📖 சத்தியவசனம் – இலங்கை
📙 இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி வேத வாசிப்பு : ஏசா 43:1-3 தானி 1:6-7
பெயர் மாறினாலும்…
நான் அவர்களுக்கு என் ஆலயத்திலும், என் மதில்களுக்குள்ளும் …உத்தம இடத்தையும் கீர்த்தியையும் கொடுப்பேன். ஏசாயா 56:5
இந்த வசனத்தை புதிய மொழிபெயர்ப்பிலே தெளிவாக வாசிக்கலாம். “நான் அவர்களுக்கு ஆலயத்திற்குள்ளும், …மகன்களினதும் மகள்களினதும் பெயர்களைவிடச் சிறந்த …ஒருபோதும் அழிந்துபோகாதிருக்கிற ஒரு நித்திய பெயரையும் அவர்களுக் குக் கொடுப்பேன்” என்பதே. ஒருபோதும் அழியாத நித்திய பெயர் நமக்குண்டு. நட்சத்திரங்களையே பெயரிட்டு அழைக்கிறவர், நீ என்னுடையவன் என்று இஸ்ரவேலை அழைத்தவர் நமது பெயரை மறந்திடுவாரா?
வெளிநாடுகளுக்குச் சென்றவர்கள், அத்தேசத்து மக்களினால் தமது பெயர் இலகுவாகஉச்சரிக்கப்பட வேண்டுமென்று, அல்லது எண்சாஸ்திரப்படி நல்லது நடக்கவேண்டும் என்றும் சிலர் தமது பெயர்களை மாற்றிக்கொள்வதுண்டு. சிலர் தம்மை அடையாளப்படுத்த புனைப்பெயர்களை வைத்துக்கொள்வதுண்டு. அன்றைய எபிரெயருக்கு பெயர்மிகவும் முக்கியம். ஏனெனில் அது அவர்களுடைய குணாதிசயத்தோடு அல்லது வாழ்வோடு சம்மந்தப்பட்டதாயிருந்தது. அவர்களது பெயர்களுக்கு அர்த்தம் இருக்கும். தானியேல் என்றால் “தேவனே என் நியாயாதிபதி”, அனனியா என்பது “யெகோவா உதவி செய்தார்”, மீஷாவேல், “தேவனைப் போன்றவன்”, அசரியா, “தேவன் உதவி செய்வார்”. இப்படியாக இஸ்ரவேலின் தேவனை மகிமைப்படுத்தக்கூடிய அர்த்தம் கொண்ட பெயர்களையே கல்தேயர் மாற்றிவிட்டார்கள். தானியேலுக்கு பெல்தெஷாத்சார், “பேல் இவன் வாழ்வைப் பாதுகாரும்” (பேல் என்பது கல்தேய தெய்வம்), அனனியாவுக்கு சாத்ராக் “அக்கூரின் கட்டளை” (அக்கூர் என்பது சந்திரன் தெய்வம்), மீஷாவேலுக்கு மேஷாக் “கடவுளைப் போன்றவன்”, அசரியாவுக்கு ஆபேத்நேகோ “நோகோவின் அடிமை” (கல்தேயரின் கற்றலின் கடவுள்). இப்படியாக இஸ்ரவேலின் தேவனை அவமதிக்கும் பெயர்கள் அவர்களுக்குச் சூட்டப்பட்டன.
ஜாக்கிரதை! பிள்ளைகளுக்குப் பெயர்கள் வைக்கும்போது கவனமாக வையுங்கள். இந்த நான்குபேரும், கல்தேய தெய்வங்களுக்குரியவர்கள் என்ற அர்த்தத்தில் பெயர்மாற்றப்பட்டன. பெயர் மாற்றப்பட்டதால், தேவன் அவர்களை எந்தப் பெயரினால் அறிந்திருந்தாரோ அந்தப் பெயர் மாறியதா? அவரில் அவர்கள் வைத்திருந்த பக்தி மாறியதா? தேவபிள்ளையே, உலகம் எந்தப் பெயரிலாவது நம்மை அழைக்கட்டும். பைத்தியம் என்று அழைத்தாலும்கூட நம்மை அழைத்தவர், என்றும் அழியாத நாமத்தையே நமக்குத் தந்திருக்கிறார். பெயரை மாற்றி நம்மை நாமே ஏமாற்றுவதால், நம்மைக் குறித்த உண்மைகள் மாறுமா? இல்லை. உலகம் எதையெதையெல்லாம் நம் வாழ்வில் மாற்றினாலும் மாறாத தேவன் நமக்களித்த மாறா கிருபையை யார் மாற்றக்கூடும்!
💫 இன்றைய சிந்தனைக்கு:
உலகத்தோற்றத்தின் முன்னரே தேவன் அறிந்திருக்கிற என் பெயரை, ஜீவபுஸ்தகத்தில் எழுதப்பட்ட என் பெயரை யாராலும் மாற்ற முடியாது!
📘 அனுதினமும் தேவனுடன்.
