? சத்தியவசனம் – இலங்கை. ?? 

? இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி: 1இராஜாக்கள் 18:25-39

?  வெறுமையான தெய்வங்கள்

ஆனாலும் ஒரு சத்தமும் பிறக்கவில்லை, மறுஉத்தரவு கொடுப்பாரும் இல்லை, கவனிப்பாரும் இல்லை. 1இராஜாக்கள் 18:29

ரால்ப் பார்ட்டன் என்பவர் ஒரு வெற்றிகரமான கேலிச்சித்திரக்காரர். ஆனால் அவர் ஒரு சீட்டு எழுதிவைத்துவிட்டு, தற்கொலை செய்துகொள்ள முடிவு செய்தார். அவர் எழுதி வைத்திருந்ததாவது: ‘எனது வாழ்வில் துன்பங்களே இல்லை; எண்ணற்ற நண்பர்கள் உண்டு. நான் பல வெற்றிகளை அடைந்துள்ளேன். நான் பல மனைவிகளை அனுபவித்துள்ளேன். நான் பல வீடுகள் மாறியுள்ளேன். இந்த உலகத்தின் பெரிய நாடுகள் அத்தனைக்கும் போய் வந்துள்ளேன். ஆனால் ஒவ்வொரு நாளும் 24 மணி நேரத்தையும் கழிப்பதற்கு வழிவகைகளைத் திட்டமிட்டுச் சலிப்படைந்துபோனேன். அதனால்  தற்கொலை செய்ய முடிவுசெய்துள்ளேன்” என்பதாகும். இவரைப்போல மாயையான உலகின் வெறுமையில் நம் நம்பிக்கையை வைப்போமானால் விளைவுகள் அதி பயங்கரமாகவே இருக்கும்.

பாகாலின் தீர்க்கதரிசிகளும் இப்படியேதான் இருந்தார்கள். அவர்கள் தங்களது வழிபாட்டில் பைத்தியம் பிடித்தவர்கள்போல் வெறிகொள்வதுண்டு. ஆனால் ஒரு பயனும் இல்லை. தங்கள் உடலைக் கீறி இரத்தம் சிந்தும் செயலைக்கூடச் செய்வார்கள். ஆனால் எந்தப் பயனையும் கண்டதில்லை. ஒரு சத்தமும் கேட்கவில்லை, ஒரு பதிலுரையும் வரவில்லை. அவர்களுடைய வேண்டுதல்களுக்குப் பதிலளிக்க எந்தக் கடவுளும் இல்லை. கடைசியில் அவர்கள் அனைவரது மரணத்துக்கும் அதுவே வழிவகுத்தது.  எலியா அவர்களைப் பரியாசம்பண்ணினாலும், அவன் ஒரு முக்கியமான சத்தியத்தை வெளிப்படுத்தினான். இந்த உலகம் தரக்கூடிய பணம், புகழ், நல்ல நேரங்கள் யாவும் வெறுமைதான்; இவற்றால் வாழ்க்கையில் ஏற்படும் வெற்றிடங்களை நிரப்ப முடிவதில்லை. ஏனென்றால் அவற்றுள் சாரம் இல்லை. அவற்றைப் பார்க்கும்போது, அவை உண்மையிலேயே சாரம் உள்ளதுபோலக் காணப்படும். ஆனால் வாழ்க்கையில் நெருக்கடிகள் தாக்கும்போது, அவை கரைந்துபோகும்; முடிவில் நமது நித்திய மரணத்துக்கு, தேவனிடமிருந்து நம்மைப் பிரித்துப்போட வழிவகுத்துவிடும். பாகாலின் தீர்க்கதரிசிகள் செய்த தவறை இன்று நாமும் செய்கிறோமா?

இயேசுவின் உயிர்த்தெழுதல், அவர் வெறுமை அல்ல, அவர் இருக்கிறார் என்பதைக் காட்டுகிறது. நாம் அவரைப் பற்றிக்கொள்ளும்போது எதற்கும் கவலைப்பட வேண்டியதில்லை. இயேசு உண்மையானவர் என்று அறிவுடன் தேவனுக்கு நன்றி கூறுவீர்களா? அவரிடத்திலிருந்து நாம் எப்போதுமே வெறுங்கையனாக வரப்போவதில்லை. நித்தியத்துடன் இணைந்து கொள்ளுவோம். இயேசுவைப் பற்றிப்பிடித்துக் கொள்ளுவோம். கிறிஸ்துவே நமது ஆண்டவரும் இரட்சகருமாயிருக்கிறார்.


? இன்றைய சிந்தனைக்கு:

நமது வாழ்க்கை வெறுமையாய் இருக்குமானால் அதை இயேசு கிறிஸ்துவைக் கொண்டு இன்றே நிரப்பிவிடுவோமாக.

? இன்றைய விண்ணப்பம்

இந்த தொற்றுநோய் பாதிப்பின் விளைவாக, ஒருவேளை குடும்பத்தில், தொழிலில், வருமானத்தில், அல்லது ஆரோக்கியத்தில் இழப்பை எதிர்கொள்பவர்களுக்காக ஜெபியுங்கள். கர்த்தருடைய ஆறுதலான பிரசன்னத்தையும், போதுமான பராமரிப்பினையும், மென்மையான வழிகாட்டுதலையும் அவர்கள் அனுபவிக்கும்படிக்கு மன்றாடுங்கள்.

⏩ இன்றைய தியானத்தை எழுதியவர் – டாக்டர் வுட்ரோ குரோல்

? அனுதினமும் தேவனுடன்.

எமது விலாசம்
Back to the Bible (Sathiyavasanam),
120 A, Dharmapala Mawatte, Colombo 7, Srilanka.
Email: sathiyavasanam@backtothebible.lk
website: www.Sathiyavasanam.lk | Backtothebible.lk
Facebook: www.fb.com/sathiyavasanam
Call: 011-4691500 | 011- 4691532

Solverwp- WordPress Theme and Plugin