📖 சத்தியவசனம் – இலங்கை. 🇱🇰
📙 இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி வேத வாசிப்பு : ஆதியாகமம் 4:5-16
பாவத்தில் விழுவாய்!
நீ நன்மை செய்தால் மேன்மையில்லையோ? நீ நன்மை செய்யாதிருந்தால் பாவம் வாசற்படியில் படுத்திருக்கும். அவன் ஆசை உன்னைப் பற்றியிருக்கும் நீ அவனை ஆண்டுகொள்வாய்… ஆதியாகமம் 4:7
வாழ்க்கையிலே நாம் பிரச்சனைகளை எதிர்நோக்கும்போது, அதைக்குறித்து ஆராய்ந்து பார்ப்பது நல்லது. இந்தப் பிரச்சனை வருவதற்கு நான் எந்தவிதத்திலும் காரணமாய் இருந்திருக்கிறேனா? இப்பிரச்சனை வரவிடாமல் தவிர்த்திருக்கலாமா? இவற்றை ஆராய்ந்து சரிசெய்தால் அது எம்மை இன்னுமொரு பிரச்சனைக்கோ, பாவத்திற்கோ உட்படாமல் இருப்பதற்கு எமக்கு நிச்சயம் உதவிசெய்யும்.
காயீன் ஆபேல் இருவருமே கர்த்தருக்குக் காணிக்கையைக் கொண்டு வந்தனர். இருதயங்களைச் சோதித்தறிகிற கர்த்தர், ஆபேலின் காணிக்கையை அங்கீகரித்தார். இதனால் காயீனின் முகநாடி வேறுபட்டது. அதாவது அவனது உண்மையான மனநிலை வெளிப்பட்டது. அவனுக்கு ஆபேலின் மீது பொறாமையும், கோபமும் வந்தது. அப்போ தும் கர்த்தர் காயீனைத் தள்ளாமல் அவனுடன் பேசுகிறார். “நீ நன்மை செய்தால் மேன்மையில்லையோ! நீ நன்மை செய்யாதிருந்தால் பாவம் வாசற்படியில் படுத்திருக்கும்” என்கிறார். காயீன் தன்னை உணர்ந்து, அடுத்தமுறை தானும் சிந்தித்து, திறமை யானதைக் கர்த்தருக்குக் கொடுப்போம் என்று ஒரு தீர்மானத்தை எடுத்திருக்கலாம். ஆனால் அவனோ அப்படிச் செய்யாமல் ஆபேலின்மீது கோபப்பட்டு, அதன் விளைவாக, ஆபேல் வயல்வெளியில் இருந்த சமயம் அவனைக் கொன்றேபோட்டான்.
தனது காணிக்கையைத் தேவன் அங்கீகரிக்காததற்கு என்ன காரணம் என்பதைக் காயீன் உணர்ந்து தன்னைத் திருத்திக்கொண்டிருப்பானேயாயின் இந்தக் கொலைக்குக் காரணமாயிருந்திருக்கமாட்டான். நாமும் தவறு செய்யும்போது, நின்று யோசித்து உணர்ந்து எம்மைத் திருத்திக்கொண்டால் பாவத்திற்குட்பட மாட்டோம். ஆனால் நாமோ, எமது வாழ்வில் நிதானத்தை இழந்து, கோபப்பட்டு, அவசரப்பட்டு முடிவுகளை எடுப்பதினால், பாவத்துக்குள்ளாவதுண்டு. நாம் ஒரு தவறு செய்யும்போது, அதை உணர்ந்து திருத்திக்கொண்டால் மீண்டும் ஒரு முறை அதைப்போன்ற தவறையோ, அல்லது அதைவிட மோசமான தவறையோ தவிர்த்துக்கொள்ளலாம். தவறு செய்து விட்டு, சூழ்நிலைகளையும், மற்றவர்களையும் குற்றஞ்சாட்டுவதை விடுத்து, நமது பிழையை உணர்ந்துகொள்ளுவோம். காயீன் ஆபேலைக் கொன்று, பாவத்தைச் செய்து தேவனின் தண்டனைக்குள்ளானான். எமக்கு இந்த நிலை வேண்டாம். ஒன்றன் பின் ஒன்றாக பாவத்தைச் சுமக்கவேண்டாம். தவறு செய்த இடத்திலிருந்து உணர்வுடன் எழுந்து திருந்துவோம். தேவனுக்குப் பிரியமாய் வாழுவோம். என் மீறுதல்களை நான் அறிந்திருக்கிறேன், என் பாவம் எப்பொழுதும் எனக்கு முன்பாக நிற்கிறது. சங்கீதம் 51:3
💫 இன்றைய சிந்தனைக்கு:
பாவத்தை மறைக்கிறவன் வாழ்வடையமாட்டான் அதை அறிக்கை செய்து விட்டுவிடுகிறவனோ இரக்கம் பெறுவான். நான் எப்படி?
📘 அனுதினமும் தேவனுடன்.