? சத்தியவசனம் – இலங்கை. ??

? இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி வேத வாசிப்பு: சங்கீதம் 34:6-16

குறைவிலும் நிறைவானவர்!

சிங்கக்குட்டிகள் தாழ்ச்சியடைந்து பட்டினியாயிருக்கும் கர்த்தரைத் தேடுகிறவர்களுக்கோ ஒரு நன்மையும் குறைவுபடாது. சங்கீதம் 34:10

ஜோர்ஜ் முல்லர் அவர்களின் வாழ்க்கைக் குறிப்புகள் மிகவும் ஆச்சரியமானவைகள். ஏறத்தாழ இரண்டாயிரம் அனாதைக் குழந்தைகளை வளர்த்துப் பராமரித்தவர் இவர். இதற்காக யாருடைய உதவியையும் அவர் நாடியதில்லை. “விசுவாசம்” ஒன்றே அவரது உற்ற துணையாயிருந்தது. ஒவ்வொரு தேவைக்கும் தன் முழங்கால்களை முடக்கி, கண்களை ஏறெடுத்து மேல் நோக்கிப் பார்க்க அவர் தன்னைப் பழக்கப்படுத்தியிருந்தார். ஒருநாள் குழந்தைகளின் காலை உணவுக்கு அந்த இல்லத்தில் ஒன்றுமே இருக்க வில்லை. அங்கே வேலை செய்பவர்கள் வந்து முல்லர் ஐயாவிடம் முறையிட்டனர். அவரோ எதுவித பதட்டமுன்றி, மேஜையை ஆயத்தம் செய்யும்படி கூறிவிட்டுத் தனது அறைக்குள் சென்று தாழிட்டுக்கொண்டார். முல்லர் ஐயாவின் கூற்று பயித்தியக்காரத் தனமாகத் தெரிந்தபோதும், வெறுமையான கோப்பைகளை மேஜை மேலே வைத்து விட்டுத் திகைத்து நின்றனர் ஊழியர்கள். சாப்பாட்டு நேரம் வரவும் வாசலில் ஒரு வண்டி வந்து நிற்கவும் சரியாக இருந்தது. விற்பனைக்காகப் பால்சாலையை நோக்கிப்போய்க் கொண்டிருந்த லொறியொன்று பழுதடைந்து விட்டதாகவும், பால் கெட்டுவிடுமாகையால் அருகிலிருக்கும் இவ் இல்லத்திலே பாலைக் கொடுத்துவிட்டுப்போக வந்ததாகவும் வந்தவர்கள் கூறினார்கள். அதேநேரத்தில் ஒரு பாண் பேக்கரியிலிருந்து பாணும் கொண்டுவந்தார்கள். ஊழியர்கள் திகைத்து நின்றனர். பிள்ளைகள் உண்டுமகிழ முல்லர் ஐயாவோ வழமையான அமைதியோடு தேவனுக்கு நன்றி செலுத்தினார்.

ராஜாவாக அபிஷேகம் பெற்றிருந்தும், தாவீது ராஜாவினால் அரியணையில் அமரமுடிய வில்லை. போதாதற்கு சவுல் ராஜாவின் கொலைவெறிக்கு அஞ்சி, காடு மேடு குகை என தன் உயிரைக் காப்பதற்கு ஓடிக்கொண்டே இருந்தார். அப்படிப்பட்ட சந்தர்ப்பத்தில், சிங்கக்குட்டிகள்தான் பட்டினியாய் கிடந்தாலும்கூட, கர்த்தரை நம்புகிறவன் ஒருபோதும் வெட்கமடையான் என்று தாவீதினால் பாடமுடிந்தது என்றால், அவர் அதனை நிச்சயமாகவே அனுபவித்துக் கண்டிருக்கிறார் என்பது விளங்குகிறது. காட்டு ராஜாவாகிய சிங்கம் தன் குட்டி பட்டினியாயிருக்கப் பார்த்து நிற்குமா? தன் இரையை முழுமையாக உண்டுமுடித்த ஒரு சிங்கம் பல நாட்கள் உணவின்றி இருக்குமாம். ஆம், இப்படிப்பட்ட சிங்கமும், அதன் குட்டியும்கூட பட்டினியாயிருக்கும் சந்தர்ப்பமும் ஏற்படலாம், ஆனால் தேவனுடைய பிள்ளைகளுக்கு உணவு மாத்திரமல்ல. எந்த நன்மையுமே குறைவு படாது என்று தாவீது பாடுகிறார். இது தாவீதின் அனுபவம். இந்த அனுபவம் இன்று நம்முடையதாகட்டும். கடந்துவந்த நாட்களைத் திரும்பிப் பார்த்தால் போதும். நமது குறைவுகளிலெல்லாம் கர்த்தர் எப்படியெல்லாம் போதுமானவராய் இருந்தார் என்பதைப் புரிந்துகொண்டாலே. இன்று நாம் முகங்கொடுக்கும் பிரச்சனைகள் இலகுவாகிவிடும்.

? இன்றைய சிந்தனைக்கு:

சரீரரீதியாகவும், ஆவிக்குரிய ரீதியிலும் குறைவுபட்டிருந்த வேளைகளில், கர்த்தர் எப்படி எனக்குப் போதுமானவராய் இருந்தார் என்பதைச் சிந்தித்துப் பார்ப்பேனாக.

? அனுதினமும் தேவனுடன்.

Solverwp- WordPress Theme and Plugin