ஜனவரி 30 திங்கள்

📖 சத்தியவசனம் – இலங்கை. 🇱🇰

📙 இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி வேத வாசிப்பு : மாற்கு 2:1-12

நம்பிய நால்வர்

இயேசு அவர்கள் விசுவாசத்தைக் கண்டு, திமிர்வாதக்காரனை நோக்கி,  மகனே உன் பாவங்கள் உனக்கு மன்னிக்கப்பட்டது என்றார். மாற்கு 2:5

இன்று நாம் வாழும் சமுதாயத்திலும், நம்மைச் சுற்றிலும் கிறிஸ்துவை அறியாதோர் பலர் இருக்கிறார்கள். நாம் பயணிக்கும்போது இயேசு அறியாத பலர் நம்முடன் பிரயாணம் பண்ணுகிறார்கள். இவர்களையெல்லாம் கிறிஸ்துவண்டை கொண்டு வரும் பொறுப்பு யாருடையது?

இங்கே ஒரு திமிர்வாதக்காரன், அவனால் நடக்கமுடியாது. எனவே அவனால் இயேசுவண்டை செல்லமுடியாது. அவனை நான்கு பேர் சுமந்து வருகிறார்கள். அங்கிருந்தஜனக்கூட்டத்தைக் கண்டதும், அங்கேயே அவனை விட்டுவிட்டுச் சென்றிருக்கலாம். ஆனால் அவர்களோ இயேசுவினிடத்தில் எப்படியாகிலும் இவனைக் கொண்டுபோய் சோக்கவேண்டும் என்ற நோக்கத்தில் உறுதியாயிருந்ததால், வாசல் நிறைந்த ஜனக்கூட்டத்தைக் கண்டதும், கூரையைப் பிரித்து அதனூடாக அவனை இயேசுவின் முன்நிலையில் இறக்கினார்கள். அவர்கள் விசுவாசத்தை இயேசு கண்டு, திமிர்வாதக்காரனைக் குணமாக்கினார். அந்த நால்வரின் விசுவாசமும் நம்பிக்கையுமே அந்த திமிர்வாதக் காரனை இயேசுவிடம் கொண்டு வந்தது. திமிர்வாதமாய் இருந்தவன், இயேசுவை நம்பி வந்தானோ இல்லையோ; இந்த நால்வரும் இயேசுவினால் அவனுக்கு விடுதலை கொடுக்கமுடியும் என்பதை நம்பினார்கள். அதனால்தான் சிரமப்பட்டு கூரையைப் பிரித்து அதன் வாயிலாக அவனை இயேசுவுக்கு முன் கொண்டுவந்தார்கள்.

கிறிஸ்துவை அறியாதோரை அவரிடம் கொண்டுவர வேண்டுமானால், இன்று நாமும் பல சிரமங்களை சந்திக்க நேரிடும். ஆனாலும் நம்பிக்கையோடு செயற்பட்டால் அநேகரை அவருக்காய் ஆதாயப்படுத்தலாம். அவர்களுக்காக நம்பிக்கையோடு ஜெபிப்போம், ஜெபத்தோடு செயற்படும்போது நிச்சயம் ஜெயமுண்டு. இயேசு, திமிர் வாதக்காரனை நோக்கி, “மகனே உன் பாவங்கள் உனக்கு மன்னிக்கப்பட்டது” என்றார். அதனால் அவன் சரீரத்தில் மட்டுமல்ல, ஆவியிலும், ஆன்மாவிலும் விடுதலை பெற்றான். இன்று பாவநோயாலே எத்தனைபேர் அவதியுறுகின்றனர். அவர்களை விடுவிப்பது யார்? ஆண்டவரின் கருவிகள் நாமே பாரத்தோடு செயற்பட அழைக்கப்பட்டுள்ளோம்.

பாவதோஷத்தால் மனிதர் முன்பாக வரமுடியாமலும், எதுவும் செய்யமுடியாதவர்களாகவும் அவதியுறுவோர் பலர்! அவர்களை இயேசுவண்டை கொண்டுவர நாம் என்ன முயற்சி எடுக்கிறோம்?  கடைசிக் காலத்தில் வந்து நிற்கிறோம். சுவிசேஷத்தை அறிவிக்க வேண்டியதன் அவசியத்தை உணர்ந்து செயற்படுவோம். சமாதானத்தின் சுவிசேஷத்துக்குரிய ஆயத்தம் என்னும் பாதரட்சையைக் கால்களிலே தொடுத்தவர்களாயும்… எபேசியர் 6:15

💫 இன்றைய சிந்தனைக்கு:

ஆத்துமா ஒன்றும் இரட்சிக்காமல் வெட்கத்தோடே ஆண்டவா, வெறுங்கையனாக உம்மைக் கண்டுகொள்ளல் ஆகுமா? பதில் என்ன?

 

📘 அனுதினமும் தேவனுடன்.

18 thoughts on “ஜனவரி 30 திங்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Solverwp- WordPress Theme and Plugin