோல இருந்தது. வீட்டுக்கு ஓடியவனை வாசலிலே நின்ற தாயின் கைகள் நிறுத்தின. அவளது கையில் இருந்த மடித்த கடதாசியை வாங்கியவன் அவசரமாகப் பிரித்தான். கைக்கடிகாரம் ஒன்று அவனைப் பார்த்துச் சிரித்தது. கதறி அழுதான் மகன். “மகனே, உனக்கு வாக்குப்பண்ணியதை வாங்குவதற்காக உன் அப்பா இரவு பகலாக உழைத்தார். பணத்தைப் பெற்று இதையும் வாங்கிக்கொண்டு வீடு வரும் வழியிலே எதிர்பாராமல் விபத்துக்குள்ளாகிவிட்டார். “இக் கடிகாரத்தை என் மகனிடம் கொடுத்து விடுங்கள், என்று கூறிவிட்டு மரித்துவிட்டார்” என்றாள் தாய். “அப்பா” என்ற அவனது கதறல் யாவரையும் அசைத்துவிட்டது.

ஒரு சாதாரண தகப்பன் தனது சொல்லைக் காப்பாற்றுவதில் இத்தனை உறுதியாக இருப்பாரானால், நமது பரம பிதா எப்படியிருப்பார்? ஒரு குழந்தைகூட இல்லாத நிலையில், “உன் சந்ததியார் நானூறு வருடங்கள் உபத்திரவப்பட்டதும் அதன் பின்னர் கானானுக்கு வருவார்கள், இந்த தேசத்தை நான் அவர்களுக்குக் கொடுப்பேன்” என்று கர்த்தர் ஆபிராமிடம் கூறினார். இது நம்பக்கூடிய காரியமா? ஆனால் தேவனோ தமது வாக்கை ஒருபோதும் மறந்துவிடவில்லை. ஆபிரகாமுக்கு வாக்களித்தபடியும், மோசே மூலமாக உறுதிப்படுத்தியபடியும் கர்த்தர் தமது ஜனத்தை நடத்தினார். அவர்கள் எதிர்கொண்ட யுத்தங்கள் யாவையும் அவரே முன்னின்று நடத்தி, பாலும் தேனும் ஓடுகிற தேசம் என்று சொல்லுமளவுக்கு சகல வளங்களும் நிரம்பி கானானைக் கர்த்தர் தமது ஜனமாகிய இஸ்ரவேலுக்குச் சுதந்தரமாகக் கொடுத்து ஆறுதலையும் கட்டளையிட்டார். “அவருடைய நல் வார்த்தைகளில் எல்லாம் ஒரு வார்த்தையானாலும் தவறிப்போகவில்லை” என்று சாலொமோன் மாத்திரமல்ல நாமும் தைரியமாகச் சாட்சி கூறலாம். ஆபிரகாமை ஆசீர்வதித்தவர், இஸ்ரவேலுக்கு இளைப்பாறுதலைக் கட்டளையிட்டவர் தமது வாக்குப்படியே தாவீதின் வம்சத்திலே மீட்பை அருளியவர், தமது பிள்ளைகளாக அழைத்துக்கொண்ட நமது விஷயத்திலே பாராமுகமாக இருந்துவிடுவாரோ? ஒருபோதும் இல்லை.

💫 இன்றைய சிந்தனைக்கு:

நமது உள்ளங்கள் தடுமாறினாலும், தேவனின் வாக்குகள் தவறியதில்லை. அந்த வாக்குமாறாத தேவனுக்கு உண்மையாயுள்ளேனா?

📘 அனுதினமும் தேவனுடன்.

Comments (28)

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *