? சத்தியவசனம் – இலங்கை.

? இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி வேத வாசிப்பு : மத்தேயு 5:1-23

நான் தேவனுடைய பிள்ளையா?

சமாதானம் பண்ணுகிறவர்கள் பாக்கியவான்கள்; அவர்கள் தேவனுடைய புத்திரர் எனப்படுவார்கள். மத்தேயு 5:9

சமாதானத்துடன் வாழுவது வேறு, சமாதானம் பண்ணுவது வேறு. தனக்குள் சமாதானமாய் வாழாத ஒருவனால் சமாதானம் பண்ணமுடியாது. மேலும், சமாதானத்தை விரும்புவது வேறு, சமாதானம் பண்ணுவது வேறு. தங்கள் சுய வழிகளில் சமாதானத்தை உண்டாக்க முயற்சித்தால், அது விபரீத விளைவுகளைக் கொண்டுவரவும் கூடும். ஆக, நல்லதோ கெட்டதோ எந்த நிலையிலும் மனஅமைதியும், சகலமும் நன்மைக்கே என்ற மனநிலையுமே ஒருவனுக்கு சமாதானத்தைத் தரும். சமாதானத்தை மனிதன் தனக்குள் தானே உருவாக்கமுடியாது. இது பரிசுத்த ஆவியானவரினால் நமக்குள் உருவாக்கப்படுகின்ற கனி. இந்த சமாதானத்தைப் பெற்றவனே தானும் சமாதானமுள்ளவனாய் இருந்து, பிறருக்கிடையிலும் சமாதானத்தை உருவாக்குவான். ஆம், சமாதானம் பண்ணுவது என்பது தேவனுடைய பிள்ளைகளால் மாத்திரமே முடியும். ஏனெனில், அது தெய்வீக பண்பு. ஆகவே, முதலாவது, நான் கர்த்தருக்குள் சமாதானமாக இருக்கிறேனா என்பதை நானே சோதித்துப் பார்க்கவேண்டும். எனக்குள் கொந்தளிப்பு இருக்குமானால், சமாதானமின்றி தவிப்பவர்கள் விடயத்தில் நுளையாதிருப்பது நல்லது. நுளைவது அவர்களுக்கும் நமக்கும் பாதிப்பை ஏற்படுத்தும்.

“என்னுடைய சமாதானத்தை உங்களுக்கு வைத்துப்போகிறேன்” (யோவா.14:27) என்று சொன்ன சமாதானப் பிரபுவாகிய இயேசுவுக்கு நாம் பிள்ளைகள் என்றால், அவரை நாம் பிரதிபலிக்கவேண்டியவர்கள் என்பதை மறக்கக்கூடாது. தேவசமாதானத்துடன் பிறர் மத்தியில் சமாதானம்பண்ண முயற்சிக்கும்போது நிச்சயம் பல இடர்களுக்கு முகங்கொடுக்க நேரிடலாம். சமாதானம் பண்ணுவது மலையின்மீது ஏறுவதற்கு ஒப்பானது; சறுக்கல்கள் நிச்சயம் வரும்; வந்தாலும் தொடர்ந்து முன்செல்லவேண்டும். ஏனெனில், சமாதானத்தை எதிர்க்கிற சத்துரு இதை எதிர்ப்பான்; நம்மைத் தடுக்கி வீழ்த்த முயற்சிப்பான். ஆனால், நமக்குள் சமாதானத்தை உருவாக்கியவர் நம்முடன் கூடவேயிருந்து நமக்குள் இருப்பதால் அவர் நிச்சயம் துணைநிற்பார்.

இந்த ஆசீர்வாத வாக்கியத்திற்குக் கொடுக்கக்கூடிய சிறந்த விளக்கமாவது, “எல்லா மனிதரும் வாழக்கூடிய நல்ல இடமாக இந்த உலகத்தை உருவாக்குகிறவர்களே சமாதானம் பண்ணுகிறவர்கள் எனலாம்” என்று ஒரு வேத அறிஞர் எழுதியுள்ளார். இவர் தொடாந்து எழுதும்போது, அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி ஆபிரகாம் லிங்கன் அவர்களை உதாரணம் காட்டியுள்ளார். ஜனாதிபதி சொன்னதாவது: “நான் சாகும்போது, ஒரு பூ மலரும் என்று நான் எண்ணுகின்ற இடத்தில், அதிலுள்ள புல்லைப்பிடுங்கிவிட்டு ஒரு பூ மரத்தை நாட்டினேன் என்று என்னைக் குறித்துப் பிறர் சொல்லவேண்டும் என்று விரும்புகிறேன்” என்றாராம்.

? இன்றைய சிந்தனைக்கு: 

    நான் இருக்கும் இடத்தில் சமாதானமா? குழப்பநிலையா? எதை உருவாக்குகிறேன்? குழப்பமெனில் நான் தேவனுக்குப் பிள்ளையா என்பதை சிந்திப்பேனாக.

? அனுதினமும் தேவனுடன்.

Solverwp- WordPress Theme and Plugin