? சத்தியவசனம் – இலங்கை. ??

? இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி வேத வாசிப்பு : ஆதியாகமம் 8:1-22

பூமியைச் சபிப்பதில்லை

சுகந்த வாசனையைக் கர்த்தர் முகர்ந்தார். அப்பொழுது கர்த்தர்: இனி நான் மனுஷன் நிமித்தம் பூமியைச் சபிப்பதில்லை, …சங்கரிப்பதில்லை. ஆதியாகமம் 8:21

ஓய்வுநாள் பாடசாலையிலே, நோவா பேழை செய்தான், இரவும் பகலும் நாற்பது  நாட்கள் மழை பெய்தது, வெள்ளம் வந்தது, பேழை மிதந்தது, பின் பேழை அரராத்  மலையில் நின்றது என்று கற்பிப்பார்கள். ஆனால், அப்படியல்ல, அறுநூறு வயதில்  பேழைக்குள் சென்ற நோவா, பேழையை விட்டு வெளிவரும்போது அவனுக்கு அறுநூற்றொரு வயது. கிட்டத்தட்ட வெள்ளம் வந்ததில் இருந்து அவர்கள் பேழையைவிட்டு  வெளிவந்த காலத்தைக் கணக்கிட்டால் அது ஒருவருடமும் ஏழு மாதமுமாகிறது.

பெரியதொரு பணியைச் செய்துமுடித்த ஒரு மனநிறைவுடன் நோவா பேழையைவிட்டு  வெளிவந்திருப்பான். கர்த்தர் சொன்னபடியே ஒன்றும் பிசகாமல் பேழையைச் செய்து, மிருகஜீவன்களையும் அதற்குள் சேர்த்து, அவற்றிற்குத் தேவையான உணவுகளையும் ஆயத்தப்படுத்திக்கொடுத்த நிறைவு நோவாவின் மனதில் இருந்திருக்கும்.  ஆனால் அப்படிப்பட்ட பெருமிதத்துடன் நோவா பேழையை விட்டு வெளிவரவில்லை.  தான் பெரிதாக எதையோ சாதித்ததாக எண்ணிக் கர்வம் கொள்ளவுமில்லை. அவன்  வெளியில் வந்ததும் செய்த முதலாவது காரியம் தேவனுக்கு ஒரு பலிபீடத்தைக் கட்டி, சுத்தமான மிருகங்கள், பறவைகளில் சிலவற்றை தகனபலியிட்டதுதான் என்பதை  நாம் இன்று கவனிக்கவேண்டும். சுகந்த வாசனையை முகர்ந்த கர்த்தர், “நான் இனி  மனுஷன் நிமித்தம் பூமியைச் சபிக்கமாட்டேன்” என்றார். அன்று ஆதாமிடம், “உன்னி மித்தம் பூமி சபிக்கப்பட்டது” என்ற கர்த்தர் (ஆதி 3:17), இங்கே நோவாவின் செயலால் அந்த சாபத்தை எடுத்துப்போட்டார். இனி சபிக்கமாட்டேன் என்றார். அன்று, “பூமி  முள்ளும் குருக்கும் முளைப்பிக்கும்” என்ற தேவன், இங்கே “விதைப்பும் அறுப்பும்  இருக்கும்” என்கிறார். நோவாவின் பணியும், அவனது தாழ்மையும், அவனது நன்றியறித லின் செயலும் தேவனின் இரக்கத்தை பூமிக்குக் கொண்டு வந்ததல்லவா!

நாமோ இன்று ஒரு சிறு பணியைச் செய்துவிட்டு எவ்வளவாகப் பெருமை பாராட்டுகிறோம். நோவாவிடமிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம் நிறையவே இருக்கிறது. நோவா தனது பணியில் அர்ப்பணத்துடன் செயற்பட்டார். பணியை  நிறைவேற்றத் தனக்குத் துணை நின்ற தேவனுக்கு நன்றிசெலுத்தத் தவறவில்லை.  நாமும் இப்படியான மனநிலையில்தான் இறைபணியைச் செய்யவேண்டும். நாம் எவ்வளவு செய்தாலும், அதன் மகிமையெல்லாம் தேவனை மாத்திரமே சென்றடைய வேண்டும். எங்களுக்கு அல்ல, கர்த்தாவே, எங்களுக்கு அல்ல, உமது கிருபையினி மித்தமும், உமது சத்தியத்தினிமித்தமும், உம்முடைய நாமத்திற்கே மகிமை  வரப்பண்ணும். சங்கீதம் 115:1

? இன்றைய சிந்தனைக்கு:   

உலகத்தில் எனது பணியோ, கர்த்தருக்கென்று பிரத்தியேக மான பணியோ எதுவானாலும் என் மனநோக்கு எப்படிப்பட்டது?

? அனுதினமும் தேவனுடன்.

Solverwp- WordPress Theme and Plugin