? சத்தியவசனம் – இலங்கை. ??

? இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி வேத வாசிப்பு : நீதிமொழிகள் 23:1-8

கட்டுப்படுத்தப்படவேண்டிய மனது!

அவன் இருதயத்தின் நினைவு எப்படியோ, அப்படியே அவன் இருக்கிறான்… நீதிமொழிகள் 23:7

“மனிதர் காணும் உன் செயல்கள் அல்ல; உன் நினைவுகளே உன் வாழ்வை நிர்ணயிக்கிறது” என்று ஒருவர் மனித வாழ்வைக்குறித்து அழகாக எழுதியுள்ளார். அழைக்கப்பட்ட ஒரு விருந்துக்கு பரிசுப்பொருளோடு சென்றிருந்தோம். அன்பான வரவேற்பு. வகை வகையான உணவுகள். உட்கார்ந்த நான், கைகழுவ இடம்தேடி உள்ளே செல்ல முயன் றேன். பேச்சுக் குரல் கேட்டது. ஒட்டுக்கேட்பது அழகல்ல. ஆனால், அவர்கள் பேசியது செவிகளில் விழுந்தது. “முழுவதையும் கொண்டுபோய் மேசையில் வைக்காதே. வந்தவர்கள் விழுங்கிவிட்டுப் போனால் நாங்கள் எதைச் சாப்பிடுவது?” எனக்குத் தூக்கி வாரிப்போட்டது. இப்படிப்பட்ட மனதுடனா இவர்கள் நம்மை விருந்துக்கு அழைத்தார்கள்! அதன்பின் எப்படித்தான் கைகழுவுவது?

இந்தச் சம்பவத்தை வைத்து, விருந்துக்கு அழைத்தவர்களைக்குறித்து குறை எண்ணா மல் என்னைக்குறித்தே சிந்திக்க முயன்றேன். வெளிப்பார்வைக்கு நல்லவராக, தாராள குணாளராக, சீரிய குணசீலராகக்கூட தோற்றமளிக்கலாம். ஆனால், நமது உண்மையான குணநலனை நம்மால் எவ்வளவு நாட்களுக்குத்தான் மறைக்கமுடியும்? ஏனெனில், அதுதான் உண்மை. “ஒரு மனிதன் எவற்றைத் தனது சிந்தனையில் கொண்டிருக்கிறானோ அவைகளே அவனுடைய நடத்தைக்கு வழிகாட்டியாக இருக்கின்றன” என்று ஒருவர் எழுதியுள்ளது எவ்வளவு உண்மை! நமது இருதயம் அசுத்த எண்ணங்களால் நிறைந்தி ருந்தால், ஒருநாள் நமது நடத்தையில், வாய்ப்பேச்சில் அது வெளிவரத்தான் செய்யும். அதனால்தான் ஞானத்தில் சிறந்து விளங்கிய சாலொமோன் ராஜா, “எல்லாக் காவலோ டும் உன் வாயைக் காத்துக்கொள்” என்று எழுதாமல், “…உன் இருதயத்தைக் காத்துக் கொள்” என்று எழுதியுள்ளார். இருதயம் என்றால் என்ன, நமது மனது என்றால் என்ன, அதனைக் காத்துக்கொள்வது மிக மிக முக்கியமல்லவா!

தேவபிள்ளையே, நமக்கு எதிரி பிறர் அல்ல; நமக்குளேதான் நம்முடைய எதிரி இருக்கி றான். திருக்குள்ள இருதயம், கட்டுப்பாடற்ற மனது இவைதான் நமது முதல் எதிரிகள். ஒரு கிறிஸ்தவன் தனது சிந்தனை வாழ்வைக் கட்டுப்படுத்துவதே அவனுக்கிருக்கிற கட்டுப்பாடுகளில் முதன்மையாய் இருக்கிறது. நமது மனதை நாம் எவ்வாறு பயன்படுத்துகிறோமோ அவ்வாறே நமது குணமும் வாழ்வும் திசைதிரும்பும். தகாத சிந்தனைகளால் மனது நிரம்புமானால், தகாத வாழ்வே வெளிப்படும்; தேவனுடைய வார்த்தைகளால் இருதயம் நிரம்புமானால், அன்பின் வாழ்வே வெளிப்படும். ஆகவே, தேவ வார்த்தை களால், இயேசுவைக்குறித்த நினைவுகளால் நமது மனதை, நினைவை நிரப்புவோமாக. நாம் எப்போதும் நற்பண்பு நிறைந்தவர்களாக வாழ அதுவே வழிசெய்யும்.

? இன்றைய சிந்தனைக்கு:  

என் மனதை, மனதின் நினைவுகளைக் கட்டுப்படுத்தக்கூடிய ஒருவர் இயேசுவே என்று உணர்ந்திருக்கிறேனா?

? அனுதினமும் தேவனுடன்.

Solverwp- WordPress Theme and Plugin