? சத்தியவசனம் – இலங்கை. ??

? இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி வேத வாசிப்பு : கொலோ 3:1-15

என் பெறுமதி என்ன?

பின்பு தேவன்: …மனுஷனை உண்டாக்குவோமாக என்றார். ஆதியாகமம் 1:26

ஓய்வுநாள் பாடசாலை சிறுவர்கள் முதற்கொண்டு, வேதாகமத்தை வாசிக்கும் பெரியவர்கள் வரை தேவனுடைய சிருஷ்டிப்பைப் பற்றியும், மனுஷனை தேவன் படைத்தது பற்றியும் அறிந்துவைத்துள்ளோம். ஆனால் எப்போதாவது அமர்ந்திருந்து, தேவன் நம்மை எப்படி, என்னமாதிரி, யாரைப்போல படைத்தார் என்றும், ஒவ்வொருவரும் ஒவ்வொருவரிடமிருந்து வேறுபட்டிருக்கிறோம் என்றும், நமது பெறுமதி என்ன, நமது தாற்பரியம் என்ன என்றும் சிந்தித்திருக்கிறோமா? சிந்தித்தால் நாம் யார் என்பதைnஉணர்ந்திருப்போம். உணர்ந்திருந்தால் நமது பெறுமதி என்னவென்பதை அறிந்திருப்போம். அறிந்திருந்தால், சிருஷ்டிகரை நாம் முழு மனதுடன் நேசிக்கவும், நமது தனிப்பட்ட வாழ்வில் அவரை அறிந்து அனுபவிக்கவும், நம்மைச் சூழவுள்ள மக்கள் மத்தியில் பெறுமதிமிக்கவர்களாக வாழவும் அந்த அறிவு நமக்கு நிச்சயம் உதவியிருக்கும். முறுமுறுப்புகளும், நம்மைப்பற்றிய தாழ்வான எண்ணங்களும், எதுவும் நம்மை ஒன்றும் செய்யமுடியாது.

வானத்தையும் பூமியையும் படைத்து, ஒழுங்காக்கி, அழகாக நிரப்பி முடித்துவிட்டு, மனுஷனைப் படைக்கிறார் தேவன். அதன்போது, தமது அநாதித் திட்டத்தை அங்குnதேவன் வெளிப்படுத்தினார். “நமது சாயலாகவும், நமது ரூபத்தின்படியேயும் மனுஷனைnஉண்டாக்குவோமாக” என்கிறார். அப்படியானால் நமது படைப்பு எப்படிப்பட்டது? மற்றந்தவொரு சிருஷ்டிப்பும், தேவதூதர்கள்கூடப் பெற்றுக்கொள்ளாத பெரும்பேறாக, தேவனுடைய மகிமை, அவரது பிரதிபலிப்பு, அவரது குணாதிசயங்கள் யாவும் மனிதராகிய நமக்குத்தான் அருளப்பட்டிருக்கிறது. அவரது சாயல் என்பது அவரது குணாதிசயங்கள். அன்பு, மன்னிப்பின் சிந்தை, படைப்பாற்றல், சுயாதீனம்… இப்படியாக நாம் தேவனுடைய சாயலைப் பிரதிபலிக்கும் படைப்புகளாக இருக்கிறோம். ஆனால் மனிதன் பாவத்தில் விழுந்தபோது அந்த மகிமையின் பிரதிபலிப்பை நாம் இழந்துபோனோம். ஆனாலும், இயேசு கிறிஸ்துவின் இரத்தம் சகல பாவத்திலிருந்தும் நமக்கு மீட்பளித்ததால், இன்று நம்மைச் சிருஷ்டித்தவருடைய சாயலுக்கொப்பாக புதிதாக்கப்பட்டவர்களாய் இருக்கிறோம் என்பது எத்தனை பாக்கியம்! அப்படியிருக்க, இன்னும் நாம் பாவத்தின் சாயலையே வெளிப்படுத்தி, தேவன் நமக்களித்த அளப்பரிய பெறுமதியை அவமதிக்கலாமா?

நம்முடைய பெறுமதி நம்முடைய புகழிலும் சொத்திலும் படிப்பிலும் தராதரத்திலும் இல்லை; நாம் தேவசாயலைத் தரித்தவர்கள் என்பதே நமது மேலான பெறுமதி. ஆனால், மனித இனம் இன்று தேவனை அறியாதவர்களாக அவர் அளித்த பெறுமதியை இழந்துநிற்கிறது. இதன் விளைவு யுத்தங்கள், பஞ்சங்கள். இன்று நமது பெறுமதியைப் புதுப்பித்துக்கொள்வோம்; பிறரும் அவர்களது பெறுமதியை உணர்த்துவோம்.

? இன்றைய சிந்தனைக்கு:  

பாவத்தில் விழுந்து தன் பெறுமதியை இழந்துபோன மனிதன், இன்று கிறிஸ்துவுக்குள் அதை மீண்டும் பெற்றிருக்கிறான் அல்லவா!

? அனுதினமும் தேவனுடன்.

Solverwp- WordPress Theme and Plugin