📖 சத்தியவசனம் – இலங்கை. 🇱🇰
📙 இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி வேத வாசிப்பு : லூக்கா 15:1-7
தொலைந்துபோன ஆடு
இழந்துபோனதைத் தேடவும் இரட்சிக்கவுமே மனுஷகுமாரன் வந்திருக்கிறார். லூக்கா 19:10
“ஒரு காலத்தில் கர்த்தருக்காகப் பணிசெய்துகொண்டிருந்த என் கணவர் சில தீய பழக்கங்களுக்குள் விழுந்துவிட்டார். அவரது நிலையை எண்ணி மிகவும் வேதனைப்படுகிறேன்” இது ஒரு சகோதரியின் கண்ணீர் கதை. ஆம், பொருளாசை, பண ஆசை, பதவி ஆசை, ஆடம்பர வாழ்க்கை, சிற்றின்பங்கள் என்ற முட்களில் சிக்கி, தாம் பெற்ற இரட்சிப்பின் சந்தோஷத்தை இழந்து தவிக்கின்ற அநேகர் உண்டு. அவர்களுக்காக கண்ணீர்விட்டு அழுது ஜெபித்தும், அவர்கள் இன்னும் மனந்திரும்பவில்லையே; இயேசு வண்டை வரவில்லையே என்று மனம் சோர்ந்துபோயிருக்கும் உறவினர்களும் ஏராளம்!
இயேசு சொன்ன இந்த உவமையில் அந்த ஆட்டினை “தொலைந்துபோன ஆடு” என்றா, அல்லது “கண்டுபிடிக்கப்பட்ட ஆடு” என்றா, எப்படிப் பெயரிடுவது? சகல ஆயக்காரரும் பாவிகளும் இயேசுவின் வார்த்தைகளைக் கேட்க அவரிடத்தில் வந்திருந்தனர். இயேசுவோ வார்த்தைகளைப் போதித்ததுடன் நில்;லாமல் அவர்களுடன் சேர்ந்து உணவுண்கிறார். இந்த இரு வகையினரையும் வெறுத்து ஒதுக்கின பரிசேயருக்கு இதுகோபத்தை எழுப்பியது. அப்பொழுதுதான் இயேசு, தாம் உலகுக்கு வந்த நோக்கத்தை மூன்று உவமைகள் மூலமாக விளக்குகிறார். அதில் முதலாவது, தன்னிஷ்டப்படி மந்தையைவிட்டுப் பிரிந்துபோன ஒரு ஆடு; எஜமானுக்கு 99ஆடுகள் இருந்தும், அந்தத் தொலைந்த ஒன்றையே தேடிக் கண்டுபிடித்து, அதைத் தன் தோள்களில் போட்டு வீட்டுக்கு வந்து எல்லோரையும் வரவழைத்து மிகுந்த சந்தோஷமடைகிறான். இது சாதாரண சந்தோஷமல்ல, பாவிகள் மனந்திரும்பும்போது அது பரலோக சந்தோஷம் என்பதையே இயேசு விளக்குகிறார். உலக இச்சைகளுக்குள் தொலைந்துகிடந்த நம்மைத் தேடிக் கண்டுபிடிக்கும்படி தாமே ஒரு மனிதனாக உலகுக்கு வந்து, சேற்றிலே உழன்றுகிடந்த நம்மைத் தூக்கியெடுத்து, சுத்தப்படுத்தி, தமது மந்தையில் சேர்த்துக்கொண்ட நமது நல்ல மேய்ப்பன் இயேசுவுக்கு நாம் என்ன சொல்லி நமது நன்றிகளை வெளிப்படுத்தமுடியும்? “இரட்சிக்கக்கூடாதபடிக்கு கர்த்தருடைய கை குறுகிப்போகவுமில்லை. கேட்கக்கூடாதபடிக்கு அவருடைய செவி மந்தமாகவுமில்லை” (ஏசாயா 59:1). எனவே எமது ஜெபங்களை நாம் ஒருபோதும் நிறுத்திவிடக்கூடாது. பாவத்துக்குள் தொலைந்துபோன நம்மையே மீட்டெடுத்தவர். நமது உறவுகளைக் கைவிடுவாரா? அவர்களைக்குறித்து, நாம் கொண்டுள்ள கரிசனையைவிட அதிக கரிசனை அவருக்குண்டு. நம் ஒவ்வொருவருக்காகவும் தன் உதிரத்தின் இறுதித் துளியையும் சிந்தி மரித்திருக்கிற ஆண்டவர் கரத்தில் சகலத்தையும் விட்டுவிடுவோமாக. அவர் பார்த்துக்கொள்வார். “ஒருவரும் கெட்டுப்போகாமல், எல்லாரும் மனந்திரும்ப வேண்டுமென்று விரும்பி, நம்மேல் நீடிய பொறுமையுள்ளவராயிருக்கிறார்” (2பேதுரு 3:9).
💫 இன்றைய சிந்தனைக்கு:
ஆண்டவர் ஒவ்வொருவருக்காகவுமே இரத்தம் சிந்தினவர்; பொறுமையுடன் தேடுகின்ற அவரது பணியில் நாமும் இணைவோமா!
📘 அனுதினமும் தேவனுடன்.
