? சத்தியவசனம் – இலங்கை. ??

? இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி வேத வாசிப்பு: லூக்கா 11:9-13

கேளுங்கள் கொடுக்கப்படும்!

…பரம பிதாவானவர் தம்மிடத்தில் வேண்டிக்கொள்ளு கிறவர்களுக்குப் பரிசுத்த ஆவியைக் கொடுப்பது அதிக நிச்சயம் அல்லவா… லூக்கா 11:13

“அப்பா, உங்களிடம் என்ன கேட்டாலும் தருவேன் என்று சொன்னீர்கள். இப்போது கேட்கட்டுமா” என்று சின்ன மகன் அப்பாவிடம் கேட்க, அவரும் சம்மதித்தார். “ஒரு ஐஸ்கிரீம் வாங்கித் தாங்கப்பா” என்றான் மகன். அப்பாவுக்குச் சிரிப்பு வந்தது. “மகன், நீ இதை அம்மாவிடம் கேட்டிருந்தாலும் வாங்கித் தந்திருப்பாள். உனக்கு நான் அப்பா, பெரிதாகக் கேளடா” என்று தட்டிக்கொடுத்தார் அப்பா. மகனும் சளைத்துப்போக வில்லை, “அப்பா, எனக்கு” உங்களைப்போல பெரிய டாக்டர் ஆகவேண்டும் என்றான். அன்புடன் கட்டியணைத்த தகப்பன், “நீ படி, அது உன் வேலை. மிகுதியை நான் பார்த்துக்கொள்வேன்” என்று வாக்களித்தார்.

“கேளுங்கள் கொடுக்கப்படும்” இதைத் தவறாகப் புரிந்துகொண்டு எதற்காகவும் ஜெபிக் கலாம், கர்த்தர் தருவார் என்று எண்ணக்கூடாது. லூக்கா, சீஷருக்கு மாதிரி ஜெபத்தைக் கற்றுக்கொடுத்த பின்னர், ஒரு நண்பன் தன் நண்பனுக்காகப் பரிந்து மன்றாடிய ஒரு உதாரணத்தைக் கூறிவிட்டு, “மேலும் நான் உங்களுக்குச் சொல்லுகிறதாவது: கேளுங்கள், அப்பொழுது உங்களுக்குக் கொடுக்கப்படும். தேடுங்கள், அப்பொழுது கண்டடைவீர்கள்; தட்டுங்கள், அப்பொழுது உங்களுக்குத் திறக்கப்படும். ஏனென்றால், கேட்கிறவன் எவனும் பெற்றுக்கொள்ளுகிறான்; தேடுகிறவன் கண்டடைகிறான்; தட்டுகிறவனுக்குத் திறக்கப்படும்” என்றார் இயேசு.

மத்தேயு இதை எழுதியபோது, “கேட்கிறவன் எவனும் பெற்றுக்கொள்கிறான்” என்றும், தொடர்ந்து, “பரலோகத்திலிருக்கிற உங்கள் பிதா தம்மிடத்தில் வேண்டிக்கொள்ளுகிறவர்களுக்கு நன்மையானவைகளைக் கொடுப்பது அதிக நிச்சயம் அல்லவா” என்கி றார். அந்த நன்மையானது என்ன? இந்த நன்மை என்று சொல்லைப் பயன்படுத்திக் கொண்டு நாம் தேவனோடு ஜெபத்தில் வீணுக்குப் போராடுகிறோமா. தேவைகளுக் காக ஜெபிப்பது தவறல்ல. சில தேவைகளுக்காக நாமே உழைக்கலாமே. ஆனால், பரம தகப்பனிடம் நாம் மேலானவைகளைக் கேட்கலாமே. இதை லூக்கா தெளிவுபடுத்தியுள்ளார். “பரம பிதாவானவர் தம்மிடத்தில் வேண்டிக்கொள்கிறவர்களுக்குப் பரிசுத்த ஆவியைக் கொடுப்பது அதிக நிச்சயம் அல்லவா” என்கிறார். ஆக, நாம் கேட்டுப் பெற்றுக்கொள்ள வேண்டிய அதி உன்னத நன்மை பரிசுத்த ஆவியானவரின் நிறை வும் வழிநடத்தலுமேயாகும். உலக விடயங்களை யாரும் தரலாம்; ஆனால் நித்தியம் வரைக்கும் நம்மை வழிநடத்தக்கூடிய பரிசுத்தாவியானவரைக் கர்த்தரைத் தவிர யாரும் தரமுடியாது. ஆகவே, நாம் எதற்காக ஜெபிக்கிறோம் என்பதில் ஜாக்கிரதை யாய் இருப்போம். மேலானவைகளை நாடுவோமாக. பரிசுத்த ஆவியானவர் நம்முடன் இருப்பாரானால், அதுவே போதுமானது.

? இன்றைய சிந்தனைக்கு:  

என் ஜெபங்களில் நான் கேட்பவை என்ன? மேலானவைகளை நாடும்போது, கர்த்தர் பூமிக்குரியவைகளையும் பார்த்துக்கொள்வார் என்பதை என்னால் நம்பமுடியுமா?

? அனுதினமும் தேவனுடன்.

Solverwp- WordPress Theme and Plugin