? சத்தியவசனம் – இலங்கை. ??

? இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி வேத வாசிப்பு : எபே 1:1-14

உன்னதங்களின் ஆசீர்வாதம்

அவர் கிறிஸ்துவுக்குள் உன்னதங்களிலே ஆவிக்குரிய சகல ஆசீர்வாதத்தினாலும் நம்மை ஆசீர்வதித்திருக்கிறார். எபே.1:3

“ஆசீர்வாதம்” என்றதும் நாம் எதைக் கருதுகிறோம் என்பதற்கு நேர்மையுள்ள உள்ளத்தோடு பதிலளிப்போமாக. இந்தக் கேள்வியைச் சில கிறிஸ்தவ சகோதரிகளிடம் கேட்டபோது, விளிப்புடன் பதிலளித்தார்கள். “தேவனுடைய பிள்ளையாயிருப்பது” “இரட்சிப்பைப் பெற்றது” என்று பல பதில்கள். ஆனால், நமது பூவுலக வாழ்வின் அடிப்படையில் தான் நாம் ஆசீர்வாதத்தைக் கணக்கிடுகிறோம் என்பதே யதார்த்தம். அதில் தவறில்லை. கர்த்தர் நம்மை ஆசீர்வதிக்காவிட்டால், நாம் இப்போது பிறருக்கு, முக்கியமாக கர்த்தரை அறியாத ஜனங்களுக்கு ஆவிக்குரிய தேவைகளில் மாத்திரமல்லாமல் சரீர தேவைகளில்கூட நம்மால் ஆசீர்வாதமாக இருந்திருக்க முடியாது.

கர்த்தருடைய வார்த்தை கூறுவது என்ன? “நம்முடைய ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் பிதாவும், இறைவனுமாய் இருக்கிறவர், …பரலோகத்தில் உள்ள எல்லா ஆவிக்குரிய ஆசீர்வாதங்களினாலும் கிறிஸ்துவில் இணைந்திருக்கின்ற நம்மை ஆசீர்வதித்திருக்கிறார்” (எபே.1:3 திருத்தப்பட்ட மொழிபெயர்ப்பு). “எல்லா” என்ற சொல்லைக் கவனிப்போம். அதாவது, நமது பரமபிதா நம்மை ஆசீர்வதிக்கையில் எதுவும் மீதி வைப்பதில்லை. ஆம், கிறிஸ்துவுக்குள் தேவனை அறிகிற அறிவின் நன்மைகள் யாவையும் அவர் நமக்கு அருளியிருக்கிறார். அதாவது இரட்சிப்பு, அவருடைய பிள்ளைகள் என்ற உரிமை, மன்னிப்பு, உள்ளான இருதயத்தில் மாற்றம், பரிசுத்த ஆவியானவரின் சகல கொடைகள், தேவசித்தம் செய்கின்ற ஆற்றல், எல்லாவற்றுக்கும் மேலாக கிறிஸ்துவோடு நித்தியமாக வாழுகின்ற நம்பிக்கை – கிறிஸ்துவோடு நெருங்கிய உறவைக் கொண்டிருக்கும் ஒவ்வொருவரும் இந்த ஆசீர்வாதங்களை மகிழ்ச்சியுடன் பெற்றுக்கொண்டு வாழலாம். இவற்றை நமக்கு அருளி நம்மைத் தைரியப்படுத்தவே இயேசு உலகில் வந்து ஒரு மனிதனாகப் பிறந்து வாழ்ந்தார். ஆவிக்குரிய ஆசீர்வாதங்கள், எதுவும் மாறக்கூடியவை அல்ல, நித்தியமானவை. உலகை ஜெயங்கொண்ட ஒரே ராஜாவாகிய கிறிஸ்துவின் இராஜ்யத்திலிருந்தே இவை நமக்கு அருளப்பட்டுள்ளன. ஆகையால் இவற்றை யாராலும் தட்டிப்பறிக்க முடியாது.

இப்படியிருக்க, இந்த உலகக் காரியங்களைக்குறித்து நாம் தவித்து ஏங்குவது ஏன்? அன்றாட போராட்டங்களுக்கு கிறிஸ்துவின் பிள்ளைகள் நாம் விதிவிலக்கல்ல என்பது உண்மைதான். ஆனால், உன்னத ராஜ்யத்தின் ஆசீர்வாதங்களால் நம்மை நிறைத்திருக்கிறவர், மாறிப்போகின்ற இந்த உலக தேவைகள் கஷ்டங்கள் பொல்லாப்புகளில் நம்மைக் கைவிடுவாரா? ஆனால் ஒன்று, நாம் எதிர்பார்க்கிறபடி இவ்வுலக காரியங்கள் சந்திக்கப்படாது போகலாம்; ஆனால் இந்த உலகையும் ஆளுகைசெய்கிறவர் நமது ராஜாதி ராஜாவாகிய கிறிஸ்து என்பதை மறவாதிருப்போமாக.

? இன்றைய சிந்தனைக்கு:  

நான் எந்தளவுக்கு ஆசீர்வதிக்கப்பட்டவன் என்பதை உணர்ந்தால், உலக ரீதியான குறைவுகளிலும் என்னால் ஆண்டவரை மகிமைப்படுத்த முடியுமல்லவா?

? அனுதினமும் தேவனுடன்.

Solverwp- WordPress Theme and Plugin