? சத்தியவசனம் – இலங்கை. ??

? இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி வேத வாசிப்பு : மத்தேயு 15:7-20

சுத்தமான இருதயம்

இருதயத்தின் நிறைவினால் வாய் பேசும். மத்தேயு 12:34

பாதையில் அவசரமாகச் சென்றுகொண்டிருந்த போதகர், ஒரு வீட்டுக்குள்ளிருந்து வந்த பலத்த சத்தத்தைக் கேட்டு, “இது எமது சபை அங்கத்தவர் ஒருவரின் வீடு அல்லவா. உள்ளே என்ன கூச்சலும் சத்தமுமாக இருக்கிறது” என்று தன் நடையை சற்றே தளர்த்தி, அங்கு நடக்கும் சண்டையைக் கேட்டு கொண்டிருந்தார். அவரால் நம்பவே முடியவில்லை. ஒவ்வொரு வாரமும் ஆலயத்தில் தேவனைத் துதித்துப் போற்றும் ஒரு நல்ல கிறிஸ்தவனுடைய வாயிலிருந்தா இத்தனை கீழ்த்தரமான பேச்சு?

குடும்பம் என்று இருந்தால் அங்கு கருத்து வேறுபாடுகளுக்கும், நல்ல ஆரோக்கியமான விவாதங்களுக்கும் இடமுண்டு. ஆனால் இவர் கீழ்த்தரமான வார்த்தையினால் தன் குடும்பத்தில் உள்ளவர்களை இப்படியாகப் பேசுகிறாரே. இதை அவரால் நம்பவே முடியவில்லை. இப்படியாக அவர் யோசித்துக் கொண்டிருக்கும்போது, உள்ளே கோபத்தோடு பேசிக்கொண்டிருந்த சகோதரன் திடீரென வீட்டின் கதவுகளைத் திறந்துகொண்டு வெளியே வந்தார். வாசலில் நின்றுகொண்டிருந்த தன் சபை போதகரைக் கண்டதும் அவருக்கு என்ன செய்வதென்று தெரியாமல் வெட்கித் தலைகுனிந்தார்.

“பானையிலுள்ளதுதான் அகப்பையில் வரும்” என்று சொல்லுவார்கள். நமது இருதயத்திலுள்ளதுதான் வார்த்தையாக வெளிவரும். ஒரு காரியத்தை நாம் உணரவேண்டும். நமது சரீரம் ஒருங்கிணைந்து இயங்கும் ஒரு அமைப்பாகும். ஒவ்வொரு அவயவமோ உறுப்போ தான் விரும்பியபடி இயங்கமுடியாது. எல்லாவற்றின் கட்டுப்பாடும் மேலே மூளையிலிருக்கிறது. இது ஒருபுறம் இருக்க, நாம் கேட்பவை, பார்ப்பவை, பேசுபவை எல்லாமே ஒன்றோடொன்று தொடர்புடையன. காதினால் கேட்பவை நமது மூளைக்குள் பதிவாகி, அதற்கான பதில் நமது இருதயத்தில் தோன்றி, அது வாயினால் வெளிவருகிறது. ஆக, நமது அறிவை, இருதய நினைவுகளை நாம் எதினால் நிரப்புகிறோமோ அது நம்மையே யார் என்று வெளிச்சம்போட்டுக் காட்டிவிடும். “நல்ல மனுஷன் இருதயமாகிய நல்ல பொக்கிஷத்திலிருந்து நல்லவைகளை எடுத்துக்காட்டுகிறான்” என்கிறார் இயேசு. அப்போது பொல்லாதவன் பொல்லாததைத்தானே காட்டுவான்! அதை நம்மால் மறைத்து மாய்மாலம் பண்ணமுடியாது. நமது வார்த்தைகளே நமது இருதயத்தின் கண்ணாடி. ஒருவன் தன்னை விசுவாசி என்று கூறிக்கொண்டாலும், இருதயம் கோபம், பொய், வஞ்சனை, பொறாமை, பெருமை, அகங்காரம் போன்ற குணங்களால் நிறைந்திருக்குமானால், அவனுடைய வாயிலிருந்து ஒருபோதும் அன்பின் வார்த்தைகள் வெளிப்படமாட்டாது. நமது இருதயம் எதினால் நிரம்பியிருக்கிறது? அதிக நாட்களுக்கு நல்லவர் வேஷம் போடமுடியாது. நமது இருதயம் அழுக்காக, அதிலிருந்து புறப்படும் வார்த்தைகள் நாற்றம் நிறைந்ததாகவும் இருக்குமானால் இன்றே ஆண்டவரிடம் திரும்புவோம். அவர் நம்மை நிச்சயம் சுத்திகரித்துப் புதிதாக்குவார்.

? இன்றைய சிந்தனைக்கு:  

என் வாயின் வார்த்தையால் எவரையும் துக்கப்படுத்தாதபடி, உதடுகளுக்குக் காவல் வைத்து, என் இருதயத்தைச் சுத்திகரிப்பேனாக!

? அனுதினமும் தேவனுடன்.

Solverwp- WordPress Theme and Plugin