PDF MAY 14
? சத்தியவசனம் – இலங்கை. ?? 

? இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி: எரேமியா 43:1-13, 42:11-17

?  எங்கே இருந்தாலும்…

கர்த்தருடைய எல்லா வார்த்தைகளையும்
அவன் அவர்களுக்குச் சொல்லிமுடித்த பின்பு…
எரேமியா 43:1

எரேமியா வெளிச்சத்தில் நடந்த தேவமனிதர். தேவனைவிட்டு விலகிப்போவதால் வரக்கூடிய தாக்கங்களைப்பற்றிப் பயமில்லாமல் இஸ்ரவேலுக்கு அறிவித்தவர். அதனால் அவர் பொய்யன் என்றும், தேவனால் அனுப்பப்படாதவர் என்றும் புறக்கணிக்கப்பட்டார். பாபிலோனுக்குப் பயந்து எகிப்துக்குப்போக வேண்டாம் என்றும், தாம் கூடவே இருப்பதாகவும் கர்த்தர் எரேமியா மூலம் எச்சரித்தும், பிரபுக்கள் மக்களைத் தவறான வழியிலே நடத்தினார்கள். அப்படியே சகல ஜனங்களும் எகிப்துக்குப்போக புறப்பட்டபோது, எரேமியாவையும் அழைத்துச் சென்றனர். வேறுவழியின்றி எரேமியாவும் சென்றார். ஆனால் அவர் உள்ளமோ தேவனோடு இருந்தது. ஆகவே அங்கேயும், பாபிலோன் எகிப்தை அழிக்கும் என்றும், ‘சாவுக்கு ஏதுவானவன் சாவுக்கும், பட்டயத்திற்கு ஏதுவானவன் பட்டயத்திற்கும், சிறையிருப்புக்கு ஏதுவானவன் சிறையிருப்புக்கும் உள்ளாவான்’ என்றும் எரேமியா பயமின்றி எச்சரித்தார்.

தேவ எச்சரிப்பு இன்றும் நமக்கு கொடுக்கப்பட்டிருந்தும், சமுதாயத்தில் சில கீழ்ப்படியாத மக்களினால் வெளிச்சத்தின் பிள்ளைகளும் பாதிக்கப்படுகிறார்கள். இப்படிப்பட்ட ஒரு சூழ்நிலைக்குள்தான் தேவன் எரேமியாவை பாவித்தார். எரேமியாவும் பயமின்றி தேவனுடைய எச்சரிப்பைக் கூறுபவராக இருந்தார். எகிப்துக்குச் செல்ல நேர்ந்தபோதும், கர்த்தருக்காகத் தன்னுடைய வாயைத் திறக்க அவர் தயங்கவில்லை. நாம் வாழும் சூழ்நிலையும் கிட்டத்தட்ட அப்படிப்பட்ட ஒன்றுதான். இன்று தேவனுடைய வார்த்தையை கேட்கவே மனதில்லாத, கேட்டும் கீழ்ப்படிய மனதில்லாத ஒரு கூட்ட மக்கள் மத்தியில் தான் நாம் வாழுகிறோம். தேவன் நம்மை அவர்களுக்குள்ளேயே வைத்திருக்கிறார்.

அன்று எரேமியா சூழ்நிலையைக் கணக்கிடாமல் தேவனோடுள்ள தனது உறவைக் காத்துக்கொண்டது மாத்திரமல்ல, அவர்கள் அழிந்துபோகக்கூடாது என்ற ஆதங்கத்தால், தன்னுயிரையும் பாராமல் தேவசெய்தியைக் கொடுத்துக்கொண்டே இருந்தார். அதற்காக எரேமியா அழிந்துபோனாரா? இல்லையே! அப்படியானால் நாம் வாழுகின்ற இந்த சமுதாயத்தின் மத்தியிலே ஏன் நம்மால் தேவனுக்காக ஜீவிக்கமுடியாது? நம்மைச் சுற்றிலும் துன்பம், துக்கம், சண்டை, வன்செயல்கள், போர், பட்டினி, பஞ்சம், பழிவாங்கல், கொள்ளை நோய், இயற்கை அழிவுகள் என்று எத்தனை அழிவுகள்! இந்த அழிவில் அகப்படாமல் மக்களைக் காப்பாற்ற ஏன் நாம் வாயைத் திறக்கக் கூடாது? தேவனுடைய வசனத்தைக் கேட்டும் மக்கள் கீழ்ப்படியாமற் போகலாம். ஆனால் நாம் நமது பொறுப்பை நிறைவேற்றலாமே. வீணான வழிகளையும், வீணான மனிதரையும் விட்டுவிலகி, தேவனுடைய பாதையில் நடக்க முற்படுவோமா!

? இன்றைய சிந்தனைக்கு:

சூழ்நிலைகளுக்கு அப்பால் நின்று நம் தேவனைச் சேவிக்க நாம் ஆயத்தமா?
இக் கடைசி காலத்தில் எனது பொறுப்பு என்ன?

? இன்றைய விண்ணப்பம்

எமது சகலவித நிதித் தேவைகளையும் பூர்த்தி செய்யத் தேவையான நிதிகளை தொடர்ச்சியாக கர்த்தர் வழங்கும்படியாகவும், வரப்போகின்ற மாதங்களில் நாம் எவ்வாறு செயல்படுவோம் என்பதற்கும் எம்மை உந்துவிக்க தேவையானதைச் செய்திடவும் மன்றாடுங்கள்


⏩ இன்றைய தியானத்தை எழுதியவர் – இ. வஷ்னீ ஏனர்ஸ்ட். | 0094 771869710

? அனுதினமும் தேவனுடன்.

(உங்களது கருத்துக்களை அல்லது ஜெப தேவைகளை எமக்கு எழுதுங்கள். நன்றி.)

?‍♂️ Back to the Bible (Sathiyavasanam),
120 A, Dharmapala Mawatte, Colombo 7, Srilanka.
Email: sathiyavasanam@backtothebible.lk
website: www.Sathiyavasanam.lk | Backtothebible.lk
Call: 011-4691500 | 011- 4691532
Whats-app : 0771869710

Solverwp- WordPress Theme and Plugin