? சத்தியவசனம் – இலங்கை.

? இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி வேத வாசிப்பு : மத்தேயு 4:1-11

சோதிக்கப்பட்ட ஆசான்

அப்பொழுது சோதனைக்காரன் அவரிடத்தில் வந்து:… மத்தேயு 4:3

பாடசாலைக்கு பரிசோதகர் (ஐnளிநஉவழச) வருகிறாரென்றால், அவர் என்ன கேள்வி கேட்பாரோ என்று மாணவர்களாகிய எமக்கு ஒரே பயம். ஆனால் துணிவுள்ள ஒரு மாணவி மட்டும் சிறிதேனும் பயமின்றி இருந்தாள். “உனக்குப் பயம் இல்லையா” என்று என்று கேட்டபோது அவள், “ஏன் வீணே பயப்படவேண்டும். நம்மிலும் பார்க்க நமக்கும் சேர்த்து நமது ஆசிரியை பயப்படுவதைப் பாருங்கள். நாம் தவறுவிட்டால் நமக்கல்ல, அவருக்குத்தான் புள்ளி குறையும்” என்றாள்.

கிறிஸ்துவின் பிள்ளைகள் நம்மையும் சோதனைக்காரன் சோதனைக்குள்ளாக்க அடிக்கடி வருகிறான். ஒவ்வொருமுறையும் நம்மைச் சோதனை சூழ்ந்துகொள்கிறது என்று தெரியும்போது, நமது பரம ஆசான் இயேசு கிறிஸ்துவை நாம் நினைவுகூருவோமாக. ஏனெனில், அவர் உலகில் வாழ்ந்திருந்தபோது, ஒரு மனிதன் என்னென்ன விதங்களில் சோதிக்கப்படக்கூடுமோ அத்தனையையும் ஒன்றுதிரட்டி மூன்று விதமான சோதனைகளுக்கு அவர் முகங்கொடுத்திருந்தார். சோதனைகளைக் கண்டு பயந்து அவர் ஓடவில்லை. அந்த மூன்றிலும் நிலைத்து நின்றார்; தடுமாறிப்போகவில்லை. அதற்குக் காரணம், எவ்வித தடுமாற்றமும் இன்றி அந்த மூன்று சோதனைகளையும் அவர் வேதவசனத்தைக் கொண்டே தோற்கடித்தார். அந்த மூன்றிலும் வெற்றி சிறந்தார்; சோதனைக்காரன் தோற்றுப்போய் வெட்கப்பட்டு, அவரை விட்டு விலகினான் என்று வாசிக்கிறோம். ஆம், நமது பரம ஆசான் ஒரு சோதிக்கப்படாத ஆசான் அல்ல. அவர் சோதிக்கப்பட்டும் பாவம் செய்யாத ஆசான், அத்தோடு சோதனைக்காரனையே தடுமாறவைத்த உத்தம ஆசான். அவரே நமது ஆண்டவர்.

“…எல்லாவிதத்திலும் நம்மைப்போல் சோதிக்கப்பட்டும், பாவமில்லாதவராயிருக்கிற பிரதான ஆசாரியரே நமக்கிருக்கிறார்” (எபி.4:15). இப்படியிருக்க, நாம் சோதிக்கப்படும்போது, நமது ஆசான் இன்னார் என்பதை சோதனைக்காரனே அறிந்து நடுங்கும் படிக்கு நாம் சோதனையில் தேறவேண்டாமா? நமது ஆசிரியருக்கு மகிமையைக் கொண்டுவரவேண்டாமா? இப்படிப்படட ஒரு ஆண்டவர் நமக்கிருப்பதனால், “நாம் இரக்கத்தைப் பெறவும், ஏற்ற சமயத்தில் சகாயஞ்செய்யுங் கிருபையை அடையவும், தைரியமாய்க் கிருபாசனத்தண்டையிலே சேரலாமே.” பரீட்சை சொல்லிக்கொண்டு வரும். ஆனால் சோதனை சொல்லிக்கொண்டு வருவதில்லை; சிலசமயம் நாம் நாமாகவே சோதனைக்குள் அகப்பட்டு விடுவதுண்டு என்பதும் உண்மைதான். ஆகையால், நமக்கு முன்னே சோதிக்கப்பட்டு வெற்றிசிறந்தவர் பாதம் அமர்ந்து, அந்தந்த நாளைநாம் வெற்றியின் நாளாய் சந்தித்துக் கர்த்தருக்குள் களிகூருவோமாக.

? இன்றைய சிந்தனைக்கு:

    இன்று நான் முகங்கொடுக்கும் சோதனை என்ன? இதைக் குறித்து என் மனநிலை என்ன? கிறிஸ்துவுக்குள் ஜெயம்பெற்று சோதனைக்காரனை விரட்டி அடிப்பேனா!

? அனுதினமும் தேவனுடன்.

Solverwp- WordPress Theme and Plugin