? சத்தியவசனம் – இலங்கை.

? இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி வேத வாசிப்பு : உபா 6:1-10

முழுமையான அன்பு

நீ உன் தேவனாகிய கர்த்தரிடத்தில் உன் முழு இருதயத்தோடும், உன் முழு ஆத்துமாவோடும், உன் முழுப் பலத்தோடும் அன்புகூருவாயாக. உபாகமம் 5:5

புகையிரத வண்டியிலே ஒரு சிறுபிள்ளை பயணிகளோடு சிரித்து விளையாடி, அவர்கள் மடியிலே அமர்ந்து பேசி சந்தோஷமாகப் பயணம் செய்தது. ஒருபெண் மாத்திரம் எதுவும் பேசாமல் அமைதியாக இருந்தார். அதைப் பார்த்த மற்றவர்கள், இப் பெண்ணுக்கு இந்தக் குழந்தையோடு விளையாடக்கூட மனமில்லை என்றனர். சிறிதுநேரத்தில் அப்பிள்ளை உடையோடு சிறுநீர் கழித்துவிட்டது. விளையாடிய அனைவரும் ஒதுங்கிக் கொண்டனர். அப்பொழுது அமைதியாக இருந்த அந்தப் பெண் பிள்ளையைத் தூக்கி அரவணைத்து முத்தமிட்டு, பிள்ளையின் உடையை மாற்றினாள். அவள்தான் அந்தப் பிள்ளையின் தாய் என்பதை அப்போதுதான் மற்றவர்கள் உணர்ந்துகொண்டனர்.

முழுமையான அன்பு என்பது, தன்னலம் பார்க்காது. தேவன் அப்படியான அன்பினைத் தான் நம்மில் வெளிப்படுத்தினார். தனது ஜீவனையும் துச்சமாய் எண்ணி நம்மை மீட்கும் பொருட்டு, இவ்வுலகிற்கு வந்தார். அவரை நாம் எப்படி அன்புசெய்யவேண்டும் என்றே இன்றைய தியானப்பகுதி நமக்கு அறிவுரை சொல்லுகிறது. அவருடைய எல்லாக் கற்பனைகளுக்கும், கட்டளைகளுக்கும் கீழ்ப்படிவதே அவர்மீது நாம் காட்டும் அன்பின் அடையாளமாய் இருக்கிறது. முழு இருதயத்தோடும், முழு ஆத்துமாவோடும், முழுப் பலத்தோடும் அன்புகூருதலே நாம் அவரிடம் காட்டும் அன்பு. அரைமனமாய், அரைகுறையாய், வேண்டாவெறுப்பாய் அல்ல; முழுமையான மனம்நிறைந்த அன்பையே தேவன் நம்மிடம் எதிர்பார்க்கிறார்.

அவருடைய கற்பனைகளுக்கு நாம் கொடுக்கும் முக்கியத்துவமே, நாம் அவரில் வைத்திருக்கும் அன்பிற்கு அடையாளமாகும். அவற்றை இருதயத்தில் வைத்திரு; உனது பிள்ளைகளுக்கும், பின்வரும் சந்ததிக்கும் அவற்றைக் கருத்தாய்ப் போதித்து, உன் வீட்டில் உட்கார்ந்திருக்கிறபோதும், வழியில் நடக்கின்றபோதும், படுத்திருக்கிறபோதும், எழுந்திருக்கிறபோதும் அவைகளையே சிந்தித்துக்கொண்டிரு. அப்படி செய்தால் நாம் ஒருபோதும் தவறிப்போக மாட்டோம். ஏனெனில் இருபத்துநான்;கு மணிநேரமும், தேவனது வார்த்தையே எமது சிந்தனையாய் இருக்கும். அதனால் அது எம்மைப் பாவம் செய்ய விடாது.

பொதுவாக, நாம் இரவு படுக்கையில் அந்த நாளில் நடந்தவற்றைச் சிந்திப்பதுண்டு. காலையில் எழுந்ததும் அன்று செய்யவேண்டிய காரியங்களைச் சிந்திப்போம். இதை விடுத்து அந்த நாளில் தேவனின் வழிநடத்துதலையும், மறுநாளில் அவர் வழிநடத்தப்போவதையும், அவரது வார்த்தையையும் சிந்திப்போமாக. “கர்த்தர் சொன்ன வார்த்தை நிறைவேறுமளவும், அவருடைய வசனம் அவனைப் புடமிட்டது”. சங்கீதம் 105:19

? இன்றைய சிந்தனைக்கு:

   கர்த்தர் என்னில் அன்பாயிருக்கிறார் என்று அறிந்திருக்கிற நான் அவரில் உண்மையாகவே அன்புகூருகிறேனா?

? அனுதினமும் தேவனுடன்.

Solverwp- WordPress Theme and Plugin