ஜூலை 3 ஞாயிறு

📖 சத்தியவசனம் – இலங்கை. 🇱🇰

📙 இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி வேத வாசிப்பு : 3:3-16

பின்னானவைகளை மறந்து…

கிறிஸ்து இயேசுவுக்குள் தேவன் அழைத்த பரம அழைப்பின் பந்தயப் பொருளுக்காக இலக்கை நோக்கித் தொடருகிறேன். பிலிப்பியர் 3:14

பந்தயத்தில் வெற்றியை மாத்திரமே இலக்காகக்கொண்டு ஓடுகிறவன், இலக்கை விட்டு தன் பார்வையை முந்திய தோல்விகள் பக்கம் திருப்பி, பயந்து, அல்லது, தான் முதலாவதாக ஓடுவதை உணர்ந்து பெருமையடைந்து பின்னே வருகிறவன் எங்கே வருகிறான் என்று பார்க்க சற்று திரும்பிப் பார்த்தாலும்கூட அவன் தன் வெற்றி இலக்கைத் தவறவிடுவது நிச்சயம். நமது வாழ்வின் வெற்றியும் அப்படித்தான்.

யூத மத வைராக்கியமும், கல்விமானுமாகிய பவுல், முதுநிலை பட்டத்தைப் பெற்றுக்கொள்ள எண்ணாமல், கிறிஸ்துவை அறிகிற அறிவின் மேன்மையை அடைவதும் கிறிஸ்துவைப்போல ஆகுவதும், கிறிஸ்துவுக்குள் இருக்கிறவனாகக் காணப்படுவதுமே தனது ஒரே இலக்கு என்று எழுதுகிறார். கிறிஸ்துவே தனக்கு எல்லாவற்றுக்கும் எல்லாமுமாக இருப்பதை நாடுகிறார். கிறிஸ்துவுக்காய் அளப்பரிய ஊழியத்தைச் செய்த பவுல், அநேக சபைகளை ஸ்தாபித்த பவுல், தன் சுயபெருமையை நாடாமல். தன் வாழ்வின் இலக்காகக் கிறிஸ்துவை மாத்திரமே கொண்டிருந்து, அந்த இலக்கை மாத்திரமே தன் கண்களுக்குள் வைத்திருந்தார். இதற்காகவே தனக்கு மேன்மையாக இருந்த சகலத்தையும் குப்பையாகத் தள்ளிவிட்டார். இந்த ஓட்டத்தில் தனக்குத் தடையாயிருந்த “பின்னானவைகளை” மறக்கவும், தனக்கு முன் வைக்கப்பட்டிருந்த “முன்னானவைகளை” நோக்கி ஓடவும் கவனமாக இருந்தார். அது என்ன பின்னான வைகள்? கிறிஸ்தவர்களுக்குச் செய்த அக்கிரமம், முக்கியமாக ஸ்தேவானின் மரணத்தில் உடன்பட்டிருந்தமை மனதை வருத்தியிருக்கலாம். இன்னும், தன் மேன்நிலைமை அவரை பெருமைகொள்ளச் செய்திருந்த காலங்கள் அவரை இப்போது வருத்தியிருக்கலாம். எதுவாயினும் இப்போது, உடைக்கப்பட்டவராய், பின்னானவைகளை மறந்து தேவன் அழைத்த பரம அழைப்பை மாத்திரமே இலக்காகக்கொண்டு ஓடுகிறார்.

தேவன் தாமே கிருபையாக அழைத்த பரம அழைப்புக்கு எதிரான தடைகள் நமக்கும் வரும். “கிறிஸ்து” என்ற ஒரே இலக்கைவிட்டுத் திசைதிருப்பி, தேவனிடத்திலிருந்து நம்மைப் பிரிக்க, நமது பழைய பாவ வாழ்வை நினைவுபடுத்தி, சோர்வுறப்பண்ணுவான் சத்துரு. அல்லது, கர்த்தருக்காகச் செய்த பணிகளை நினைவுக்குக் கொண்டுவந்து “பெருமை” என்ற வலைக்குள் தந்திரமாக நம்மை சிக்கவைப்பான். நாம் ஒன்றுமில்லை என்று உணர்ந்து, நமக்குள் உடைக்கப்படாதவரை இந்தப் பெருமை நிச்சயம் நம்மை விழுத்திப்போடும். கர்த்தருக்காகச் செய்பவற்றை நமது கணக்கில் வைத்திருப்போமானால் நிச்சயம் இலக்கைத் தவறவிடுவோம். பின்னானவைகளைத் திரும்பிப் பார்த்துப் பெருமை கொள்ளும் பாவத்தை இன்றே உடைத்தெறிந்துவிட்டு, தேவபாதத்தில் நம்மை வெறுமையாக்கி ஒப்புவிப்போமாக.

💫 இன்றைய சிந்தனைக்கு:

பெருமையுள்ளவனை கர்த்தர் எதிர்க்கிறார், கர்த்தருக்காகச் செய்தவற்றைப் பிரபல்யமாக்கி, பெருமையடைகின்ற சோதனையினின்று என்னை நான் விலக்குவேனாக.

📘 அனுதினமும் தேவனுடன்.

8 thoughts on “ஜூலை 3 ஞாயிறு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Solverwp- WordPress Theme and Plugin