? சத்தியவசனம் – இலங்கை. ??

? இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி வேத வாசிப்பு : யாத். 17:8-16

ஊழியர்களைத் தாங்குவோம்

…ஆரோனும், ஊர் என்பவனும்…மோசேயின் கைகளைத் தாங்கினார்கள்…யாத்திராகமம் 17:10,12

வாழ்க்கை கடினமாகும்போது, ஊழியப்பாதை நெருக்கடியாகும்போது யாராவது நம்மைத் தாங்குவார்களா? சாய்ந்துகொள்ள ஒரு தோள் கிடைக்குமா? என்று ஏங்கித் தவிக்கும் சந்தர்ப்பங்கள் உலக வாழ்வில் நமக்கு நிச்சயம் நேரிடத்தான் செய்யும். ஆனால் நாம் தனித்தவர்களே அல்ல. கானானை நோக்கிய பயணத்திலே இஸ்ரவேலருக்குத் தாகமெடுத்ததையும், கன்மலையிலிருந்து கர்த்தர் தண்ணீர் கொடுத்ததை யும் யாத்திராகமம் 17:1-7 வரைக்கும் வாசிக்கிறோம். இந்த ஆறுதலுக்குப் பின்னால் அவர்களுக்கு ஒரு ஆபத்துக் காத்திருந்;தது. ரெவிதீமிலே அமலேக்கியர் வந்து இஸ்ரவேலோடு யுத்தம் பண்ணினார்கள். அதற்காக மோசே கலங்கவில்லை. மனிதரைத் தெரிந்துகொண்டு யுத்தத்தை நடத்தும்படி யோசுவாவிடம் கூறிய மோசே, மலையுச்சிக்குச்சென்று தேவனுடைய கோலைத் தன் கையில் பிடித்துக்கொண்டு நின்றார். நடந்தது என்ன? மோசே தன் கையை ஏறெடுத்தபோது இஸ்ரவேலர் மேற்கொண்டார்கள்; அவன் தன் கையைத் தாழவிடுகையில் அமலேக்கு மேற்கொண்டான். உயர்த்தியிருந்த மோசேயின் கைகள் தளர்ந்தன. அப்போது, ஆரோனும், ஊர் என்பவனும் ஒரு கல்லின்மேல் மோசேயை உட்காரவைத்து, மோசேயின் தளர்ந்துபோன கரங்களைத் தாங்கிப் பிடித்துக்கொண்டிருந்தனர். மோசேயின் கைகள் சூரியன் அஸ்தமிக்கும்வரைக்கும் ஒரே நிலையியிருந்தது. இதனால் இஸ்ரவேல் மக்கள் வெற்றி பெற்றனர்.

அமலேக்கியர் மேற்கொள்ளாதபடிக்கும், இஸ்ரவேலர் வெற்றிபெறவும்வேண்டி மோசே தன் கரங்களை பரத்துக்கு நேராக உயர்த்தியபடியே நின்றார். இன்று சாத்தானுக்கு விரோதமான யுத்தத்திலே தேவஜனம் தோற்கடிக்கப்படாதடிக்கு அவர்களுக்காக இடைவிடாமல் தங்கள் கரங்களை பரத்தை நோக்கி உயர்த்தி ஜெபிக்கின்ற ஊழியர்களை தேவன் எழுப்பித் தந்துள்ளார். இவர்கள்; தேவனால் ஒரு விசேஷ ஊழியத்துக்கென தெரிந்துகொள்ளப்பட்டவர்கள். உலகின் சிற்றின்பங்களையும், உயர் பதவிகளையும், அந்தஸ்துக்களையும், சொத்துக்களையும் விட்டு, அநேகரை இயேசுவுக்குள் வழிநடத்தும்படிக்குத் தங்களையே ஒப்புக்கொடுத்து உழைத்து வருகிறவர்கள். ஆனால் இவர்களும் மனுஷரே. இவர்களுக்கும் சோர்வுகள் வரத்தான் செய்யும். இன்னும் சிலர் கிறிஸ்துவின் நற்செய்திக்குத் தடைவிதித்துள்ள பல இடங்களிலே, தங்கள் உயிரையும் பாராமல் சுவிசேஷத்தை அறிவித்து வருகிறார்கள். இவர்களுக்கு பயமுறுத்தல்கள், கொலை மிரட்டல்கள் ஏராளம். அப்போது இவர்கள் சோர்ந்துவிடக்கூடும். அன்று ஆரோனும் ஊரும் மோசேயைத் தாங்கியதுபோல இவர்களைத் தாங்கவேண்டிய பொறுப்பு இன்று நமக்குரியது. ஆகவே நமது ஊழியர்களை ஜெபத்தாலும் பணத்தாலும் பல வித வழிகளில் தாங்கி ஊக்கப்படுத்த இந்நாளிலே நம்மை ஒப்புக்கொடுப்போம்.

? இன்றைய சிந்தனைக்கு: 

  நமது நாளாந்த ஜெபங்களிலே எத்தனை ஊழியரை நாம் தாங்குகிறோம். பெயர்களை எழுதிவைத்து அவர்களுக்காக ஜெபிக்க இன்றே ஆரம்பிப்போமா!

? அனுதினமும் தேவனுடன்.

Solverwp- WordPress Theme and Plugin