? சத்தியவசனம் – இலங்கை. ??

? இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி வேத வாசிப்பு : ரோமர் 4:16-25

சர்வவல்ல தேவன்

…நான் சர்வவல்லமையுள்ள தேவன். நீ எனக்கு முன்பாக நடந்துகொண்டு உத்தமனாயிரு.ஆதியா கமம் 17:1

வானத்தையும் பூமியையும் அவற்றிலுள்ள யாவையும் உற்று நோக்கினால், எவருமே ஆச்சரியப்படாமல் இருக்கமுடியாது. தேவன் யாவையும் எவ்வளவு அருமையாகப் படைத்திருக்கிறார். வெளிச்சம் கொடுப்பதற்கென்றே சூரியன் படைக்கப்பட்டதென்று என் சிறுவயதிலே நினைத்ததுண்டு. ஆனால் வெளிச்சத்தைப் படைத்து, அதற்குப் பகல் என்று பெயரிட்டு, அந்தப் பகலை ஆளுவதற்கே தேவன் சூரியனைப் படைத்தார் என்பதை அறியவந்தபோதுதான், முதல் நாளில் உண்டான வெளிச்சம் தேவனுடையது என்ற அறிவு கிடைத்தது. ஒவ்வொரு மிருகங்களையும், பிராணிகளையும், பறவைகளையும் அவ்வவற்றின் இருப்பிடங்கள், மற்றும் அவை வாழும் முறைமைகளை சிந்தித்துபார்ப்போம். ஒவ்வொரு சிருஷ்டிக்கும் அவற்றிற்கேற்ப காரியங்களை தேவன் நேர்த்தியாகவே அமைத்துக் கொடுத்திருக்கிறார். தமது சிருஷ்டிகளை தேவன் பாதுகாக்கிறார்; போஷிக்கிறார். “காக்கைக்குஞ்சுகள் தேவனை நோக்கிக் கூப்பிட்டு, ஆகாரமில்லாமல் பறந்து அலைகிறபோது, அவைகளுக்கு இரையைச் சவதரித்துக் கொடுக்கிறவர் யார்?” (யோபு 38:41) என்று கர்த்தர் யோபுவிடம் கேட்ட கேள்வி நம்மையும் இந்த நாளிலே சிந்திக்க வைக்கட்டும். நம் தேவன் உண்மையிலேயே ஆச்சரியமானவர். இப்படிப்பட்ட தேவனுக்கு முன்பாக நாம் எப்படி வாழுகிறோம்?

“இல்லாதவைகளை இருக்கிறவைகளைப்போல் அழைக்கிற தேவன்” (ரோமர் 4:17) என்று பவுல் தேவனை மகிமைப்படுத்தினார். ஆபிராம், ஆபிரகாம் என்று பெயர் பெற்றபோது, கர்த்தர் அவருக்குத் தரிசனமாகி, “நான் சர்வவல்லமையுள்ள தேவன்” என்று தம்மை அறிமுகப்படுத்தியதோடு, “நீ எனக்கு முன்பாக நடந்துகொண்டு உத்தமனாயிரு” என்று அவரைப் பெலப்படுத்தினார். இந்த செய்தியையே தேவன் இன்றும் நமக்கு கொடுக்கிறார். நாம் எல்லாவகையிலும் குற்றம்சாட்டப்படாத வாழ்வு வாழ்ந்து அவருக்கு கீழ்ப்படிந்திருக்கவேண்டும். ஏனெனில், அவர் தேவன்; நம்மைப் படைத்தவர். அவர் நம்மிடம் கீழ்ப்படிதல் ஒன்றைத்தவிர, வேறு எதையுமே எதிர்பார்ப்பதில்லை. விசுவாசத்துடன் கீழ்ப்படிந்த ஆபிரகாமுக்கு ஒரு பிள்ளையும் இல்லாதிருந்தபோதே, அவரதுசந்ததியை வானத்திலும் கடற்கரையிலும் காணும்படி ஆபிரகாமின் மனக்கண்களைத் திறந்த இந்த தேவன், ஆபிரகாம் முதிர்வயதினனாகவும், சாராள் சரீரம் செத்து கிழவியாக இருந்தும், வாக்குபண்ணியபடி அவர்களுக்கு ஒரு குழந்தையைக் கொடுத்தவர் சர்வ வல்லமையுள்ளவர் அல்லவா! அவரிடமே இன்று சவால் விடுவதுபோல மனிதன் நடந்துகொள்வது ஏனோ? சர்வவல்லவர் எதையும் செய்ய வல்லவராயிருக்கிறார் என்ற நம்பிக்கையை நாமே பல தடவைகளிலும் இழந்துவிடுவோமானால், பிறருக்கு அந்த நம்பிக்கையை எப்படிக் கொடுப்போம்? இன்று நமது தேசத்துக்கு வேண்டிய நம்பிக்கை சர்வவல்லவரே! நாம் விசுவாசிக்கிறோமா!

? இன்றைய சிந்தனைக்கு:  

சகலத்தையும் படைத்து ஆளுகின்ற சர்வவல்லவரின் கரத்தில் இருப்பதே பாதுகாப்பு என்ற செய்தியை நமது தேசத்துக்கு எடுத்துச்செல்லுகிறவர்கள் யார்?

? அனுதினமும் தேவனுடன்

Solverwp- WordPress Theme and Plugin