? சத்தியவசனம் – இலங்கை. ?? 

? இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி: 1இராஜாக்கள் 17:1-6

?  காகங்களைக்கொண்டும்…

அவன் போய் கர்த்தருடைய வார்த்தையின்படியே, யோர்தானுக்கு நேராயிருக்கிற கேரீத் ஆற்றண்டையிலே தங்கியிருந்தான்.  1இராஜாக்கள் 17:5

ஒரு மனிதன் ஒரு ரோல்ஸ் ராயிஸ் கார் வாங்க விரும்பினார். பல மாதங்களாக விரும்பி, சிந்தித்துத் திட்டமிட்டு, கடைசியில் அங்கிருந்த கார் டீலரிடம் சென்று தாம் வாங்க விரும்பிய கார் பற்றிய விபரங்களையெல்லாம் கேட்டறிந்தவன், காரின் விலையையும் கேட்டறிந்தான். பின்னர் கார் பற்றிய முக்கியமான சில தகவல்களையும் கேட்டுக்கொண்டான். அவன் கேட்ட எல்லாக் கேள்விகளுக்கும் விடை கிடைத்தன.  ஒரேயொரு கேள்விக்குமட்டும் அந்த டீலருக்கு விடை தெரியவில்லை. அவர் சேல்ஸ் மெனேஜரிடம் விசாரித்தார். அவருக்கும் தெரியவில்லை. அந்த மானேஜர் இந்தக் கேள்விக்கான விடை என்னவென்று லண்டனில் இருக்கும் தங்கள் தலைமை அலுவலகத்திற்குக் கேபிள் மூலம் செய்தி அனுப்பினார். அங்கிருந்து உடனே பதில் வந்தது. ‘போதுமான அளவு” என்று ஒரு வார்த்தையில் அந்த விடை இருந்தது.

ஆகாப் ராஜாவை எலியா சந்தித்த பின்னர், தேவன் எலியாவுக்கு ஒரு கட்டளை கொடுத்தார், ‘நீ சென்று மறைந்திரு”. கேரீத் ஆற்றங்கரையில் எலியா மறைந்திருக்க ஒரு பெரிய காட்டுப்பகுதி இருந்தது. வறண்டு, தண்ணீரற்று இருந்த காலத்தில் அந்தக் காட்டுப் பகுதியில் எலியா மறைந்திருந்தால் ராஜா சந்தேகப்படவும் தேடவும் மாட்டான். ஆனால் அங்கே வாழ்வது ஒரு சவாலாகும். எலியா அங்கே வாழுவதற்கு, தேவன் ‘போதுமானவராக” இருந்தார். அங்கே இருந்த நீரோடையில் எலியா தண்ணீர் குடிப்பான். அவனுக்குத் தேவையானவைகளைக் காகங்கள் கொண்டுவந்து கொடுக்க தேவன் அவைகளுக்குக் கட்டளை கொடுத்திருந்தார்.

எந்த நெருக்கடியும், சூழ்நிலையும் தேவனுக்குக் கடினமானவை அல்ல. உலகம் தன் பொருட்களைக் காக்கத் தவறும்போது, தேவன் போதுமானவராக இருக்கிறார். உங்கள் தேவைகளைச் சந்திக்க தேவன் கையாளும் முறை உங்களுக்கு ஆச்சரியமாக இருக்கலாம். இந்தப் பிரபஞ்சத்திலுள்ள படைப்புகள் அனைத்தும் அவருக்குக் கீழ்ப்படிந்து, அவருடைய சித்தம் செய்ய ஆயத்தமாயிருக்கிறது. அவர் நமக்குப் போதுமானவராயிருந்து நமது தேவைகளைச் சந்திப்பார். உங்கள் இருதயத்தைத் திடப்படுத்திக் கொள்ளுங்கள். அதோ, தூரத்தில் அடிவானப் பகுதியில் காணப்படும் கறுப்பு நிழல்கள், காகங்களாக இருக்கலாம். தேவன் உங்களைக் கைவிடமாட்டார் என்பதில் உறுதியாயிருங்கள். உங்கள் வாழ்க்கையில் சூழ்நிலைகள் எவ்வளவு கடினமாக இருந்தாலும், அந்நேரங்களில் உங்கள் ஆண்டவர் உங்களுக்குப் போதுமானவராக இருப்பார்.

? இன்றைய சிந்தனைக்கு:

உலகத்தில் மற்றவர்கள் உங்களை ஏமாற்றலாம். ஆனால் தேவன் எப்பொழுதும் உங்களுக்குப் போதுமானவராக இருப்பார்.

? இன்றைய விண்ணப்பம்

எமக்காக தொடர்ந்து உண்மைத்துவமாக ஜெபிக்கின்ற எமது விசுவாச ஜெப தோழர்களுக்காக கர்த்தரைத் துதிப்பதோடு, ஊரடங்கு காலத்தில் தொலைபேசிக்கூடாக அநேகருடன் நாம் பேசி அவர்களை ஊக்கப்படுத்தவும் அவர்களுக்காக ஜெபிக்கவும் கிடைத்த வாய்ப்புக்காக தேவனுக்கு நன்றி செலுத்துங்கள்.

⏩ இன்றைய தியானத்தை எழுதியவர் – இ. வஷ்னீ ஏனர்ஸ்ட். | 0094 771869710

? அனுதினமும் தேவனுடன்.

(இன்றைய தியானத்தை நீங்கள் http://sathiyavasanam.lk/dailyreading/ இணையத்தளத்தில் அல்லது https://www.facebook.com/sathiyavasanam/ முகப்புத்தகத்தில் வாசிக்கலாம். நன்றி.)

Back to the Bible (Sathiyavasanam),
120 A, Dharmapala Mawatte, Colombo 7, Srilanka.
Email: sathiyavasanam@backtothebible.lk
website: www.Sathiyavasanam.lk | Backtothebible.lk
Facebook: www.fb.com/sathiyavasanam
Call: 011-4691500 | 011- 4691532

Comments (185)

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *