📖 சத்தியவசனம் – இலங்கை. 🇱🇰

📙 இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி வேத வாசிப்பு : நீதி 4:1-13

கனம்பண்ணு!

என் மகனே, உன் தகப்பன் கற்பனையைக் காத்துக்கொள், உன் தாயின் போதகத்தைத் தள்ளாதே.நீதிமொழிகள் 6:20

இன்று கணவன் மனைவி உறவுக்கிடையே, “வாடா, போடா” என்ற பேச்சுக்கள் சாதாரணமாகிவிட்ட நிலையில், இதற்கும் மேலாக தங்கள் மாமிமாரை “நாங்கள்

ஏன் “வாடி” என்று அழைக்கமுடியாது” என்று கேட்கிற மருமகள்மாரும் எழும்பி விட்டார்கள். நாகரீகம் என்றும், இணையத்தள நாகரீகம் என்றும் உலகம் எங்கேயோ போய்க்கொண்டிருக்கிறது. இந்த நிலையில், பெற்றோருக்குக் கீழ்ப்படிந்து, பெற்றோரைக் கனப்படுத்தும் பிள்ளைகள் இன்னமும் இருக்கிறார்கள் என்பது மகிழ்ச்சிக்குரிய விடயம். ஆனால், “உங்களுக்கு என்ன தெரியும். இது 21ம் நூற்றாண்டு” என்று பெற்றோரின் வாயை சட்டென அடைத்துவிடும் பிள்ளைளும் அநேகர் உள்ளனர்.

தேவனுக்குப் பயந்தவனும், தகப்பனின் நற்போதனைகளைப் பெற்றவனும், தகப்பன் தாவீதுக்குப் பின்னர் ராஜ்யபாரத்தை ஏற்று, நீதியோடும், நியாயத்தோடும் தன் ஜனத்தை அரசாண்டவனுமாகிய சாலொமோன் ராஜா, இளம் சந்ததிக்குக் கூறிய ஆலோசனை, எந்த காலத்துக்கும் ஏற்றது. “உன்னைப் பெற்ற தகப்பனுக்குச் செவிகொடு; உன் தாய் வயது சென்றவளாகும்போது அவளை அசட்டைபண்ணாதே” (நீதி.23:22). தகப்பன் புத்தியைக் கேட்டு நடந்தவரை, மிகவும் ஆசீர்வதிக்கப்பட்டிருந்த சாலொமோன், அந்தக் கட்டளைகளைப் புறக்கணித்து கர்த்தரைவிட்டபோது, அந்நிய ஸ்திரீகளிடம் விழுந்துவிட்டார். அவர் உணர்வடைந்தபோது எல்லாமே கைமீறிவிட்டி ருந்தது. அதனால்தான் இந்த ஆலோசனை அவர் வாயிலிருந்து புறப்பட்டதோ என்னவோ! கர்த்தர் கொடுத்த பத்துக் கட்டளைகளிலும் வாக்குத்தத்தத்தோடுகூடிய ஒரே கட்டளை, “உன் தேவனாகிய கர்த்தர் உனக்குக் கொடுக்கிற தேசத்திலே உன் நாட்கள் நீடித்திருப்பதற்கு, உன் தகப்பனையும் உன் தாயையும் கனம்பண்ணுவாயாக” என்பதாகும். “குடும்பத்தில் முன்மாதிரியாய் இருக்கவேண்டிய என் தகப்பனார், ஒவ்வொரு நாளும் குடித்து வெறித்து, பணத்தை வீணாக்கி, குடும்ப கௌரவத்தை அழித்துப்போட்ட நிலையிலே, அவரை நான் எப்படிக் கனப்படுத்தமுடியும்?” என்று கேட்டான் ஒரு வாலிபன். நியாயமான கேள்வி! ஆனாலும், அவனைப் போன்றவர்களுக்கு ஒரு பதில் உண்டு. “உன் தகப்பனார் எப்படிப்பட்டவர் என்பதைப் பார்த்துக் கனம்பண்ணாதே. அவரை நேசித்து, கர்த்தருக்குக் கீழ்ப்படிவதிலே கவனமாயிரு.”

நாம் எந்த வயதினராயிருந்தாலும், எந்த நிலையிலிருந்தாலும், பெற்றோருக்குக் கொடுக்கவேண்டிய கனத்தைக் கொடுக்கத் தவறக்கூடாது. ஒருநாளைக்கு அவர்கள் நம்மைவிட்டு தவறிப்போகும்போது, கவலைப்பட்டுப் பலனிராது. அவர்கள் மரித்த பின்னர் மரியாதை செலுத்தி என்ன பலன்?

💫 இன்றைய சிந்தனைக்கு:  

நமது பெற்றோருக்காக நன்றி செலுத்தி, மனதார நேசிப்போமாக. ஒருவேளை வழிதவறி நடக்கிற தகப்பனும் உங்கள் அன்பால் ஈர்க்கப்படலாம் அல்லவா!

📘 அனுதினமும் தேவனுடன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Solverwp- WordPress Theme and Plugin