? சத்தியவசனம் – இலங்கை. ??

? இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி வேத வாசிப்பு : 2கொரி 1:1-11

பாதுகாப்பின் நம்பிக்கை

நாங்கள் எங்கள்மேல் நம்பிக்கையாயிராமல், மரித்தோரை எழுப்புகிற தேவன்மேல் நம்பிக்கையாயிருக்கத்தக்கதாக, மரணம் வருமென்று நாங்கள் எங்களுக்குள்ளே நிச்சயித்திருந்தோம். 2கொரிந்தியர் 1:9

பலவித பயங்கள் உண்டு. ஆனால் மரண பயமே எல்லாவற்;றையும் விட அதிகூடிய பயத்தைக் கொடுக்கிறது என்றால் மிகையாகாது. இந்த மரணபயத்தைக் காட்டித்தான், கள்ளரும் கொள்ளைக்காரரும் சம்பாதிக்கிறார்கள். குடும்பங்களில் பிரச்சனைகள் அதிகரிக்கும்போதும் இந்த மரணபயத்தை ஒரு ஆயுதமாகக்கொண்டு தப்பிக்க முயற்சிப்பவர்களும் உண்டு. மரணத்திலிருந்து விடுவிக்கக்கூடிய வல்லமை  நமது ஆண்டவருக்கு மட்டுமே உண்டு. இன்று மரிக்கும் தருவாயில் இருப்பவர்களுக்கு, சிகிச்சையளிக்கும் வைத்தியர்கள் கூட நாம் எங்களால் முடிந்ததை செய்துள்ளோம், மிகுதி ஆண்டவரின் கரத்தில்தான் உண்டு என்பர். பிறப்பும், இறப்பும் எமது கைகளில் இல்லை என்பதுதான் உண்மை. ஒரு உயிர் இவ்வுலகிற்கு வருவதும், ஒரு உயிர் இவ்வுலகை விட்டுப் பிரிவதும் எப்போது என்பது நம் எவருக்குமே தெரியாத ஒரு புதிரே.

இங்கே பவுல் கொரிந்தியருக்கு எழுதும்போது, “மரணம் வருமென்று நிச்சயித்திருந்த சமயத்தில், நாங்கள் எங்கள்மேல் நம்பிக்கையாயிராமல், மரித்தோரை எழுப்புகிற தேவன்மேல் நம்பிக்கையாயிருக்கத்தக்கதாக” என்றே எழுதுகிறார். அதுமட்டுமல்லாமல் அப்படிப்பட்ட மரணத்தினின்றும் தேவன் எங்களைத் தப்புவித்தார், இப்பொழுதும் தப்புவிக்கிறார், இன்னமும் தப்புவிப்பார் என்று அவரை நம்பியிருக்கிறோம் என்கிறார். மரணத்தை சந்திக்க நேரிடும் சமயத்தில் தேவனால் மாத்திரமே அதிலிருந்து விடுவிக்க முடியும். மனிதனுடைய எந்த முயற்சியும், பலனளிக்காது.

இதைத்தான் தாவீது தன் சங்கீதத்திலே நான் மரண இருளின் பள்ளத்தாக்கிலே நடந்தாலும் பொல்லாப்புக்குப் பயப்படேன், தேவரீர் என்னோடே கூட இருக்கிறீர் என்கிறார். இன்று நாம் வாழும் காலங்கள், எமது உயிருக்கு உத்தரவாதமற்ற காலங்

களாகவே மாறிவருகிறது. திடீரென காலநிலை மாற்றங்கள், கொள்ளைநோய்கள், விபத்துக்கள், இப்படியாக எந்த நேரத்திலும் எதுவும் நடக்கலாம் என்றதான ஒரு காலத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். இப்படிப்பட்ட சூழ்நிலையில் எமது பாதுகாப்பின் நம்பிக்கை என்ன? எமது திறமைகளை நம்புகிறோமா, எமது அனுபவங்களை நம்புகிறோமா, அல்லது தேவனை மாத்திரம் நம்புகிறோமா?

மரணம் ஏற்படுமோ என்ற எண்ணம் வந்தபோது, நாங்கள் எங்களை நம்பாமல் தேவன் மீது நம்பிக்கையாயிருந்தோம் என்று பவுல் எழுதுகிற காரியம் எமது அனுபவமாகவும் இருக்கின்றதா என்பதனை சிந்தித்துப் பார்ப்போம். அப்படியில்லாவிட்டால், நமது நம்பிக்கையை நாம் வேறு எதிலோ வைத்திருக்கிறோம் என்பதே காரியம். அதை மாற்றுவோம். கிறிஸ்து இயேசுவினாலே ஜீவனுடைய ஆவியின் பிரமாணம் என்னைப் பாவம் மரணம் என்பவைகளின் பிரமாணத்தினின்று விடுதலையாக்கிற்றே. ரோம 8:2

? இன்றைய சிந்தனைக்கு: 

  பரிகரிக்கப்படும கடைசிச் சத்துரு மரணம்.

? அனுதினமும் தேவனுடன்.

Solverwp- WordPress Theme and Plugin