📖 சத்தியவசனம் – இலங்கை
📙 இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி வேத வாசிப்பு : 1சாமு 15:1-12
இரண்டாவது தருணம்
அவன் என்னைவிட்டுத் திரும்பி, என் வார்த்தைகளை நிறைவேற்றாமற் போனான் என்றார். 1சாமு 15:11
நமக்குரிய பொறுப்பைச் செய்ய தாமதித்தாலோ, மறுத்தாலோ, நமது சுயவிருப்பத்தைக் கலந்து சற்று மாற்றம் செய்தாலோ, மீண்டும் அதைச் சரிவர நிறைவேற்ற இன்னுமொரு தருணம் கிடைப்பது என்பது மிக மிக அரிதாகும். ஆக, கீழ்ப்படிவில், நமது சுயதெரிவு கலக்குமானால் அதுவும் கீழ்ப்படியாமைதான்.
சவுல் ஒருவகையில் சிலாக்கியம் பெற்றவன் எனலாம். ஏற்கனவே சூழ்நிலைக்குப் பயந்து அவசரப்பட்டு, தேவனுடைய வார்த்தையை மீறி பலிசெலுத்தி, தனது ராஜ்யபாரம் நிலைக்காது என்ற விளைவை தனது ஆளுகையின் இரண்டாம் வருடத்திலேயே சந்தித்தும், அவனுக்கு இரண்டாவது தருணம் கிடைக்கிறது. அதாவது, அவன் போய் அமலேக்கியரை முற்றாக அழித்துப்போடவேண்டும். சவுல் மறுக்கவுமில்லை, தாமதிக்கவுமில்லை. கர்த்தருடைய கட்டளைக்குக் கீழ்ப்படிந்து உடனே புறப்பட்டுப் போய், அமலேக்கியரை மடங்கடித்தான்; ஆனால், முற்றிலும் அழித்துப்போடாமல், அமலேக்கின் ராஜாவையும், ஆடுமாடுகளில் முதல்தரமானவைகளையும், இரண்டாந் தரமானவைகளையும், ஆட்டுக்குட்டிகளையும், நலமான யாவையும் தப்பவைத்து, அற்பமானவைகளையும் உதவாதவைகளையும் அழித்துப்போட்டான். இதைக் கர்த்தர் கண்டார்; “நான் சவுலை ராஜாவாக்கினது எனக்கு மனஸ்தாபமாயிருக்கிறது; அவன் என்னைவிட்டுத் திரும்பி, என் வார்த்தைகளை நிறைவேற்றாமற் போனான்” என்றார் கர்த்தர். இரண்டாம் தருணத்தையும் இழந்தான் சவுல்.
தேவன், தாம் தவறு செய்ததற்காகவா துக்கப்பட்டார்? இல்லை! சகலத்தையும் அறிந்திருக்கிற தேவன் தவறு செய்வாரா? (15:29). சவுல் தமது வார்த்தையை மீறியதால் ஏற்பட்ட துக்கத்தையே வெளிப்படுத்துகிறார். சவுல் வார்த்தைக்குக் கீழ்ப்படிந்து புறப்பட்டுப் போனது உண்மை; ஆனால், தனது சுயதெரிவையும் அந்தக் கீழ்ப்படிவில் கலந்துவிட்டான். கீழ்ப்படிய மறுப்பதும் சரி, பாதி கீழ்ப்படிந்து பாதியில் சுயத்தைக் கலப்பதும் சரி, எல்லாமே கீழ்ப்படியாமைதான். இங்கே கர்த்தர் சவுலைக்குறித்த தமது மனநோக்கை மாற்றிவிட்டார். சவுலின் இருதயமோ தேவனைவிட்டு சுயத்தைச் சார்ந்துவிட்டதுதான் பரிதாபம்.
வேதவாக்கியம் சத்தியம், அதைக் கூட்டவோ குறைக்கவோ யாருக்கும் அதிகாரம் இல்லை. மறுபுறத்தில், மனிதனால் கீழ்ப்படியக்கூடாத எதையும் தேவன் நம்மிடம் எதிர்பார்ப்பவருமல்ல. கீழ்ப்படிய முடியாதபடி நமது மாம்சம் நமக்கெதிராகப் போராடிக் கொண்டுதான் இருக்கிறது. நமக்கு இன்னுமொரு தருணம் கிடைக்கும் என்று எதிர்பார்க்க முடியாது. தேவ வார்த்தை எதைச் சொல்லுகிறதோ, அதை அப்படியே செய்வதில் இன்று நமக்குள்ள பிரச்சனைதான் என்ன?
💫 இன்றைய சிந்தனைக்கு:
தேவனுடைய வார்த்தையை சற்று மாற்றிப்போட்ட, அல்லது தள்ளிப்போட்ட சந்தர்ப்பங்கள் உண்டா? அதற்கான என்ன விளைவுகளை நான் அனுபவித்தேன்?
📘 அனுதினமும் தேவனுடன்.
