📖 சத்தியவசனம் – இலங்கை. 🇱🇰

📙 இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி வேத வாசிப்பு : யோசு 6:1-10

எரிகோ மதிலை விழுத்தியது யார்?

விசுவாசத்தினாலே எரிகோ பட்டணத்தின் மதில்கள் ஏழுநாள் சுற்றிவரப்பட்டு விழுந்தது எபிரெயர் 11:30

பாடசாலை மாணவர்கள் வேத அறிவை எந்தளவுக்குப் பெற்றிருக்கிறார்கள் என்று அறிவதற்காக ஆலயக் குருவானவர் ஒரு வகுப்பறைக்குள் சென்றாராம். “எரிகோ மதிலை விழச்செய்தது யார்” என்று ஒரு மாணவனிடம் கேட்க, அவன் பயத்துடன், “நான் இல்லை” என்றானாம். அதிர்ச்சியடைந்த போதகர் அவனை ஆசிரியரிடம் அழைத்துச் சென்று நடந்ததைக் கூறினார். அதற்கு ஆசிரியர், “அவன் மிக நல்ல பையன். அவன் அப்படிச் செய்யமாட்டான்” என்று பதிலளித்தாராம். ஆசிரியரின் பதிலால் குழப்பமடைந்த போதகர் அதிபரிடம் சென்றாராம். அதிபரோ, “ஏதோ நடந்தது நடந்துவிட்டது, அதை திரும்பக் கட்ட எவ்வளவு செலவாகும் என்று சொல்லுங்கள். கட்டித்தர ஏற்பாடு செய்கிறேன்” என்று கூறினாராம். இது கற்பனைதான் என்றாலும், இந்த எரிகோ மதிலின் விழுகை இன்றும் பலர் மனதில் கேள்வியாகவும், தர்க்கத்துக் குரியதாகவுமே இருக்கிறது. மோசே மரித்துப்போக, கானான் பயணத்தின் பொறுப்பை ஏற்றுக்கொண்ட யோசுவாவின் தலைமையில் யோர்தான் நதியை அற்புதமாகக் கடந்த இஸ்ரவேலர், அடுத்தாற்போல் எரிகோவைத் தாண்டவேண்டியிருந்தது. இந்த எரிகோவின் வாசல் அடைபட்டிருந்தது; அதன் மதில் மிகவும் பலம் வாய்ந்ததாகவும் இருந்தது. ஆனாலும் இந்த மதிலைத் தகர்த்தே இஸ்ரவேல் மக்கள் பட்டணத்தைக் கைப்பற்றவேண்டும். இந்த பலத்த எரிகோ மதிலைத் தகர்ப்பதற்கு கர்த்தரே, யோசுவாவிடம் யுத்த யுக்தியை ஏற்படுத்திக்கொடுக்கிறார். இதற்கு ஆயுதங்களோ, பீரங்கிக் குண்டுகளோ, யானைகளோ அல்ல; அனைவரும் பட்டணைத்தைச் சூழ ஒருதரம் சுற்றி வரவேண்டும். இப்படி ஆறு நாட்கள் செய்யவேண்டும். ஏழு ஆசாரியர்கள் உடன்படிக் கைப்பெட்டிக்கு முன்பாக ஏழு கொம்பு எக்காளங்களைப் பிடித்துக்கொண்டு போக வேண்டும். ஏழாம் நாளில் பட்டணத்தை ஏழதரம் சுற்றிவர, ஆசாரியர் எக்காளங்களை ஊதவேண்டும். அப்போது, ஜனங்கள் மகா ஆரவாரத்தோடு ஆர்ப்பரிக்கவேண்டும். அப்பொழுது பட்டணத்தின் அலங்கம் இடிந்துவிழும். இதுவே கர்த்தர் கொடுத்த யுக்தி. இப்படியும் ஒரு யுத்தமா? ஆம், இது சரித்திர உண்மை. கர்த்தர் சொன்னபடியே ஜனங்கள் செய்தபோது, அலங்கம் இடிந்துவிழுந்தது (யோசு.6:20).

இது பெருங்கற்களால் கட்டப்பட்டதும், மனிதரின் பெலத்தால் தகர்க்கமுடியாததுமான மகா விஸ்தாரணமான அலங்கம். இதுவே தேவபிள்ளைகளின் ஆரவாரத் தொனிக்கு முன்பாக ஆடிப்போய் இடிந்துவிழுந்ததென்றால், நமது வாழ்க்கைப் பாதையில் நமக்கு முன்னே எழுந்து நின்று பயமுறுத்துகின்ற தடைகளைக் கண்டு நாம் ஏன் கலங்க வேண்டும்? கர்த்தர் சொன்னதை சொன்னபடியே விசுவாசித்து அவர்கள் நடந்தார்கள்.  இப்போது நாம் சிந்திப்போம். நம்மைப் பயமுறுத்துகின்ற தடைகள் தகர்க்கப்பட நாம் செய்ய வேண்டியது என்ன?

💫 இன்றைய சிந்தனைக்கு:

   கர்த்தருடைய வார்த்தையும். அவருடைய பிரசன்னமும் நம்முடன் இருக்கிறதா?

📘 அனுதினமும் தேவனுடன்.

One thought on “ஒக்டோபர் 10 திங்கள்”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Solverwp- WordPress Theme and Plugin