📖 சத்தியவசனம் – இலங்கை. 🇱🇰

📙 இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி வேத வாசிப்பு : எரேமியா 36:15-26

கர்த்தரையே நோக்குவோமாக!

…ஆனாலும் கர்த்தர் அவர்களை மறைத்தார். எரேமியா 36:26

யூதாவைக்குறித்து இதுவரை சொன்ன யாவற்றையும் ஒரு புஸ்தகச் சுருளிலே எழுதும்

படி தேவன் எரேமியாவுக்குப் பணித்தார். இதை வாசித்தாவது அவர்கள் மனந்திரும்ப மாட்டார்களா என்பது தேவனுடைய ஏக்கம். அப்படியே எரேமியா பாரூக்கை அழைப்பித்து, அவரைக்கொண்டு எழுதிய அந்த தோற்சுருளை எடுத்துக்கொண்டு கர்த்தருடைய ஆலயத்துக்குள் பிரவேசித்து உபவாச நாளிலே வாசிக்கும்படி சொன்னார். பாரூக்கும் அப்படியே செய்தான். கடைசியில் ராஜாவின் முன் அந்தச் சுருள் வாசிக்கப்பட்டபோது, ராஜாவோ மக்களோ அதற்குப் பயப்படவில்லை. மாறாக, ராஜா கோபங்கொண்டு அந்தச் சுருளை நெருப்பிலே போட்டு எரித்தான். இதனால் ராஜாவுக்கு ஏதாவது தீங்கு நேரிட்டதா? இல்லை. தீங்கு யாருக்கு நேரிட்டது? எரேமியா பாரூக் இருவருக்குமேதான். இது நியாயமற்ற காரியமாக நமக்குத் தோன்றுகிறதல்லவா!

“துன்மார்க்கரின் வாழ்வை நான் கண்டேன். மரணபரியந்தம் அவர்களுக்கு இடுக்கண் இல்லை. அவர்கள் விரும்புவதிலும் அதிகமாக நடந்தேறுகிறது; சுகமாய் இருந்து ஆஸ்திகளைப் பெருக்குகிறார்கள்” என்றெல்லாம் ஆசாப் தன் ஆதங்கத்தை 73ம் சங்கீதத்தில் கொட்டியிருக்கின்றார். இன்றும் நம்மைச் சுற்றிலும் வாழும் தேவபயமற்ற மக்களுடைய செழிப்பான வாழ்வு நம்மையும் இப்படியான மனநிலைக்குள் தள்ளிவிடுகிறது. ஆனால் ஆசாப் இறுதியில், “நான் தேவனுடைய பரிசுத்த ஸ்தலத்துக்குள் பிரவேசித்து, அவர்கள் முடிவைக் கவனித்து உணருமளவும், அது என் பார்வைக்கு விசனமாயிருந்தது. நிச்சயமாகவே, நீர் அவர்களைச் சறுக்கலான இடங்களில் நிறுத்தி, பாழான இடங்களில் விழப்பண்ணுகிறீர். அவர்கள் ஒரு நிமிஷத்தில் எவ்வளவு பாழாய்ப் போகிறார்கள்” (சங்.73:16-19) என்று பாடுகிறார். தேவன் அநீதியுள்ளவரல்லவே!

எரேமியாவைத் தேவன் கைவிட்டாரா? இல்லை. கர்த்தர் அவரை மறைத்துவைத்தார் என்று வாசிக்கிறோம். எந்த அநீதி ஆபத்தை நாம் சந்தித்தாலும், தேவனற்றவர்களின் செழிப்புக்களை காண்பதைத் தவிர்த்து, தேவனிடம் திரும்பி, அவரையே நம்பிக்கையாக பற்றியிருப்போமானால் அவர் நிச்சயமாகவே நம்மைச் சத்துருவுக்கு மறைத்துக் காப்பார். அரசனே எரேமியாவுக்கு எதிரியான போதிலும், எரேமியா தேவனையே நம்பினார். அந்த நம்பிக்கை நமக்கும் வேண்டும். காற்றிலே பறப்பது கோதுமை மணி அல்ல; பதர்தான் பறக்கும். நாம் பதராக இராமல் கோதுமை மணியாக அவரது பாதத்திலிருப்பதே சிறப்பானது. களத்தில் அறுவடையைத் தூற்றி, பதரை அகற்றி, கோதுமை மணியைவேறாக்குவது அதற்காகத்தான். கண்முன்னே நடப்பவை யாவும் அநீதியாகவே தெரிந்தாலும், அந்த அநீதியிலும் கர்த்தர் உயர்ந்தவர் என்பதை நாம் சிந்திக்க வேண்டும். அற்பசொற்ப காரியங்களுக்கெல்லாம் நாம் மனம் சோர்ந்தால், கர்த்தருக்காக பெரிய காரியங்களைச் செய்வது எப்படி?

💫 இன்றைய சிந்தனைக்கு: 

  நமக்கு ஆபத்து நேரிடும்போது, துன்மார்க்கரைப் பார்த்துக் குழப்பமடையாமல், நமது கண்களை தேவனையே நோக்கிப் பார்க்கட்டும்!

📘 அனுதினமும் தேவனுடன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Solverwp- WordPress Theme and Plugin