📖 சத்தியவசனம் – இலங்கை. 🇱🇰
📙 இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி வேத வாசிப்பு : யாக் 1:1-4
நிறைவுள்ளவராகும்படி…
…நீங்கள் பலவிதமான சோதனைகளில் அகப்படும்போது, …அதை மிகுந்த சந்தோஷமாக எண்ணுங்கள். யாக்கோபு 1:2,3
முன்னரெல்லாம் ஆண்டு நிறைவிலே பாடசாலையில் நமக்கு வகுப்பேற்ற பரீட்சை இருக்கும். அந்தப் பரீட்சை வந்தாலே நமது இருதயத் துடிப்பு அதிகரித்துவிடும். அடுத்த வகுப்புக்குத் தகுதிபெற்றதை ஆசிரியர் அறிவிக்கும்போது உண்டாகும் மகிழ்ச்சியே வேறு! ஆக, பரீட்சிக்கப்படாத எதுவும் தகுதிபெறமுடியாது என்பது தகுதிகாண் பரீட்சைகளில் மாத்திரமல்ல, வாழ்விலும் அதுவே உண்மை.
கடந்த மாதம் முழுவதும் நம்மைத் தற்பரிசோதனை செய்யவும், நமது நிலையை உணர்ந்து, நம்மைச் சரிப்படுத்தும்படி ஆவியானவர் கரத்தில் ஒப்புக்கொடுக்கவும் கர்த்தர் நம்மை நடத்தினார். ஆவியானவர் தூய்மைப்படுத்தும்போது சற்று வேதனையாக இருந்தாலும், முடிவு மகிழ்ச்சி அல்லவா! ஆனால் சோதனை என்பது சற்று வித்தியாசமானது. அது தானாகவும் நேரிடலாம்; நாமும் சோதனைகளை இழுத்துவிட்டுக்கொள்ளலாம். சோதனை வேறு, பரீட்சை வேறு. பரீட்சை நம்மை உயர்த்துவதற்கும், உறுதிப் படுத்துவதற்குமானது; ஆனால் சோதனை நம்மை விழுத்தவும் வேதனைக்குமானது. எதுவானாலும், எதையும் நமக்குச் சாதகமாகவும் பாதகமாகவும் ஆக்குவது நமது கைகளில்தான் இருக்கிறது. கர்த்தர் நம்மைப் பரீட்சிக்கும்போது அது நமக்கு மிகுந்த ஆசீர்வாதத்தையே கொண்டுவரும். அதற்காக நம்மை விழுத்தக்கூடிய சோதனைகளைக் கண்டு நாம் கலங்கவேண்டியதில்லை.
சகலமும் சுமூகமாகவும் நேர்த்தியாகவும் இருக்கும்போது பிறரில் அன்புகூருவதும் நன்மை செய்து மகிழ்ந்திருப்பதும் வெகு இலகு; ஆனால் அதே நபர்கள் நம்மை வேதனைப்படுத்துகையில், அதே அன்பை நம்மால் வெளிப்படுத்தமுடியுமா? அல்லது, ஆழத்திலுள்ள கோபமும் ஆத்திரமும்தான் வெளிப்படுமா? அழுத்தங்கள் மத்தியில் நாம் நடத்தப்படும் வரைக்கும் நமது உண்மையான குணாதிசயத்தின் ஆழத்தை நம்மாலேயே அறிந்துகொள்ளமுடியாது. எல்லா வலியிலிருந்தும் நம்மைக் காப்பாற்ற, அந்த வலியைக்கொண்டே நாம் பெலமடைய, வளர்ச்சியடையவேண்டும் என்றே கர்த்தர் விரும்புகிறார். ஆகவே, நம்மை விழுத்தக்கூடியதும், தேவனைவிட்டுப் பிரித்துவிடக் கூடியதுமான சோதனைகள் வரும்போது நாம் தடுமாறக்கூடாது. இது நமது விசுவாசத் திற்கு உண்டாகும் பரீட்சை. கவனிக்கவும் இது பரீட்சை. இந்தப் பரீட்சையின் பெறுபேறு, பொறுமை. பொறுமையில் நாம் நிலைத்திருந்தால் நம்முடன் இருக்கின்ற கர்த்தர், பிரச்சனையை விடுவிக்க உதவிசெய்வார், பெலன் தருவார். இப்போது நமது தெரிவு என்ன? சோதனைகளைக் குறித்து, இது நான் நிறைவை அடையும் வழி என்று மகிழுவேனா? அல்லது, துயரப்பட்டு, கிடைத்த தருணத்தை இழந்துபோவேனா?
💫 இன்றைய சிந்தனைக்கு: :
யாருடனாவது மனக்கசப்பு கோபம் விரோதம் இருந்தால், இப்போதே அவற்றை புறந்தள்ளி, இந்தப் பரீட்சையில் தேறும்படி ஆவியானவரின் உதவியை நாடுவேனா!
📘 அனுதினமும் தேவனுடன்.