? சத்தியவசனம் – இலங்கை. ??

? இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி வேத வாசிப்பு : 1சாமு 3:1-11

சிறுபிள்ளைகள்;

சாமுவேல் என்னும் பிள்ளையாண்டான் …கர்த்தருக்குப் பணிவிடை செய்துகொண்டிருந்தான். 1சாமுவேல் 3:1

பொதுவாக சிறு பிள்ளைகளை பெரியவர்கள் நடத்துகின்ற விதமே வித்தியாசம்தான். அவர்களுடைய கருத்துக்களைப் பெரிதாக பொருட்படுத்துவதும் கிடையாது. அதிலும் சிலர் அவர்களை அற்பமாய் நினைத்து, தங்கள் சுயநலனுக்காக துஷ்பிரயோகிப்பது வேதனைக்குரியது. இன்று சிறுபிள்ளைகள் பலவாறாக துன்புறுத்தல்களுக்கு ஆளாகிவருவது மிகுந்த வேதனைக்குரியது. ஆனால், கருவில் உருவாக முன்பே பிள்ளைகளைஅறிந்திருக்கிற தேவன் சிறுபிள்ளைகளை அதிகமாகவே நேசிக்கிறார். சிறுவர்களை அற்பமாய் எண்ணுகிறவர்கள் தேவனையே அற்பமாக எண்ணுகிறவர்கள் எனலாம்!

சிறு பிள்ளைகள், பிறருக்கு ஆசீர்வாதமாக கர்த்தரால் பயன்படுத்தப்பட்டிருக்கிறார் கள் என்பதற்கு பரிசுத்த வேதாகமத்திலே பல உதாரணங்கள் உண்டு. தேவாலயத் திலே ஏலிக்கு உதவியாக கர்த்தருக்குப் பணிவிடை செய்துவந்தது ஒரு சிறுவன்; அந்த சிறுவன் சாமுவேலுக்கூடாக கர்த்தர், ஆசாரியனாகிய ஏலியோடு பேசினார். இறுதியாக சாமுவேல் வளர்ந்து பெரியவனானபோது, ஒரு தீர்க்கதரிசியாகவும் இஸ்ரவேலை நியாயந்தீர்ப்பவனாகவும் மாறினான். பிள்ளைகளுடைய சிறுபிராயத்திலேயே கர்த்தருடைய வார்த்தையைக் கேட்டு, கீழ்படியக் கற்றுக்கொடுக்கும்போது, அவர்கள் வளர்ந்தபிறகும் கர்த்தருக்குப் பயந்து வாழுவதைப் பிடித்துக்கொள்வார்கள்.

குஷ்டரோகியாயிருந்த சீரியா தேசத்து ராஜாவின் படைத்தலைவனாகிய நாகமானுக்கு ஜீவனுள்ள தேவனின் வல்லமையைக் கூறி, அவன் நோயிலிருந்து குணப்பட கர்த்தரின் தீர்க்கதரிசி ஒருவரை அறிமுகம் செய்து வைத்தது, ஒரு பெரிய ஊழியக்காரனல்ல; இஸ்ரவேலிலிருந்து சிறைப்பிடித்துக் கொண்டுவரப்பட்டவளும், நாகமானின் மனைவிக்கு பணிவிடை செய்துவந்தவளுமாகிய ஒரு சிறு பெண் ஆகும். அவள் சொன்னபடியே நாகமான், எலிசாவிடம் சென்று, குஷ்டரோகத்திலிருந்து குணமடைந்தான். ஆம், கர்த்தர் ஒரு சிறு பெண்ணைக்கொண்டும் பெரிய காரியங்களைச் செய்ய வல்லவர். கர்த்தருடைய ஊழியம் செய்ய, அறிவும் அனுபவமும் நல்லது; ஆனால், தாழ்மையும் அர்ப்பணிப்புமே கர்த்தர் எதிர்பார்க்கும் முதல் தகுதியாகும். நமது பிள்ளைகளை நாம் எப்படிப் பார்க்கிறோம்? அவர்களுக்கு எவ்வளவுக்கு முக்கியத்துவம் கொடுக்கிறோம்? பிள்ளைகள்மூலமாக கர்த்தர் உங்களுடனும் பேசக்கூடும்; உங்கள் தவறுகளை உணர்த்தக்கூடும். சாமுவேலைப்போல தேவசத்தத்தைக் கேட்டு, அதன்படி நடக்க உங்கள் பிள்ளைகளை தேவகரத்தில் ஒப்புக்கொடுத்து வளர்ப்பீர்களா? அச் சிறுமியைப் போன்று தேவனைக்குறித்து மற்றவர்களுக்குச் சொல்ல பிள்ளைகளை ஊக்குவிப்பீர்களா? அவர்கள்தான் நாளைய தேவமனிதராக, அநேகரைக் கர்த்தரண்டை நடத்தும் சேவகர்களாக இருப்பார்களே, யார் அறிவார்?

? இன்றைய சிந்தனைக்கு: 

  பரலோக ராஜ்யத்திற்குள் பிரவேசிக்க சிறுபிள்ளைகளைப் போல மாறவேண்டும் என்பதை நாம் உணர்ந்துள்ளோமா?

? அனுதினமும் தேவனுடன்.

Solverwp- WordPress Theme and Plugin