? சத்தியவசனம் – இலங்கை. ??

? இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி வேத வாசிப்பு : லூக்கா 22:31-34

முன்னறிந்தவர்!

நானோ உன் விசுவாசம் ஒழிந்துபோகாதபடிக்கு உனக்காக வேண்டிக்கொண்டேன். லூக்கா 22:32

வருடத்தின் இறுதிக்கு வந்துவிட்ட நாம் சற்று திரும்பிப் பார்த்தால், இப்படியெல்லாம் நடக்கும் என்று நாம் ஆரம்பத்தில் நினைத்தோமா, அறிந்திருந்தோமா என்று ஆச்சரியப்படுவோம். இப்படியிருந்தும் இதுவரை நாம் தப்பிப் பிழைத்து, சுகம் பெலத்துடன் வாழுகிறோமே, எப்படி? இவற்றைக்குறித்து நாம் சிந்திப்பது அரிது. நம்முடன் யாரோ இருக்காவிட்டால், இத்தனையையும் தாண்டி, இனி வரப்போகிறவற்றையும் மேற்கொண்டு நம்மால் முன்னேற முடியாது என்பதை ஏற்றுக்கொள்ள முடியுமா? நம் முன்னேயும் நம்முடனும் இருக்கிற அந்த நபர் யார்?

இயேசு, தம்முடைய சீஷர்களுடன் கடைசி பஸ்காவைப் புசித்துவிட்டு, குறிப்பாகசீமோன் பேதுருவை நோக்கிப் பேசுகிறார்: சீமோனே, சீமோனே! என்று அழைக்கிறார். சீமோனாக அவனுடைய பெலம் பெலவீனம் யாவையும் அறிந்தவராகவும், சத்துருவின் வல்லமையைக் கணக்கு வைத்திருக்கிறவராகவும் இயேசு இங்கே பேசுகிறார். சீமோன் தனக்கு என்ன நடக்கிவிருக்கிறது என்பதை அறியாதிருந்தபோதிலும், யாவையும் முன்னறிந்திருந்த இயேசு, “சாத்தான் உத்தரவு கேட்டுக் கொண்டான்; நானோ, உனக்காக வேண்டிக்கொண்டேன்” என்று கடந்தகாலத்தில் கூறுகிறார்; பின்னரும், “நீ என்னை அறிந்திருக்கிறதை மூன்றுதரம் மறுதலிப்பாய்” என்று சீமோன் என்ன செய்வான் என்பதையும் இயேசு முன்னரே அறிவித்துவிட்டார். சீமோன் சோதனைக்குட்படு

வது நடக்கவேண்டியது என்றாலும், அவன் தன் விசுவாசத்தை இழந்துவிடக்கூடாது என்பதில் இயேசு கவனமாக இருந்து அவனுக்காக முன்னரே ஜெபித்துவிட்டார். கர்த்தர் அவன்பேரில் ஒரு பெரிய நோக்கத்தை வைத்திருந்தார். முன்சொல்லியிருந்தும் சீமோனும் தோற்றுவிட்டான். அந்த நிகழ்வினூடாக அவன் அதிக பாடங்களைக் கற்கவேண்டியிருந்ததால், அவன் தோற்றுப்போக அனுமதிக்கப்பட்டான் என்பதே உண்மை. ஏனெனில், அந்தத் தோல்விதான் அவனுடைய விசுவாசத்தைப் பலப்படுத்தியது; அந்த விசுவாசம்தான் பின்னர் எருசலேமில் “இயேசுவே கர்த்தர்” என்று முழங்கியது; அதுவேதான் சத்துருவின் கைதிகள் அநேகரை விடுதலையாக்கியது.

நாமும் பல தடவைகளில் பலவீனப்பட்டு விடுகிறோம். அதை எதிர்பார்த்திருக்கும் சத்துரு அந்த இடத்திலே அழுத்துகிறான். இயேசு யாரை நேசிக்கிறாரோ அவர்களை அவரிடமிருந்து பிரித்து அழிப்பதே சத்துருவின் ஒரே முயற்சி, முடியாவிட்டால் அவர்களது சாட்சியைக் கெடுக்கப் பார்ப்பான். ஆனால், ஆண்டவருக்கு அவன் எப்போதும் பிந்தியவன்தான்; ஏனெனில் சோதனை வருமுன்னதாக, ஆண்டவர் முந்திக்கொண்டு நமக்காக ஜெபம் ஏறெடுக்கிறார்! அல்லேலூயா!  இயேசு நமக்காக ஜெபிக்கிறார் என்பதற்காக நாம் பாவம் செய்யலாமா? கூடாது. முன்னறிந்தவர் கரங்களில் நம்மைத் தந்து, நமது விசுவாசத்தைப் பலப்படுத்தும்படி ஜெபிப்போமாக.

? இன்றைய சிந்தனைக்கு:  

புதிய ஆண்டைக் குறித்தும் முன்னறிந்தவர் கரத்தில் ஆண்டவராகிய கர்த்தருடைய மார்பில் சார்ந்திருப்பேனாக.

? அனுதினமும் தேவனுடன்.

Solverwp- WordPress Theme and Plugin