? சத்தியவசனம் – இலங்கை. ??

? இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி வேத வாசிப்பு : லூக்கா 1:28

நம்பி ஒப்புக்கொடுத்தாள்

 இதோ, நான் ஆண்டவருக்கு அடிமை, உம்முடைய வார்த்தையின்படி எனக்கு ஆகக்கடவது… லூக்கா 1:38

வங்கியிலோ, அல்லது தனிப்பட்ட நபரிடமோ பணம் கேட்டுப் போகும்போது, அடமானமாக நம்பிக்கைக்கு ஏதாவது ஒரு பொருளை முதலீடு செய்யும்படி கேட்பார்கள். காரணம், தற்சமயம் பணத்தைத் திருப்பிக்கொடாவிட்டால், அந்த முதலீட்டை எடுத்துக்கொள்ளலாம் என்ற ஒரு எண்ணம்தான். சிலரிடம் ஒரு விடயத்தைச் சொல்லும்போது, நீங்கள் சொல்லுவது உண்மையென்று நான் எப்படி நம்புவது என்பார்கள். இப்படியாக மனிதனை, மனிதன் நம்பமுடியாத ஒரு நிலைமைக்குள் நாம் தள்ளப்பட்டுக் கிடக்கிறோம்.

மரியாள் சற்றும் எதிர்பாராத நேரத்தில், அவள் முன்பாக தேவதூதன் தோன்றி, “கிருபை பெற்றவளே, வாழ்க. கர்த்தர் உன்னுடனே இருக்கிறார். ஸ்திரீகளுக்குள்ளே நீ ஆசீர்வதிக்கப்பட்டவள்” என்றபோது, மரியாளுக்கு சந்தோஷமோ, நம்பிக்கையோ வரவில்லை. மாறாக பயமும், திகிலுமே குடிகொண்;டது. இந்த வாழ்த்துதலுக்கு என்ன அர்த்தம் என்றே அவள் சிந்தித்துக்கொண்டிருந்தாள். தேவதூதன் அவளை நோக்கி, “பயப்படாதே, நீ தேவனிடத்தில் கிருபை பெற்றாய். நீ கர்ப்பவதியாகி ஒரு குமாரனைப் பெறுவாய்” என்றபோது, “இது எப்படி சாத்தியமாகும். நான் புருஷனை அறியேனே” என்கிறாள் மரியாள். அதற்குத் தூதன், “பரிசுத்தாவி உன்மேல் வரும், உன்னதமானவருடைய பலம் உன்மேல் நிழலிடும், ஆதலால் உன்னிடத்தில் பிறக்கும் பரிசுத்தமுள்ளது, தேவனுடைய குமாரன் எனப்படும். தேவனால் கூடாத காரியம் ஒன்றுமில்லை” என்கிறான். இது ஒரு அசாத்தியமான, வழமைக்கு முற்றிலும் மாறுபட்ட ஒன்று. ஆனாலும் மரியாள் தேவனால் கூடாத காரியம் ஒன்றுமில்லை என்பதை முற்றிலுமாய் நம்பினாள். அந்தக்கணமே, அவள் தன்னை நம்பி ஒப்புக்கொடுத்தாள்.  அந்தநேரத்தில் அவளுக்கு அது ஏற்றுக்கொள்வதற்கு பெரும் பாரமான காரியமாக இருந்திருக்கலாம். ஏனெனில், அவள் திருமணத்திற்கென்று நிச்சயிக்கப்பட்ட ஒரு கன்னியாக இருந்தாள்.

திடீரென நீ கர்ப்பவதியாகப் போகிறாய் என்பது எவ்வளவு பெரிய அதிர்ச்சிதரும் செய்தி. என்றாலும், மரியாளோ, “இதோ, நான் ஆண்டவருக்கு அடிமை, அவருடைய சித்தப்படியே ஆகக்கடவது” கர்த்தரை நம்பி அவருடைய திட்டத்துக்குத் தன்னை ஒப்புக்கொடுத்தாள். மரியாளின் இந்த நம்பிக்கைக்கு முன்பாக, நாம் தேவன்மீது வைத்திருக்கும் நம்பிக்கை எம்மாத்திரம்!

எமது விருப்பங்கள் யாவையும் ஒருபுறம் ஒதுக்கி வைத்துவிட்டு, அவர் சித்தம் செய்ய எம்மை அடிமைகளாக ஒப்புக்கொடுக்க நாம் ஆயத்தமா? சுயாதீனமுள்ளவர்களாக இருந்தும், உங்கள் சுயாதீனத்தைத் துர்க்குணத்திற்கு மூடலாகக் கொண்டிராமல், தேவனுக்கு அடிமைகளாயிருங்கள். 1பேதுரு 2:16

? இன்றைய சிந்தனைக்கு:

பாவ அடிமைத்தனத்திலிருந்து என்னை மீட்டவருக்கு அடிமையாக என்னை ஒப்புக்கொடுக்க நான் ஆயத்தமா? :

? அனுதினமும் தேவனுடன்.

Solverwp- WordPress Theme and Plugin