DF MAY 10
? சத்தியவசனம் – இலங்கை. ?? 

? இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி: அப்போஸ்தலர் 16:22-35

?  இருளுக்குள் இருந்தது போதும்!

ஆசியாவிலே வசனத்தைச் சொல்லாதபடிக்குப் பரிசுத்த ஆவியினாலே தடைபண்ணப்பட்டு… அப்போஸ்தலர் 16:6

கருவறைக்குள் அமைதியாயிருக்கின்ற ஒரு சிசுவினால், கருவறைக்கு வெளியே ஒளியும் நிறமுமுள்ள வேறொரு உலகம் இருப்பதை நம்பமுடியுமா? அந்த உலகைத் தான் பார்க்கவேண்டும், நடக்கவேண்டும், பேசவேண்டும் என்பதையெல்லாம் அது அறியாது. இப்படியாக கருவறைக்குள் முடங்கியிருக்கும் ஒரு சிசு கருவறையைவிட்டு வெளியே வரும்வரையிலும், கருவறைக்கு வெளியேதான் மெய்யான உலகம் உண்டு என்பதை அதனால் நம்பவும் முடியாது; அனுபவிக்கவும் முடியாது. இப்படித்தான் நாமும்; இருளுக்குள் சுகமாகத் தூங்குகிறோம். இதுதான் உலகம் என்று நம்புகிறோம். வெளிச்சத்திற்குள் வரும்வரைக்கும் வெளிச்சத்தின் தாற்பரியத்தை எப்படி உணருவது? இவ்வுலக வாழ்வின் சொகுசையும் சோம்பலையும்விட்டு வெளிவந்து, பரிசுத்த ஆவியானவரின் நடத்துதலுக்குட்படும் வரைக்கும் அதன் சந்தோஷத்தையும் நம்மால் அனுபவிக்கமுடியாது. அது கடினமாக இருந்தாலும், நம்பிக்கையோடு ஒப்புவிப்போமானால் அதன் பலனை நிச்சயம் காண்போம்.

சொகுசாய் படுத்திருந்த கருவறை, சிசுவை வெளியே தள்ளும்போது, சிசுவுக்கு சற்று கடினமாகவே இருக்கும். ஆனால் ஒரு சுதந்திரமான, அசைவாடத்தக்க, அழகான ஒரு வாழ்வினைக் காணும்போது அது எத்தனை மகிழ்ச்சியைத் தரும்! ஆனால் வெளியே வர சிசு தாமதமானால் அதன் விளைவு என்னவோ, அதேபோலவே, இருளிலிருந்து வெளியே புறப்படத் தாமதிக்கும் ஒவ்வொரு கணமும் நமக்கும் ஆபத்துத்தான்.

திட்டமிட்டபடி ஆசியாவிலே வசனத்தைச் சொல்லாதபடி ஆவியானவர் தடுத்தபோது பவுலுக்கும் சீலாவுக்கும் அதை ஏற்றுக்கொள்ள சற்றுக் கடினமாக இருந்திருக்கும். அதேசமயம் ஆவியானவருக்குக் கீழ்ப்படிந்து சென்றவர்கள், பிலிப்பி பட்டணத்திலே தொழுமரத்தில் வைத்துப் பூட்டப்பட்டபோது மனம் தடுமாறியிருக்க வேண்டாமா? இனி எல்லாம் முடிந்தது என்று நினைத்திருக்க மாட்டார்களா? ஆனால் அவர்களோ, எதைக் குறித்தும் கவலைப்படாமல் அழைத்தவரை அறிந்திருந்ததால் தேவனைத் துதித்தார்கள். அதனாலே ஒரு குடும்பமே இரட்சிக்கப்பட்டது. ஆம், சும்மா இருக்கும் மட்டும் நாம் எதையும் அனுபவிக்க முடியாது. தகுந்த தருணத்திலே வெளியே வரவேண்டும். பரிசுத்தாவியானவரின் நடத்துதலுக்குக் மறு கேள்வி கேட்காமல் கீழ்ப்படிய வேண்டும். அதற்கு நம்மை ஒப்புக்கொடுத்துப் பாருங்கள். அப்பொழுது தேவ வழிநடத்துதல் நமக்கு நிச்சயம் ஆச்சரியமான விளைவுகளையே தரும். பரிசுத்த ஆவியானவரின் சத்தத்திற்கு கீழ்ப்படியும் அனுபவம் சுகமானதே. கருவறைக்குள் படுத்துக் கிடந்தது போதும். எழுந்து வெளியேறுவோமாக!

? இன்றைய சிந்தனைக்கு:  வேளை வரும்போது எப்படி கருவறை சிசுவை வெளியேற்றுகிறதோ, அப்படியே ஆண்டவரும் நம்மை வெளியேற்றுகிறார். நாமும் கீழ்ப்படிவோமானால் மகிமையான காரியங்களை நிச்சயம் காணலாம்.

⏩ இன்றைய தியானத்தை எழுதியவர் – இ. வஷ்னீ ஏனர்ஸ்ட். | 0094 771869710

? அனுதினமும் தேவனுடன்.

(உங்களது கருத்துக்களை அல்லது ஜெப தேவைகளை எமக்கு எழுதுங்கள். நன்றி.)

Solverwp- WordPress Theme and Plugin