? சத்தியவசனம் – இலங்கை. ??

? இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி வேத வாசிப்பு : யாத். 14:13-31

கர்த்தர் உனக்காக யுத்தம்பண்ணுவார்!

கர்த்தர் உங்களுக்காக யுத்தம்பண்ணுவார், நீங்கள் சும்மாயிருப்பீர்கள்… யாத்திராகமம் 14:14

சத்துருவின் பிடியிலிருந்து யார் என்னைக் காப்பாற்றுவார்? அபாண்டமான வழக்கிலிருந்து என்னை விடுவிக்க யார் வருவார்? வேலை ஸ்தலத்திலும், வீட்டிலும் நடக்கின்ற அநியாயத்திற்கு எதிராக யார் எனக்காக நீதி செய்வார்? இன்று தேசத்தின் கொடிய பஞ்சத்தால் குடும்பம் தவிக்கிறதே, இந்தப் பஞ்சத்தில் என் குடும்பத்தை யார் காப்பாற்றுவார்? இப்படிப்பட்ட மனப்போராட்டத்தில் நம்மில் பலர் சிக்கியிருக்கலாம். எனினும், நாம் ஆராதிக்கிற தேவன் எப்படிப்பட்டவர் என்பதை நாம் மறந்துபோகக்கூடாது.

மகா வல்லமையாக எகிப்திலிருந்து விடுவிக்கப்பட்டு, சுதந்திரக் காற்றை சுவாசித்துக் கொண்டு, மிக்க மகிழ்ச்சியுடன் சிவந்த சமுத்திர வழியாய் பயணித்த இஸ்ரவேலை மீண்டும் ஆபத்துச் சூழ்ந்துகொண்டது. எகிப்தியர் பார்வோனின் பலத்த சேனையுடன் மீண்டும் இஸ்ரவேலைத் தொடர்ந்தார்கள். இவர்களைக் கண்ட இஸ்ரவேலர் மிகவும் பயந்து, தங்களை எகிப்திலேயே விட்டிருந்திருக்கலாமே, இப்போது தங்களை அவர்கள் கைக்கு விடுவிப்பது யார் என்று கூக்குரலிட்டார்கள். அப்பொழுது மோசே, “பயப்படாதிருங்கள்” கர்த்தர் உங்களுக்காக யுத்தம்பண்ணுவார்” என்றார். ஆம்! கர்த்தரே யுத்தம் பண்ணினார். முன்னே செல்லத் தடையாய் நின்ற சிவந்த சமுத்திரத்தையே பிரித்தார் கர்த்தர். தரைவழியாய் நடப்பதுபோல மக்கள் நடந்து கடந்துசென்று அக்கரை சேர்ந்தனர். அதே வழியாய் தொடர்ந்து வந்த எகிப்திய சேனையை, அதே சமுத்திரத்தில் அமிழ்த்தி அழித்துப்போட்டார் ஆண்டவர். இது கட்டுக்கதை அல்ல; சரித்திரம்.

இதே கர்த்தரையே நாம் இன்றும் ஆராதிக்கிறோம். “உன்னோடே போராடினவர்களை தேடியும் காணாதிருப்பாய்; உன்னோடே யுத்தம்பண்ணின மனுஷர் ஒன்றுமில்லாமல் இல்பொருளாவார்கள்” (ஏசா.41:12) என்கிறார் கர்த்தர். அவர் “நீதிபரர்” (ஏசா.53:11) நீதிபரரான இயேசு கிறிஸ்து நமக்காக பிதாவினிடத்தில் பரிந்து பேசுகிறவராயிருக்கிறார்(1யோவா.2:1). நீதியும் நியாயங்களும் குழிதோண்டி புதைக்கப்பட்டிருக்கும் இந் நாட்களிலே, விசேஷமாக கர்த்தருடைய பிள்ளைகளைச் சூழ்நிலைக் கைதிகளாக்கி, தன் வலைக்குள் சிக்கவைக்க சத்துரு வகைபார்த்துச் சுற்றிக்கொண்டிருக்கிறான். ஆனால் நாம் கலங்கத்தேவையில்லை, கலங்கவுங்கூடாது. ஏனெனில், இந்த உலக நீதிபதிகளே நம்மைக் கைவிடலாம், ஆனால் நாம் நம்பியிருக்கும் நீதிபரர் இயேசு நம்மை ஒருபோதும் கைவிடார். நம்மை மீட்டவர் தம்மண்டை கொண்டுசேர்ப்பார். விசுவாசத்தோடு நமது வழக்கை அவரிடம் விட்டுவிடுவோம். புலம்பி அழுவதை விடுத்து, குறுக்கு வழிகளை நாடுவதைத் தவிர்த்து, சத்துருவின் வஞ்சகத்தைப் பகுத்தறிந்து அதிலிருந்து விலகி, “கர்த்தர் நமக்காக யுத்தம்பண்ணுவார்” என்ற முழு விசுவாசத்துடன் அவரிடம் சகலத்தையும் ஒப்புவித்துவிடுவோமாக.

? இன்றைய சிந்தனைக்கு:  

முன்னே கொந்தளிக்கும் சமுத்திரம், பின்னே எகிப்திய சேனை; இப்படிப்பட்ட நெருக்கமான சூழ்நிலையில் கர்த்தரை நம்பி அவரைச் சார்ந்திருப்பது கடினமா? சாத்தியமா?

? அனுதினமும் தேவனுடன்.

Solverwp- WordPress Theme and Plugin