? சத்தியவசனம் – இலங்கை.

? இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி வேத வாசிப்பு : 1கொரி 10:7-12

சோதனைக்குத் தப்புகிறவர் யார்?

மனுஷருக்கு நேரிடுகிற சோதனையேயல்லாமல் வேறே சோதனை உங்களுக்கு நேரிடவில்லை. 1கொரி.10:13

மனதிலே பலவிதமான பாரங்களைச் சுமந்துகொண்டு நம்மில் எத்தனை பேர் இந்தத்தியானவேளையில் உட்கார்ந்திருக்கிறோம்! ஒருவேளை இந்தப் பாரங்கள் வாழ்க்கை கஷ்டங்களினால் உண்டானதாக இராமல், நமக்கு வந்த சோதனைகளில், தோற்றுப்போனதால் உண்டான மனமடிவு; இனி நான் எழுந்திருப்பேனோ என்றதொரு சிந்தனை; இவை நம்மை மறைமுகமாகத் தாக்குவதால் உண்டான மனவேதனையாகக்கூட இருக்கலாம். ஆனால் இவை ஒரு மனுஷனுக்கு நேரிடக்கூடிய இயல்பான விடயங்கள்தான். இதிலும் பார்க்க நம்மை அதிகமாகப் பாதிப்பது என்னவெனில், நம்முடைய தோல்விகள் அனைத்தையும் மனதில் புதைத்து வாழவேண்டியிருக்கிறதே, அதுதான் அநேகருடைய மனதை அதிகமாகப் பாதிக்கிறது. இந்தப் பாதிப்பு ஆபத்தான விளைவுகளை கொண்டுவரக்கூடும்.

இது விழுந்துபோன உலகம்; நாம் மாம்சத்தில் வாழுகிறவர்கள். ஆகவே, நமது வாழ்விலும் விழுகைகள் வரும் என்பதை முதலில் நாம் ஏற்றுக்கொள்ளவேண்டும். மலையுச்சிக்குப்போன மோசே வரத் தாமதமானபோது, இதுவரை தம்மை நடத்திய கர்த்தரையும், மோசேயையும் மறந்துவிட்டு, ஒரு கன்றுக்குட்டியை வார்த்து, அதன் முன்னிலையில் புசிக்கவும், குடிக்கவும், உட்கார்ந்து, விளையாடவும் எழுந்தார்கள் இஸ்ரவேலர் (யாத்.32:6). மேலும், இவர்கள் புறஜாதிகளோடு தகாத உறவுவைக்கத் துணிந்து, தேவனையே விட்டுப்பிரிந்தார்கள் (எண்.25:1-9). இப்படிப்பட்ட விழுகைகள் நமது வாழ்விலும் வேறுவிதங்களிலாவது வராது என்று சொல்லமுடியாது; அதற்கேற்பசந்தர்ப்பங்கள் சூழ்நிலைகள் அமையவும் கூடும். சோதனை நம்மை நோக்கி வருவதைநெம்மால் தடுக்கமுடியாது. சோதனைக்கு யார் தப்புவார்? ஆனால், அதற்காக நாம் சோதனையில் அகப்பட்டு மாண்டுபோகவேண்டிய அவசியமே இல்லை.

இஸ்ரவேலரின் விழுகைகளை பரிசுத்த ஆவியானவர் நமக்காகவே, நாமும் அப்படியாக சோதனையில் அகப்பட்டு தேவனைவிட்டு பிரிந்துவிடக்கூடாது என்றே எழுதி வைத்துள்ளார்; இன்னும் விழுந்தாலும் விழுந்த இடத்திலேயே கிடக்கக்கூடாது என்பதற்கான எச்சரிக்கையாகவே எழுதித் தந்துள்ளார். ஏனெனில், எகிப்திலிருந்து புறப்பட்ட அந்த சந்ததியில் கர்த்தரையே சார்ந்துநின்ற இருவரைத் தவிர, மற்ற எல்லோரும் வனாந்தரத்தில் அழிந்துபோனாலும், இஸ்ரவேல் சந்ததி கானானுக்குச் சென்றது சரித்திரஉண்மை. ஆனால் இன்று சந்ததியல்ல, மனந்திரும்பி, தேவபெலத்தால் எழுந்துநிற்கிற ஒவ்வொருவருக்குமே பரமகானான் காத்திருக்கிறது என்பது நமக்கு தரப்பட்டுள்ள உறுதிமொழி! ஆதலால், நம்மை அழுத்தும் பாரங்களை மனுஷரிடத்தில் அல்ல; தேவனிடத்தில் இறக்கிவைக்க இப்பொழுதே முழங்கால்படியிடுவோமாக. நமது வேதனைகளைப் புரிந்துகொண்டு ஆண்டவர் நம்மை தூக்கி நிறுத்துவார்.

? இன்றைய சிந்தனைக்கு:

    சோதனையில் விழுந்த அனுபவம் உண்டா? இப்பொழுதே தேவ பாதம் நான் பணிந்து என்னைப் பலப்படுத்துவேனாக.

? அனுதினமும் தேவனுடன்.

Solverwp- WordPress Theme and Plugin