? சத்தியவசனம் – இலங்கை.

? இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி வேத வாசிப்பு : லூக்கா 11:1-4

கொடிய சோதனை

தேவன் உண்மையுள்ளவராயிருக்கிறார். 1கொரி.10:13

மனுஷனுக்கு நேரிடுகிற மிகக்கொடிய சோதனை என்னவென்று சிந்தித்துப் பார்த்தால், “பணம்” இதுதான் என்று மனம் சொல்லுகிறது. அதிலும் இன்றைக்கு நாம் முகங்கொடுத் திருக்கிற பொருளாதார சிக்கல் பலரது வாழ்க்கையையே குடித்துவிட்டது; சிலரை சிறைக்குள்ளும் தள்ளிவிட்டது – இது ஒருவருடைய அங்கலாய்ப்பு. இன்னும் சிலர், “மனுஷ உறவுகள்தான் மிகப்பெரிய சோதனை. ஏனெனில் சரீர இச்சை உறவு என்ற பெயரில் மனுஷனை மிக இலகுவாக விழுத்திப்போடுகிறது” என்றனர். “இல்லை, தேவைக்கு மிஞ்சிய ஆசைதான் அதிக பிரச்சனைகளை உருவாக்குகிறது. இதனாலே தான் அடுத்தவனுடையதிலும் ஆசை வருகிறது” என்றனர் வேறு சிலர். இப்படியாக நீங்களும் பல காரணங்களைச் சொல்லலாம். ஆனால் இவை யாவற்றையும் கட்டுப்பாட்டில் வைக்கக்;கூடிய இரண்டு காரியங்கள் உண்டு. அது நமது வாழ்வில் குறைவுபடாமல் இருந்தால், அவை நமக்கு உயர்வான வாழ்விலும்பார்க்க, ஒழுக்கமுள்ள வாழ்வை நிச்சயம் தரும். சோதனை வந்தாலும், இச்சைகள் நம்மை இழுத்தாலும், அவை நம்மைத் தாங்கிக்கொள்ளும். அவை என்ன தெரியுமா? “வேதவாக்கியமும், ஜெபமும்.” இவை குறைவுபடுவதுதான் நமது வாழ்வில் ஏற்படக்கூடிய மிகப் பெரிய சோதனை. அக் குறைவு நம்மை சோதனைக்குள் விழுத்திவிடும்.

சோதனைகளில் விழுந்துபோன பலருடன் பேசிப்பார்த்தபோது, வேதவாசிப்பு இருந்தது; ஆனால் அவர்களுக்குள் வேதவாக்கியம் இல்லை என்று சந்தேகம் எழுந்தது. சிலருடைய வாழ்வில் அடி ஆழத்திலே அவர்களது ஜெபவாழ்வு ஆடிப்போயிருந்ததை அவதானிக்கக் கூடியதாக இருந்தது. ஆரம்பத்திலே பல தவிர்க்கமுடியாத காரணங்களினால் இவை குறைவுபடத் தொடங்கும்; பின்னர் வேதம் வாசிக்காவிட்டால் ஒரு குறை என்ற மனமும், அவசர ஜெபமும் தொடரும். பின்னர் ஜெபம் இல்லாவிட்டாலும் அந்தந்த நாளை எப்படியோ கடத்திவிடக்கூடிய மனத்தைரியம் வரும். பின்னர் சிறிது சிறிதாக கடவுளுக்கே சாட்டுச் சொல்லுமளவிற்கு துணிவு வந்துவிடும். பின்னர் கேட்கவும் வேண்டுமா!

கர்த்தருக்கும் நமக்கும் உள்ள உறவைக் கட்டிக் காப்பது இந்த வேதவாக்கியமும் ஜெபமும்தான். இது இல்லையானால் நமக்கும் தேவனுக்கும் இடையே உண்டாகும் விரிசலை பிசாசு பயன்படுத்துவான். நாம் இன்னும் கிறிஸ்தவர்களாகவே இருப்போம். ஆனால் கிறிஸ்துவுக்குள் அல்ல; மாறாக, பிசாசுக்கு அடிமைகளாகிவிடுகிறோம். இதன் விளைவு விழுகை மாத்திரமல்ல, அழிவுக்கும் இது வழிவகுக்கும். இவற்றையெல்லாம் அறிந்திருக்கும் ஒருவர் நமக்கு உண்டு. அவர் உண்மையுள்ளவர். நமது அபாத்திரமான

நிலைமைகளை அவர் அறிந்தவர். ஆகையால் என்ன தடைவந்தாலும் ஜெபத்தை அசட்டைபண்ணவேண்டாம். அப்போது சோதனை வராது என்பதல்ல; வந்தாலும் நாம் அசைக்கப்படமாட்டோம்.

? இன்றைய சிந்தனைக்கு:

என் ஜெபவாழ்வும், வேத தியானமும் எப்படி இருக்கிறது என்பதை உண்மை உள்ளத்துடன் ஆராய்ந்து சரிப்படுத்துவேனா?

? அனுதினமும் தேவனுடன்.

Solverwp- WordPress Theme and Plugin