ஆகஸ்ட் 1 செவ்வாய்

📖 சத்தியவசனம் – இலங்கை

📙 இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி வேத வாசிப்பு : உபா 33:1-5 26-29

ராஜாதி ராஜா ஒருவரே!

யெஷ_ரனுடைய தேவனைப்போல ஒருவரும் இல்லை. அவர் உனக்குச் சகாயமாய் …ஏறிவருகிறார். உபாகமம் 33:26

இன்று என் ராஜா யார்? தேனீக்களுக்கு ஒரு ராணி உண்டு; எறும்புக் கூட்டத்துக்கு ஒரு தலைவன் உண்டு; காட்டுக்கு ராஜா சிங்கம் என்பர். மொத்தத்தில் எந்தவொரு கூட்டத்தாருக்கும், ஒவ்வொரு குடும்பத்துக்கும் ஒரு தலைவன் அவசியம். இல்லையானால் அவரவர் கட்டுப்பாடின்றி திசைகெட்டுப் போய்விடுவர். ஆனால், உலகின் ராஜ பதவி உட்பட எல்லா ஆளுகைக்கும் மேலான ஒரு ஆளுகை இருக்கிறது என்பதை தலைமையில் இருப்பவர்கள் மறக்கக்கூடாது. உலக ஆளுகைகள் இல்லையானால், குடும்பம் உட்பட, எல்லாமே சரிந்துவிடும். ஆக, தலைமைத்துவத்தில் உள்ளவர்கள் அந்த மேலானவரினால் ஏற்படுத்தப்பட்டவரும், அவருக்கு உட்பட்டவருமாயிருப்பது அவசியம்.

வேதாகம காலத்தின் ஆரம்பத்திலிருந்தே ராஜாக்கள் இருந்தார்கள். ஆதி.14:18ல் சாலேமின் ராஜாவைக் காண்கிறோம். ஆக, இஸ்ரவேலில் ராஜாக்கள் அரசாளுவதற்குமுன்பே ராஜாக்கள் இருந்துள்ளனர். இஸ்ரவேலை எகிப்தின் ராஜா அடிமைப்படுத்தி னான். ஆனால், கர்த்தருக்கென்று தெரிந்தெடுக்கப்பட்ட இஸ்ரவேலைப் பொறுத்தளவில், “ஜனங்களின் தலைவரும், இஸ்ரவேலின் கோத்திரங்களும் கூட்டங்கூடினபோது அவர் (கர்த்தர்) யெஷ_ரனுக்கு ராஜாவாயிருந்தார்” என்று வாசிக்கிறோம். மோசே இஸ்ரவேலை ஆசீர்வதித்தபோது, “அநாதி தேவனே உனக்கு அடைக்கலம்” என்றும், “உனக்குச் சகாயம் செய்யும் கேடகமும், உனக்கு மகிமை பொருந்திய பட்டயமும் அவரே” என்றும் கூறினார். அதன்படி கர்த்தர் இஸ்ரவேலைத் தமக்கென்று தெரிந்துகொண்டு அவர்களுடைய யுத்தங்கள் யாவையும் நடத்தி வந்தார். சிவந்த சமுத்திரத்தில் இரவு முழுவதும் வேலை செய்தவரும் அவர் ஒருவரே! அவரே ராஜாதி ராஜா!

இன்று நமக்கும் அவர் ஒருவரே ராஜாதி ராஜாவும், கர்த்தாதி கர்த்தருமானவர். ஆனால், உலகிற்குத் தம்மை வெளிப்படுத்துவதற்குத் தாமே தமக்கென்று தெரிந்து கொண்ட இஸ்ரவேலின் மூலமாக தேவன் தம்மை ஆளுகையின் தேவனாக உலகிற்கு வெளிப்படுத்தினார். இந்த தேவனை, இந்த ராஜாவைத் தெய்வமாகக் கொண்டுள்ள நாம் எவ்வளவு பாக்கியசாலிகள்! உலகில் “தேவனாலேயன்றி ஒருஅதிகாரமும் இல்லை” (ரோ.13:1). “அவரே நித்தியானந்தமுள்ள ஏக சக்ராதிபதியும், ராஜாதி ராஜாவும், கர்த்தாதி கர்த்தாவும்” (1தீமோ.6:16). இவர் ஒருவரே ராஜாதி ராஜா; மற்ற எல்லா அதிகாரங்களும் இவருக்குக் கீழேதான் உள்ளது. இந்த ராஜாவை, இவருடைய ராஜ்யத்தைத் தேடி, இவருடைய கட்டளைகளுக்குக் கீழ்ப்படிந்து நடக்கிறவர்களே ராஜ்யத்தின் புத்திரராவார். நாம் இந்த ராஜாவைப் பிரதிபலிக்கின்ற இவருடைய ராஜ்யத்தின் புத்திரராக நாம் இருக்கிறோமா?

💫 இன்றைய சிந்தனைக்கு:  

முதலாவது தேவ ராஜ்யத்தையும் அவருடைய நீதியையும் தேடுங்கள் (மத்.6:33) என்று இயேசு சொன்னதன் அர்த்தமென்ன?

📘 அனுதினமும் தேவனுடன்.

3 thoughts on “ஆகஸ்ட் 1 செவ்வாய்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Solverwp- WordPress Theme and Plugin