📖 சத்தியவசனம் – இலங்கை. 🇱🇰

📙 இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி வேத வாசிப்பு : பிலி. 4:4-9

காத்திரு!

நெடுங்காலமாய்க் காத்திருக்குதல் இருதயத்தை இளைக்கப்பண்ணும், விரும்பினது வரும்போதோ ஜீவவிருட்சம்போல் இருக்கும். நீதி.13:12

வருடத்தில் பாதி கடந்துவிட்டது. “அப்பா, அனுப்புவதாக வாக்குக்கொடுத்த முத்திரை அல்பத்தை இன்னும் அனுப்பவில்லையே. அப்பா மறந்துவிட்டாரோ என்று கவலையாயிருக்கிறாயா?” என்று  மகனிடம் கேட்டாள் தாய். மகன் சிரித்த முகத்தோடு, “அப்பா சொன்னபடியே செய்வார். ஏன் கவலைப்படவேண்டும்? என்று மறுகேள்வி கேட்டான் மகன். அவன் கூறிமுடிப்பதற்கும், வாசலில் கூரியர் ஊழியர் வந்து மணி அடிக்கவும் சரியாக இருந்தது. ஓடிச்சென்ற மகனிடம், ஒரு பார்சலைக் கையளித்தார் அந்த ஊழியர்.அது அப்பா அனுப்பியிருந்த பார்சல். அதற்குள் ஒரு கடிதமும் இருந்தது. அதில், “மகனே, நீ கேட்ட முத்திரை அல்பம் கிடைக்கவில்லை. ஆனால், இது நீ கேட்டதிலும் பார்க்க மிகவும் நல்லதும் பயனுள்ளதுமாயிருக்கிறது. தாமதத்தைப் பொறுத்துக் கொள்ளவும்” என்றிருந்தது.

“பரம தந்தையிடம் ஒரு குழந்தைக்காக ஜெபித்து பல வருடங்கள் உருண்டோடி விட்டது”, “மகளின் திருமணத்திற்காக ஜெபித்தும் இன்னமும் சரிவரவில்லை”, “என் கணவன் குடிப்பழக்கத்திலிருந்து விடுபடவேண்டும் என்று எத்தனை வருடங்களாக ஜெபிக்கிறேன்” “என் குடும்பத்தில் இன்னும் எத்தனை காலம் இந்த வறுமை நிலை?” இப்படியாக பலருடைய தனிப்பட்ட வாழ்வில் பலவித ஏக்கங்கள். இன்றைய நாட்டின் சூழ்நிலை மாறவேண்டும் என்று எத்தனைபேர் ஜெபிக்கிறோம். ஆனால் இன்னமும் சூழ்நிலை நெருக்கமாகிறதே. இந்த நிலையில், “ஒருவேளை கர்த்தர் நமது ஜெபங்களைக் கேட்கவில்லையோ?” என்ற சந்தேகம்கூட வந்துவிடுகிறது.

கர்த்தருக்கு, “ஜெபத்தைக் கேட்கிறவர்” என்று ஒரு நாமம் உண்டு (சங்.65:2). அவர் சகல ஜெபங்களுக்கும் செவிகொடுக்கிறவர். ஆனால் நாம் ஏறெடுக்கும் அனைத்து ஜெபங்களுக்கும் அவர் எப்பொழுதும் உடனடியாக “ஆம்” என்று பதில் கொடுப்பது மில்லை; நாம் விரும்புகிற பதிலைத் தருகிறதுமில்லை. நான் நினைத்தபடியே நடக்க வேண்டுமானால் எதற்குக் கடவுள்? கர்த்தர், சில சமயங்களில் “பொறுத்திரு” என்றும், சில சமயங்களில் “இல்லை” என்றும்கூட பதில் வரலாம். சிலசமயங்களில் அவர் மௌனமாகவும் இருக்கக்கூடும். நாம் செய்யவேண்டியது ஒன்றுதான், நமது விண்ணப்பங்களை விசுவாசத்துடன் ஏறெடுத்துவிட்டு, பதிலைக் கர்த்தரின் சித்தத்துக்கு விட்டுவிடவேண்டும். அவர் நமது பரம தகப்பன்; நமக்கு எது நல்லது எது கெட்டது என்பதை அவர் மாத்திரமே அறிவார். நமது பார்வை மிகவும் குறுகியது; ஆனால் கர்த்தரோ தூரநோக்குடையவர். நமக்கு நன்மையாகவும், தமக்கு மகிமையாகவும் அவர் யாவையும் செய்வார் என்ற நம்பிக்கை நமக்கு அவசியம். ஆகவே, எப்படிப்பட்ட பதில் கிடைத்தாலும் கர்த்தருக்கே மகிமை செலுத்துவோமாக.

💫 இன்றைய சிந்தனைக்கு:

   நாம் கேட்பதிலும் பார்க்க, தாமதித்தாலும், கர்த்தர் நமக்காக வைத்திருப்பது மேன்மையானது என்பதை நான் விசுவாசிக்கிறேனா?

📘 அனுதினமும் தேவனுடன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Solverwp- WordPress Theme and Plugin