[? சத்தியவசனம் – இலங்கை. ??

? இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி வேத வாசிப்பு :1கொரி 15:1-10

கிருபை விருதாவாயிருக்கவில்லை

உம்முடைய கிருபை என் கண்களுக்கு முன்பாக இருக்கிறது. உம்முடைய சத்தியத்திலே நடந்துகொள்ளுகிறேன். சங்கீதம் 26:3

கொரோனா வைரஸ் தொற்றுக்காலத்தில் அதற்குத் தப்பி நாம் உயிரோடு காக்கப்பட்டு சுகபெலத்துடன் வாழ்ந்தது கர்த்தருடைய மேலான கிருபையல்லவா! அந்நாட்களில் ஆயிரக்கணக்கானவர்கள் தொற்றுக்குள்ளானார்கள்; அநேகர் மரித்தும் போனார்கள். அர்ப்பணிப்புடன் பணிபுரிந்த எத்தனையோ வைத்தியர்கள் செவிலியர்கள் நம்முடன் இன்று இல்லை. தேவனின் சுத்தகிருபையே நம்மை வாழவைத்திருக்கிறது!

இன்றைய வேதவாசிப்பு பகுதியில் பவுலின் உடைந்த உள்ளத்தை நாம் காணலாம். தன் வாழ்வையே கிறிஸ்துவுக்கு முற்றுமாக அர்ப்பணித்து வாழ்ந்தவர் பவுல். அவர் மூலமாகக் கர்த்தர் நிறைவேற்றிய பணிகளோ ஏராளம். அவர் சபைகளுக்கும் தனிப்பட்டவர்களுக்கும் எழுதிய நிருபங்கள் இன்றும் நம் மத்தியில் பிரகாசித்துக்கொண்டே இருக்கின்றன. இப்படிப்பட்ட பவுல், தன் முந்திய நிலையை, தான் எந்நிலையில் இருந்தபோது இயேசுவால் பிடிக்கப்பட்டார் என்பதையெல்லாம் ஒருபோதும் மறந்துவிடுவதில்லை. இந்தப் பெரிய மனுஷன் தன்னை “அகாலப்பிறவி” என்கிறார். தான் சபையைத்துன்பப்படுத்தியவன் என்றும், இதனால் தான் அப்போஸ்தலன் என்று அழைக்கப்படு வதற்குப் பாத்திரன் அல்ல என்றும் கூறுகிறார். இந்த வார்த்தைகளில் பவுலின் இருதய சிந்தையை நம்மால் உணரமுடிகிறதல்லவா! மாத்திரமல்ல, இப்போதுதான் இருக்கிறது தேவகிருபை என்றும், அந்தப் கிருபை விருதாவாகப்போகாமல் தான் அதிகமாகப் பிரயாசப்பட அந்தக் கிருபையே காரணம் என்றும் எழுதுகிறார். “என்னுடனே இருக்கிற தேவகிருபையே அப்படிச் செய்தது” என்று எழுதியதில் பவுலுடைய தாழ்மையின் சிந்தை தெளிவாகத் தெரிகிறது. 

சாட்சி என்ற பெயரில் கர்த்தரைப் பெருமைப்படுத்துவதுபோல நம்மைப் பெருமைப்படுத்துகிறவர்கள் இன்று எத்தனை பேர்? நாமிருந்த பரிதாப நிலையை மறக்கும்போதுதான் இப்படி நடக்க நேரிடுகிறது. கர்த்தரின் கிருபையை ஒருபோதும் மறக்கக்கூடாது. அதை நினைக்கும்போதுதான் கர்த்தர் நம்மில் கொண்டுள்ள கிருபையின் மேன்மையை நம்மால் உணரமுடியும். இன்று நாம் பெற்றிருக்கிற இரட்சிப்புகூட கிருபையினால் விசுவாசத்தைக்கொண்டுதானே பெற்றுள்ளோம். இந்த மேன்மையான விடுதலையை நம்மால் வேறு எங்கேயாவது பெற்றுக்கொள்ள முடியுமா? ஒன்றுக்கும் உதவாத பாவி என்ற நிலையில் இருந்த நம்மை கர்த்தருடைய கிருபை சேர்த்துக்கொண்டதை நினைந்து, அவருடைய சத்தியத்தில் நடப்பதற்கு ஜாக்கிரதையாக இருப்போமாக. கிருபையின் மேன்மையைப் புரிந்து உணர்ந்தவர்களாக கர்த்தருக்குப் பயப்படும் பரிசுத்த வாழ்வை வாழ்ந்து வளருவோமாக. அல்லேலூயா, கர்த்தரைத் துதியுங்கள்; அவர் நல்லவர்; அவர் கிருபை என்றுமுள்ளது (சங்கீதம் 106:1).

? இன்றைய சிந்தனைக்கு:

  கிருபையின் ஈவாகிய இரட்சிப்பைப் பெற்றிருக்கிறேனா? அவருடைய சத்தியத்தில் நடக்க என்னை ஒப்புக்கொடுப்பேனா?

? அனுதினமும் தேவனுடன்.

Solverwp- WordPress Theme and Plugin