? சத்தியவசனம் – இலங்கை. ?? 

? இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி: யோபு 9:1-10; 1சாமுவேல் 17:32-50

?  விசுவாச அறிக்கை

கர்த்தர் எனக்காக யாவையும் செய்துமுடிப்பார். சங்கீதம் 138:8

இது தாவீது செய்த ஆழமான உறுதியான ஒரு அறிக்கை. ‘என்னை சிங்கத்தின் கைக்கும் கரடியின் கைக்கும் தப்புவித்த கர்த்தர் இந்தப் பெலிஸ்தனுடைய கைக்கும் தப்புவிப்பார்” என்று அறிக்கைபண்ணிய வாலிப தாவீது, இஸ்ரவேலுடைய இராணுவங்களின் தேவனாகிய சேனைகளுடைய கர்த்தரின் நாமத்தினாலேயே பெலிஸ்தியனை மடங்கடிக்கச் சென்றார்; கர்த்தரும் அவனது அறிக்கையை மெய்ப்பித்தார்; பெலிஸ்தியன் கொல்லப்பட்டான். தாவீதின் வாலிப மனதிலேயே வேரூன்றிவிட்ட இந்த விசுவாசம் அவனது வாழ்க்கை முழுவதிலும், துன்பங்கள் சோதனைகள் மத்தியிலும் மங்கிப்போகவே இல்லை. எல்லா சமயங்களிலும் தன் தேவனையே முற்றிலுமாக நம்பியிருந்தார் தாவீது. இதனாலேயே ‘கர்த்தர் எனக்காக யாவையும் செய்து முடிப்பார்” என்று அவனால் தைரியமாகக் கூற முடிந்தது.

நம் கண் காண்கிறவைகளும், சூழ்நிலைகளும், நம்பியிருந்தவர்களால் ஏற்படுகின்ற ஏமாற்றங்களும் நமது எதிர்காலத்தையே இருளடையச் செய்துவிடலாம். இப்படியான சூழ்நிலையில் இன்று பலர் இருக்கிறார்கள். தேவபிள்ளையே, உனக்குள் தூங்கிக் கொண்டிருக்கும் விசுவாசத்தைத் தட்டி எழுப்பவேண்டிய தகுந்த தருணம் இதுவேயாகும்! நம்மைப் பயமுறுத்தும் இருளைப் பார்த்து தயங்கி தயங்கி நிற்கக்கூடாது. நமது விசுவாசத்தைப் பயிற்றுவிக்க, பரீட்சை பார்க்க நல்லதொரு சந்தர்ப்பம் கிடைத்துவிட்டதாக எண்ணிக்கொண்டு, ஸ்தோத்திரத்துடனே நமக்கு முன்னால் இருக்கும் இருளை நோக்கி முன்னேறிச்செல்வோம். இரும்பு கதவுக்குள்ளே அடைக்கப்பட்டது போன்ற சூழ்நிலைகளானாலும், அவற்றையும் தகர்த்தெறியும்படி நம்மைப் பெலப்படுத்த தேவனால் கூடும். ஆகவே, தேவனை நம்பி துணிந்து முன்செல்லலாம்.

‘கர்த்தர் எனக்காக யாவையும் செய்துமுடிப்பார்” இதுவே நமது அறிக்கையாக இருக்கட்டும். ‘யாவையும்” என்ற சொல் மிகவும் முக்கியம். கடந்தகாலங்களில் கர்த்தர் நம் வாழ்க்கையில் செய்த காரியங்களைத் திரும்பவும் எண்ணிப் பார்த்து, தாவீதைப் போல, ‘தப்புவித்தவர் தப்புவிப்பார்” என்று கூறலாமே! சாதாரண தலைவலியையும் இடுப்பு வலியையும்தானா நம் தேவனால் குணப்படுத்த முடியும்? ‘ஆராய்ந்து முடியாத பெரிய காரியங்களையும், எண்ணிமுடியாத அதிசயங்களையும் அவர் செய்கிறார்” (யோபு 9:10). ஆகையால் சகோதரனே, சகோதரியே, யாராலும் தீர்க்கமுடியாத  உன் பிரச்சினைகள் மத்தியிலும், ‘கர்த்தரே எனக்காக யாவையும் செய்துமுடிப்பார்” என்று தைரியமாக அறிக்கைபண்ணு. தேவன் உன் காரியங்களை நிச்சயமாகவே செய்து முடிப்பார்.

? இன்றைய சிந்தனைக்கு:

நம் வாழ்வில் சோர்வு வருவதற்கான முக்கிய காரணம் என்ன? நாம் விசுவாசத்தில் தளர்ந்துபோனால், அடுத்து என்ன செய்ய வேண்டும்?

? அனுதினமும் தேவனுடன்.

?♂️ எமது விலாசம்

Back to the Bible (Sathiyavasanam),
120 A, Dharmapala Mawatte, Colombo 7, Srilanka.
Email: sathiyavasanam@backtothebible.lk
website: Backtothebible.lk  |  www.Sathiyavasanam.lk
Facebook: www.fb.com/sathiyavasanam
Call: 011-4691500 | 011- 4691532

Solverwp- WordPress Theme and Plugin