? சத்தியவசனம் – இலங்கை. ??

? இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி வேத வாசிப்பு : யாத். 14:1-4, 21-28

ஏன் இந்த வனாந்தரப் பாதை?

தேவன் அவர்களை… சிவந்த சமுத்திரத்தின் வனாந்தரவழியாய் …சுற்றிப் போகப்பண்ணினார் யாத்திராகமம் 13:17,18

“தலையைச் சுற்றி மூக்கைத் தொடுவதுபோல” என்று பேச்சுவாக்கில் நாம் சொல்வதுண்டு. சிலசமயங்களில் நமது வாழ்விலும் அப்படியேதான் நடக்கின்றது. நேர்பாதை ஒன்றிருக்க, சுற்றுவழிப் பாதையில் யாரும் போவாரா? ஆனால், அன்று கர்த்தர் தமது மக்களை அப்படியேதான் நடத்தினார்.

எகிப்தின் கொடுமையான அடிமைத்தனத்திலிருந்து இஸ்ரவேல் மக்களை, தமது வல்லமையினாலே மோசேயைக்கொண்டு விடுவித்த கர்த்தர், கானான் சென்றடைய பாதையையும் வகுத்தே கொடுத்தார். பெலிஸ்தரின் தேசத்தின் வழியாய் செல்லுவது மிகவும் சமீபமான வழியானாலும், கர்த்தரோ, அந்த வழியை விடுத்து, சுற்றுவழியாக வனாந்தரப் பாதையிலே நடத்திச் சென்றார். ஒரு குறிப்பிட்ட இடத்தைச் சென்றடைய, விரைவாகச் சென்றடையத்தக்க இலகுவழியைத் தெரிந்தெடுப்பதே யதார்த்தம். கர்த்தரோ அதைத் தவிர்த்து, வனாந்தர வழியாக சுற்றி நடத்தியது என்ன? அடிமைகளாக இருந்த அவர்களால் பெலிஸ்தருக்கு ஈடுகொடுக்கமுடியாமல் இருந்தாலும் கூட, “நானே கர்த்தர் என்பதை எகிப்தியர் அறியும்படி, பார்வோனாலும் அவனுடைய எல்லா இராணுவத்தாலும் மகிமைப்படுவேன்” (யாத்.14:4) என கர்த்தர் கூறினார்.

பாவத்தின் அடிமைத்தனத்திலிருந்து கிருபையாய் மீட்கப்பட்ட நமது வாழ்வு இனி இலகுவானதே என்று நினைக்கக்கூடாது. நாம் வளரவேண்டும், பெலப்படவேண்டும், சுயமாக தேவனைச் சார்ந்து நிற்கின்ற உறுதியைப் பெறவேண்டும்; இதற்கெல்லாம் வனாந்தரம்போன்ற சூழ்நிலைகளைக் கடக்கவேண்டியது மிக அவசியம். ஆனால் நாமோ, ஏன் இந்தக் கடினபாதை என்று குழம்பி நிற்கிறோம். ஆண்டவர் இயேசுவின்

வாழ்விலும் வனாந்தரம் குறுக்கிட்டது; பாடுகள் வந்தன. அவர் தமது வல்லமையைப் பிரயோகித்து சுலபமாகவே தமது பணியை முடித்திருக்கலாம். ஆனால் இயேசு ஒரு சுற்றுவழியையே தெரிந்தெடுத்திருந்தார். இயேசு பாடுபட்டு சிலுவையில் மரித்திருக்காவிட்டால்,  உயிரோடே எழுந்திருந்திருக்க முடியாது. அவர் உயிரோடெழுந்திருக்காவிட்டால் மரணம் ஜெயமாக விழுங்கப்பட்டிராது. பாவத்தின் சம்பளமாகிய மரணம் தோற்கடிக்கப்பட்டதால், சாத்தான் முறியடிக்கப்பட்டான். கர்த்தருடைய நாமம் மகிமைப்பட்டது. தனிமை, பயம், ஆபத்து நிறைந்த வனாந்தரப் பாதைகளில்தான் கர்த்தரின் வல்லமையை அதிகமாக உணரமுடியும். அன்று எந்த இராணுவத்தால் பார்வோன் இஸ்ரவேலை அழிக்க வந்தானோ, அதே இராணுவம் சமுத்திரத்தில் அழிந்துபோனது. ஆகவே, சுற்றுவழியை நினைத்து, வனாந்தரத்தின் கடின அனுபவங்களை நினைத்து சோர்ந்துபோகவேண்டாம். கர்த்தருடைய நாமம் மகிமைப்படும் தருணம் இதுவே என்பதால் மகிழ்ச்சியோடே முன்செல்லுவோமாக.

? இன்றைய சிந்தனைக்கு:

   தேசத்தின் இன்றைய நெருக்கடியென்ன, நமது தனிப்பட்ட வாழ்வின் வனாந்தர அனுபவமானால் என்ன; தேவநாமம் மகிமைப்பட இன்னமும் நாம் தேவனையே சார்ந்துநிற்போமா?

? அனுதினமும் தேவனுடன்.

Solverwp- WordPress Theme and Plugin