? சத்தியவசனம் – இலங்கை. ??

? இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி:  யோவான் 15:1-12

அவரில் நிலைத்திரு!

என்னில் நிலைத்திருங்கள் நானும் உங்களிலும் நிலைத்திருப்பேன். …என்னில் நிலைத்திராவிட்டால் கனிகொடுக்கமாட்டீர்கள். யோவான் 15:4

நமது பிள்ளைகள் குழந்தைகளாய் இருக்கும்போது எல்லாவற்றையும் பார்த்துப் பார்த்துச் செய்கின்ற நாம், அவர்கள் வளர்ந்த பின்பு, ‘நீ இதைச் செய், இப்படி நட, இவற்றை இனி நீதான் பொறுப்பாகச் செய்யவேண்டும்.’ என்று பொறுப்புக்களை அவர்களுக்குக் கொடுத்து, அவர்கள் சுயாதீனமாக இயங்குவதற்கு வழியமைத்துக் கொடுப்போம். அவர்கள் நாளைக்கு நம்மைவிட்டுத் தனியாக வாழவேண்டியவர்கள் என்று காரணம் காட்டி நம்மை நாமே சமாதானமும் செய்துகொள்வோம். ஆனால், ஆண்டவரோ எத்தனை வருடங்கள் சென்றாலும், நீ என்னோடேயே இரு, என்னிலேயே நிலைத்திரு என்கிறார். இது ஏன் என்று நீங்கள் சிந்தித்திருக்கிறீர்களா?

இயேசு ஒரு திராட்சச்செடியைக் காட்டி, இதுபோல தாமே செடி என்றும், நாம் கொடிகள் என்றும் விளக்குகிறார். ஒரு கொடி, செடியைவிட்டுப் பிரிந்தால் அது எப்படி உலர்ந்து அழிந்துபோகுமோ, அதுபோலவே நாமும் தம்மில் நிலைத்திராமற்போனால் அழிந்து போவோம் என்று விளக்குகிறார். இயேசு இவ்வுலகில் வாழ்ந்தபோது, எப்போதும் பிதாவோடு தொடர்புடையவராக, பிதாவில் நிலைத்திருந்தார். பிதாவின் சித்தத்தைச் செய்வதே தனது ஒரே நோக்காகக் கொண்டிருந்தார். இறுதிவரை அந்த ஒரே நோக்கத்துக்காகவே செயற்பட்டார். அதில் வெற்றியும் கண்டார். அவர் தோற்றுப்போய் விட்டார் என்று இந்த உலகம் நினைத்தது. ஆனால் அவர் வெற்றிவேந்தனாய், சாவை யும் வென்று உயிரோடே எழுந்து பிதாவின் வலதுபாரிசத்தில் இன்றும் வெற்றியோடு அமர்ந்துள்ளார். இதைத்தான் ஆண்டவர் நம்மிடத்திலும் எதிர்பார்க்கிறார். நாம் அவரில் நிலைத்திருந்து, பிசாசானவனையும் இந்த உலகத்தையும் வெற்றிகொண்ட வர்களாய், அவருடைய பிள்ளைகளாய் என்றைக்கும் அவரோடேகூட வாழும்படிக்கு அழைக்கப்பட்டுள்ளோம். இந்த உலகில் இருக்கும்வரைக்கும் நாம் அவரோடு ஐக்கியப்பட்டவர்களாய், அவரில் நிலைத்திருந்து, அவருடைய வார்த்தையில் நிலைத்திருப்பவர்களாய் வாழவேண்டும். அவரை விட்டுவிலகினால், எறியுண்டு அக்கினியில் சுட்டெரிக்கப்படக் கூடியவர்களாவோம்.

நாம் அவரைவிட்டு, அவரது வார்த்தைகளைவிட்டு விலகியிருந்தால், அவரில் நிலைத்திருப்பதற்கு முக்கியத்துவம் கொடாதிருந்தால், இன்றே தேவனை நோக்கித் திரும்புவோம். இந்தக் காலங்களிலும், என்றென்றைக்கும் தேவனில் நிலைத்திருக்கும் படிக்கு எமது வாழ்வை ஒப்புக்கொடுப்போம். நாம் அவரோடே ஐக்கியப்பட்டவர்களென்று சொல்லியும் இருளிலே நடக்கிறவர்களாயிருந்தால் பொய் சொல்லுகிற வர்களாயிருப்போம். 1யோவான் 1:6. சத்தியத்தை உடையவர்களாக கிறிஸ்துவில் கனிகொடுப்பவர்களாக அவரில் நிலைத்திருங்கள்.

? இன்றைய சிந்தனைக்கு:

என்னில் வெளிப்படுகிற கனியைக்கொண்டு கிறிஸ்துவில் எனது நிலைத்திருத்தல் வெளிப்படும். இதைக் குறித்து என் சிந்தனை என்ன?

? அனுதினமும் தேவனுடன்.

Solverwp- WordPress Theme and Plugin