ஆகஸ்ட் 3 வியாழன்

📖 சத்தியவசனம் – இலங்கை

📙 இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி வேத வாசிப்பு : 1சாமு 8:7-22

என்னைத்தான் தள்ளினார்கள்!

…நான் அவர்களை ஆளாதபடிக்கு, என்னைத்தான் தள்ளினார்கள். 1சாமுவேல் 8:7

பிள்ளைகளுக்காக தங்களை ஒறுத்து, அவர்களின் படிப்பு, எதிர்காலம் என்று முடிந்த ஆயத்தங்களையெல்லாம் நேர்த்தியாகச் செய்வார்கள் பெற்றோரில் சிலர். அந்தஅன்பை உணராமல், உலக கவர்ச்சியால் இழுவுண்டு, வேறு நபரை நம்பி, பெற்றோரை எதிர்த்து அல்லது வீட்டைவிட்டே பிள்ளை சென்றுவிட்டால் பெற்றோரின் மனநிலை எப்படியிருக்கும்? இப்பிள்ளைகள் தங்கள் பெற்றோரின் தலைமைத்துவத்தை, நல்லதிட்டங்களை உதாசீனம் செய்து எதிர்க்கிறார்கள்; மாத்திரமல்ல, தமது தெரிவு தவறு என்று உணரும்போது காலம் கடந்து விட்டிருக்கும். இன்று அநேக குடும்பங்களில் நிலைமை இதுதான்.

“கர்த்தராகிய நான் பரிசுத்தராயிருக்கிறபடியினாலே நீங்களும் எனக்கேற்ற பரிசுத்தவான்களாயிருப்பீர்களாக; நீங்கள் என்னுடையவர்களாயிருக்கும்படிக்கு, உங்களை மற்ற ஜனங்களை விட்டுப் பிரித்தெடுத்தேன்” (லேவி.20:26). மற்ற ஜனக்கூட்டத்தாரைவிட தனித்துவமானவர்களாக, பரிசுத்த ஜாதியாக வாழ அழைக்கப்பட்ட இவர்களே இஸ்ரவேலர். இவர்கள் தங்களுக்கென்று ஒரு ராஜாவைக் கேட்டது ஆச்சரியமல்ல; ஏனெனில், கேட்பார்கள் என்பதை கர்த்தரே முன்னறிவித்துவிட்டார் (உபா.17:14-20). ஆனால்,அவர்கள் கேட்டதன் நோக்கம்தான் தவறு. “சகல ஜாதிகளையும்போல” இதைத்தான் கர்த்தர் விரும்பவில்லை. இவர்கள் தமக்னெ;று ஒரு ராஜாவைக் கொண்டிருந்தால், தங்கள் ராஜாவும், வழிகாட்டியுமாகிய தேவனை மறந்துவிடுவார்கள்; மாத்திரமல்ல, முக்கியமாக தேவனுடைய அநாதி திட்டத்தை முற்றிலும் முறியடித்துவிடுவார்கள். மேலும், இவர்கள் தங்களுக்கு ஒரு தலைவன், சட்டதிட்டங்கள், ஒரு இராணுவம் என்று மனித ஆட்சியை விரும்பினார்கள். ஒரு புதிய அரசாங்க அமைப்பு ஒரு மாற்றத்தைக் கொண்டுவரும் என்று எண்ணினார்கள்.

ஆனால் முதலாவது, பிரச்சனை ராஜா அல்ல, தங்கள் கீழ்ப்படியாமைதான் பிரச்சனை என்பதை இவர்கள் உணரவில்லை. இதனை எந்தவொரு புதிய அரசாங்கத்தாலும் சரிசெய்ய முடியாது. அடுத்தது, தேவனே தேசத்தை அவர்களுக்குக் கொடுத்தவர், அவரால் மாத்திரமே செழிப்படையச் செய்யமுடியும் என்பதையும் அவர்கள் மறந்துவிட்டார்கள். மாற்றங்கள் சிறந்தது; ஆனால் அவை நம்மில் தேவன் கொண்டுள்ள அநாதி திட்டத்தைக் குலைத்துப்போடுவதாக இருக்குமானால், அதுவே நமக்குக் கேடாகிவிடும். இன்று நமது வாழ்விலுள்ள தோல்விகள் விரக்திகளுக்குக் காரணம் என்ன? உலக அரசாங்கத்துக்கும், குடும்ப அமைப்புக்கும் நாம் கட்டுப்பட்டவர்களாக இருந்தாலும், நமது ராஜா தேவன் ஒருவரே. நமது உள்ளான பிரச்சனையை அவர் மாத்திரமே அறிவார். ஆகவே, நாம் தேவனையே ஆராதிக்கிறவர்களாக தேவனின் ராஜ்யத்தின் பிள்ளைகளாக மாத்திரமே வாழ நம்மைத் தருவோமாக.

💫 இன்றைய சிந்தனைக்கு:  

நாம் கர்த்தரைத் தள்ளவில்லை என்று எண்ணினாலும், அவர் நம்மைவிட்டு தூரமாய்ப்போகும் தருணங்களும் உண்டாகும்; இதைக் குறித்து சிந்திப்போமாக.

📘 அனுதினமும் தேவனுடன்.

5 thoughts on “ஆகஸ்ட் 3 வியாழன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Solverwp- WordPress Theme and Plugin