? சத்தியவசனம் – இலங்கை.

? இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி வேத வாசிப்பு : சங்கீதம் 32:1-11

பெரும் பாக்கியம்

எவனுடைய மீறுதல் மன்னிக்கப்பட்டதோ, எவனுடைய பாவம் மூடப்பட்டதோ, அவன் பாக்கியவான். சங்கீதம் 32:1

இது என்ன பாக்கியம்? ஒருவனுடைய பாவம் அவனது வாழ்வை எப்படிச் சாகடித்துப்போடுகிறதோ, செத்துப்போன அவனுடைய ஆத்துமாவை உயிர்ப்பிக்கின்ற அருமருந்தாக மன்னிப்பும் இருக்கிறது. நாம் பாவம் செய்கிறவர்கள்தான்; ஆனால், நமது பாவம் மன்னிக்கப்பட்டு, பாவத்தினாலுண்டான குற்றஉணர்வின் வேதனையிலிருந்து விடுதலையான அனுபவம் நமக்கு உண்டா?

இந்த சங்கீதத்தை தாவீதின் 51ம் சங்கீதத்துடன் இணைத்துப் படிக்கவேண்டும். இரண்டிலும், தாவீதின் குற்றமுள்ள மனசாட்சியின் மனஸ்தாபம், மனம் திரும்புதல், அதனாலுண்டான மகிழ்ச்சி எல்லாம் தெளிவாகத் தெரிகின்றன. ஒருவன் தான் செய்தகுற்றத்தை ஏற்று, உணர்ந்து, மனஸ்தாபப்படுவது என்பது கடினமும் அரிதானதுமே; கடின மனசாட்சி உள்ளவனுக்கு இது மிகவும் கடினம். ஆயினும், இது ஆத்துமாவிற்குமிகுந்த பயன் தரும். குற்றத்தை ஏற்பது முதலில் கசப்பாகத் தோன்றினாலும், மனச்சாட்சியின் உறுத்துதலிலிருந்து வெளிவரும்போது கிடைக்கின்ற விடுதலையுணர்வை யும் மகிழ்ச்சியையும், மன்னிப்புப்பெற்ற ஒருவானாலேயே புரிந்துகொள்ளமுடியும். தாவீது அதை அனுபவித்தார். தன் குற்றத்தை அடக்கிவைத்தமட்டும் அவர் அடைந்தவேதனையைக் குறிப்பிடுகிறார். பின்னர், “நான் என் அக்கிரமத்தை மறைக்காமல், என் பாவத்தை உமக்கு அறிவித்தேன்; என் மீறுதல்களைக் கர்த்தருக்கு அறிக்கையிடுவேன் என்றேன்” என்கிறார். அக்கிரமம், பாவம், மீறுதல் மூன்றும் மூவித அழுத்தத்தைக் கொடுத்தாலும், எல்லாமே நமது வாழ்வை அடியோடே அழித்துப் போடும். தேவன், தாவீதின் பாவத்தின் தோஷத்தை மன்னித்ததை உணர்ந்தபோது, தாவீது அடைந்த மகிழ்ச்சிக்கு அளவேயில்லை. இதுவே அந்தப் பெரும் பாக்கியம்!

குற்றத்தைச் சுட்டிக்காட்டும் மனச்சாட்சி இல்லாத இருதயத்தினால், மன்னிக்கப்பட்ட இருதயத்தின் மகிழ்ச்சியை அறியமுடியாது. மனந்திரும்பி, பாவத்தை அறிக்கையிடும் போது, நம்மை மன்னிக்க ஆண்டவர் ஆயத்தமாக இருக்கிறார். ஏனெனில், நமக்குவரவேண்டிய தீர்ப்பை அவர் சிலுவையில் தீர்த்துவிட்டாரே! ஆனால் நான் மனந்திரும்பி அவரிடம் வரவேண்டும். மனஸ்தாபமும் மனந்திரும்புதலும் இல்லாமல் மன்னிப்பு கிடையாது. பாவத்தை உணரும் அனுபவம் இருதயத்தை ஊடுருவிப்பாயும் தன்மைஉள்ளது. அப்படியே, தேவ மன்னிப்பு என்பது நமது இருதயத்தின் ஆழத்திற்கே சென்று நமக்குக் கிடைக்கின்ற விடுதலையின் மகிழ்ச்சியை உணரவைக்கிறது. அந்த உணர்வு, உலகத்திற்குப் பயப்படும் பயத்தை நீக்குகிறது; குற்றஉணர்விலிருந்து நம்மை விடுதலையாக்குகிறது; நம்மைப் புதுப்பிக்கிறது. நமது பாவத்தை மன்னிக்க ஆண்டவர் ஆயத்தமாயிருக்க, இன்னும் இந்தப் பாரம் நமக்கு ஏன்? மன்னிப்பின் இந்தப் பெரிய மகிழ்ச்சி, இது நமக்கு வேண்டாமா?

? இன்றைய சிந்தனைக்கு:

இந்த மகிழ்ச்சியின் ஆசீர்வாதத்தை நான் பெற்றிருக்கிறேனா?

? அனுதினமும் தேவனுடன்.

Solverwp- WordPress Theme and Plugin