? சத்தியவசனம் – இலங்கை. ??

? இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி வேத வாசிப்பு : லூக்கா 1:5-23

முதுமை தடையல்ல

இதை நான் எதினால் அறிவேன், நான் கிழவனாயிருக்கிறேன்… இவைகள் சம்பவிக்கும் நாள்மட்டும் நீ பேசக்கூடாமல் ஊமையாயிருப்பாய் என்றான். லூக்.1:13, 20

நமது வேண்டுதல்களுக்கான பதில் தாமதிக்கும்போது ஒருவித சந்தேகம் எழத்தான் செய்கிறது. இதற்குப் பல காரணங்கள் இருந்தாலும், இயல்பாக இனி முடியாது என்றும், முதுமை வரைக்கும் பதில் கிடைக்காதபோது ஒரு சலிப்பு ஏற்படத்தான் செய்யும். என்றாலும், அந்த நிலையிலும் இன்னமும் நாம் தேவனையே சார்ந்திருப்போமானால் கர்த்தரால் நம்மைக்கொண்டு எதுவும் செய்யமுடியும். ஆனால், நாம் விசுவாசத்தில் தளர்ந்துவிடாமல் கர்த்தரைச் சாந்திருக்கவேண்டும்.

சகரியா, ஒரு யூத ஆசாரியன். இதுவரை பல தீர்க்கதரிசிகள் மூலமாக உரைத்தபடி, தேவன் தமது கிரியையில் இறங்கிவிட்டார் என்ற செய்தியை முதன்முதலில் பெற்றுக் கொண்ட சிலாக்கியம் இச் சகரியாவுக்குத்தான் கிடைத்தது. சகரியாவும் அவன் மனைவி எலிசபெத்தும் ஆசாரிய வகுப்பைச் சேர்ந்தவர்கள்; தேவனுக்கு முன்பாக நீதியும், பரிசுத்த நடக்கையும் உள்ளவர்களாய் வாழ்ந்த தம்பதியினர். ஆனால் இவர்களுக்கு

பிள்ளை இல்லை, அதற்காக விண்ணப்பம் செய்திருந்தனர். இப்போது இருவரும் வயது சென்ற முதியவர்கள். இனி நம்பிக்கை இல்லை. ஆனால் அவர்கள் தங்கள் பரிசுத்த நடக்கையில் தளர்ந்துபோகவில்லை என்பது முக்கியம். தன் முறையில் தூபங்காட்ட தேவாலயத்துக்குள் சென்ற சகரியாவுக்குத் தரிசனமான தூதனைக் கண்டு பயந்த சகரியாவிடம், தூதன் சொன்ன முதற்காரியம், “பயப்படாதே, உன் வேண்டுதல் கேட்கப்பட்டது” என்பதுதான். அவன்; மனைவி அவனுக்கு ஒரு குமாரனைப் பெறுவாள் என்றும், உரைக்கப்பட்டபடி வரவிருக்கிறவருக்கு அவன் வழியை ஆயத்தம்பண்ணுவான் என்றும் கூறப்பட்டது. இவை நம்பக்கூடிய விடயங்களா? தேவ வாக்குறுதிக்கும் மேலாக சகரியாவின் முதுமை, அவனை அதிகம் பேசவைத்தது. இதன் விளைவாக, தேவன் தமது வாக்கு நிறைவேறும் வரைக்கும், அதாவது, யோவான் பிறக்கும்வரைக்கும் சகரியாவின் வாயை அடைத்துவிட்டார்.

இன்று கிறிஸ்துவின் இரண்டாம் வருகைக்காக ஜெபிக்கிறோம், காத்திருக்கிறோம். நமது ஜெபங்கள் நிச்சயம் கேட்கப்படுகிறது. ஆனால் வருகை வரைக்கும் அவர் நமது வாய்களை அடைக்கவில்லை; அகலத் திறந்திருக்கிறார். சரீர பெலவீனங்கள், வியாதிப்பட்ட நிலைகள்கூட நம்மை அடக்கிவைக்க இடமளிக்கக்கூடாது. ஏனெனில், இந்த உலக காரியங்களோ, நமது சரீர பெலவீனங்களோ, முதுமையோ தேவனுக்கு எல்லையைப் போடமுடியாது. நாம் எதிர்பாராத விதங்களில்கூட தேவன் தமது திட்டங்களை நம் மூலமாகவும் நிறைவேற்றக்கூடும். நாம் செய்யவேண்டியது ஒன்றுதான். பிள்ளையோ, வாலிபமோ, பெரியவர்களோ, முதிர் நிலையோ எதுவானாலும், கர்த்தருக்குக் கீழ்ப்படிதலிலும், பரிசுத்த நடக்கையிலும், தேவனுக்குச் சாட்சியாக அவரைச் சார்ந்திருப்போமானால், தமது வருகையில் நினையாத வழிகளில் நம்மையும் பயன்படுத்துவார்.

? இன்றைய சிந்தனைக்கு:  

கிறிஸ்துவின் இரண்டாம் வருகையின் பிரகடனத்தை இந்த உலகுக்கு அறிவிக்க எனக்கு இன்று தடையாயிருப்பது என்ன?

? அனுதினமும் தேவனுடன்.

Solverwp- WordPress Theme and Plugin